இலக்கியச் சோலை

img

தமிழ்ஒளியை முன்வைத்துக் கடித உரையாடல்

கடித இலக்கியப் படைப்பாளி தி.க.சி.அவர்கள் தமிழ்ஒளியை முன்வைத்து செ. து. சஞ்சீவி அவர்களுடன் நிகழ்த்திய கடித உரையாடல்  கீழே தரப்பட்டுளது.

அருமைத் தோழர் சஞ்சீவி அவர்களுக்கு , 
வணக்கம். 
தங்களைச் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆயின;  நலம்தானே? நான் ஓரளவு நலம்; கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நெல்லையில் நிரந்தரமாக வசித்து வருகிறேன்... 
நான் இப்போது கடுமையான இதய நோயாளி; வயது 73 ஆகிறது. அறுவை சிகிச்சைக்கு வழியில்லை என்பதால், மருந்து மாத்திரைகளுடன் என் இறுதி நாட்களை எண்ணி வருகிறேன்... வீட்டுக்குள்தான் நடமாட்டம்; வெளியூர்களுக்குச் செல்ல உடல்நிலை இடம் தரவில்லை... என்னால் இயன்றவரை படித்துக்கொண்டும் சிறிதளவு எழுதிக்கொண்டும் இருக்கிறேன்...
செப்டம்பர் 15 முதல், ‘புதிய பார்வை’ மாதமிருமுறை இதழில் ‘மனக்குகை ஓவியங்கள்’ எனும் தலைப்பில், பாரதிதாசன் பற்றியும், அவரது பரம்பரை பற்றியும், மிக முக்கியமாகக் கவிஞர் தமிழ்ஒளி பற்றியும் எழுதி வருகிறேன்; இதுவரை 4 சிறிய கட்டுரைகள் வந்துள்ளன; அவற்றைத் தாங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
தமிழ்ஒளியின்  வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பற்றிய ஆய்வில் இப்போது ஈடுபட்டுள்ளேன்; ஆய்வு வெற்றி பெற, தங்கள் உதவியும் ஒத்துழைப்பும் தேவை.
அருள்கூர்ந்து தமிழ்ஒளியின் பிறப்பு, மறைவு, முக்கியமான வாழ்க்கை நிகழ்ச்சிகள் இவை பற்றிய தகவல்களை விரைவில் எனக்கு எழுதியனுப்புங்கள்.  கட்டுரை எழுத, இவை மிக அவசியம். 
தாங்கள் வெளியிட்டுள்ள தமிழ்ஒளி நூல்களின் பட்டியல் தேவை. 
‘மாதவி காவியம்’ இதுவரை நான் படித்ததில்லை;  அருள்கூர்ந்து ஒரு பிரதி அனுப்புங்கள்; என் ஆய்வுக்கு மிகவும் பயன்படும்.
தமிழ்ஒளியின் பெயரைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அழியாமல் பொறிப்பதற்குத் தாங்கள் செய்துள்ள அரும்பணிக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள். 
தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்......
என்றும் அன்புடன்  - தி.க.சி.(13.11.97 )

பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய எங்கள் அருமைத் தோழர் சஞ்சீவி அவர்களுக்கு, 
வணக்கம்.  நேற்று தங்கள் 20.11.97 கடிதமும், தங்கள் அன்பளிப்பான இரு நூல்களும் பெற்றேன்; மிக்க மகிழ்ச்சி; நன்றி. 20.11.97 ‘தினமணி’யில் கவிஞரைப் பற்றிய தங்கள் செய்தியையும் படித்தேன்; தங்கள் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு.
கடந்த 32 ஆண்டுகளாகத் தமிழ்ஒளியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவரைச் சரியான முறையில் மக்களிடம் அறிமுகப்படுத்த இடதுசாரி இயக்கமும்,பகுத்தறிவு இயக்கமும், தமிழ் - தமிழர் இயக்கமும் தவறி விட்டன என்பதை உணர்ந்து,  செப்டம்பர் 15 முதல், ‘புதிய பார்வை’ யில் (மாதம் இருமுறை )  பாவேந்தர் பரம்பரை பற்றியும், அதன் மணிமுடியாக விளங்கும் தமிழ்ஒளி பற்றியும் எழுதி வருகிறேன்.
...... ...... ....... ...... ...... ..... 

எனக்கு வயது 73; தொ.மு.சி. ரகுநாதனுக்கு வயது 75;  வல்லிக்கண்ணனுக்கு வயது 77; இந்த வயதிலும் நாங்கள் பகுத்தறிவு, பொதுவுடைமை,  மனிதநேயம்,  மானுட விடுதலை முதலிய கொள்கைகளை உறுதியுடன் ஆதரித்தே வருகிறோம். 
அதாவது தமிழ்ஒளியின் உயிருக்கு உயிரான கொள்கைகளை! 
நீங்களும் இதே கொள்கை வழியில் - இந்த 69 வயதில் உறுதியுடன் நிற்பது குறித்துப் பெருமைப்படுகிறோம்.  கண்பார்வைக் குறைவு , மூட்டு வலி , இவற்றைப் போக்க முடியாவிட்டாலும்,  குறைப்பதற்கு இப்போது நவீன மருத்துவ வசதிகள் உள்ளன . அவற்றை  உடனே பயன்படுத்துமாறு வேண்டுகிறேன்..... தாங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்வீர்கள்;  தமிழ்ஒளியின் புகழ் பரப்புவீர்கள் ;  மனச்சோர்வு வேண்டாம் ; கலை இலக்கியத்தில் முற்போக்குக் கருத்துடைய நாம் மேன்மேலும் சகிப்புத்தன்மையுடன், ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதே என் வேண்டுகோள். 
 என்றும் அன்புடன் தி க சி

அருமைத் தோழர் சஞ்சீவி அவர்களுக்கு, 
வணக்கம். தங்கள் 31.12.97 மனம்திறந்த கடிதம் கிடைத்தது;  மிக்க மகிழ்ச்சி. 
என் கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு மறுப்பாகத் தாங்கள் எழுதியுள்ளவற்றை உடனே ‘புதிய பார்வை’க்கு ஒரு கடிதமாகத் தயவுசெய்து எழுதிக்கொடுங்கள்; பாவை நிச்சயம் வெளியிடுவார்.
தவறுகள் எங்கிருந்தாலும், யார் செய்தாலும், திருத்தப்படவேண்டும்  தோழரே.....
என்னைப் பொறுத்தவரையில் 1950 - 1951 காலகட்டத்தில் என்னுடன் கிட்டத்தட்ட ஓராண்டு வாழ்ந்த கம்யூனிஸ்டுத் தோழர் தமிழ்ஒளி பற்றியே நான் அறிவேன்; அந்தப் புரட்சிக் கவிஞனை தமிழுலகம் பெரும்பாலும் மறந்துவிட்டது; அவரை இன்றைய தலைமுறை வாசகனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்; அவர் பாரதிதாசனின் புரட்சி அம்சங்களை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றார் என்பதை அறிமுகப்படுத்த வேண்டும்; இதுவே என் நோக்கம்.
1952-ம் ஆண்டுக்கு மார்ச்சுக்குப் பிறகு, அவர் மரணம் வரையிலும், நான் தமிழ்ஒளியைச் சந்திக்கவே இல்லை;  அவர் காதல் தோல்வியினால் மன நோய் ஏற்பட்டு உடுத்திய ஆடையுடனும்,  தாடியுடனும், தி. நகரில் திரிந்து
கொண்டிருந்தார் என்று கவிஞர் ஜீவபாரதி ஒரு நூலில் எழுதி உள்ளதாக அண்மையில் படித்தேன்; மிகவும் வருந்தினேன். 
இது உண்மையா,  இல்லையா,  என்பதை நீங்கள்தாம் கூறவேண்டும்;  உண்மை
இல்லையென்றால் மறுப்பும் எழுத வேண்டும் . ...
அவர் “ஒரு ரிக்ஷா தொழிலாளியின் மகன்”என்றும், தாழ்த்தப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், ( தலித் ) என்றும் ஒரு தகவல்;
எனக்குத் தெரிந்த தகவல்களை எழுதுகிறேன்; அவை தவறு என்றால்,  நீங்கள் தாராளமாக,  உடனே மறுக்கலாம்; மிகவும் வரவேற்கிறேன்;  தமிழ்ஒளியின் வாழ்க்கை வரலாறு பற்றிய முழு உண்மைகளை வெளியிடலாம்; அதைத் தாங்கள்தான் இன்று செய்ய முடியும்; ‘புதிய பார்வை’ க்கு உடனே ஒரு கட்டுரை எழுதுங்கள்... என்னைப் பொறுத்தவரையில் ஒரு எழுத்தாளனின் சாதி,
மதம்,  குலம், கோத்திரம் இவைபற்றிக்  கவலையில்லை; வால்மீகி, வியாசர்,
காளிதாசன், சங்கப் புலவர்கள்,  ஒளவையார், கம்பர்,  திருவள்ளுவர்,  இளங்கோ
மற்றும் பல இதிகாசப் படைப்பாளிகள் என்ன குலம்? என்ன சாதி?  என்ன மதம்?...
எனக்குத் தெரியாது; அது பற்றிய உண்மை வரலாறு நம்மிடம் இல்லை ....
ஒரு புரட்சிக் கவிஞன், பாரதிதாசன் பரம்பரையில் வந்தவன், அதை முன்னெடுத்துச் சென்றவன் என்ற முறையிலேயே தமிழ்ஒளி மீது எனக்கு அக்கறை;  இன்றைய மரபுக்கவிதை தமிழ்ஒளிப் பாதையில், புரட்சிப் பாதையில்
செல்ல வேண்டும் என்பதே நான் வலியுறுத்த விரும்பும் செய்தி . 
“சாதி மதங்களைப் பாரோம்; உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின், வேதிய ராயினும் ஒன்றே; அன்றி, வேறு குலத்தின
ராயினும் ஒன்றே” என்னும் மகாகவி பாரதியின் கொள்கையே  என் கொள்கை;
இதை நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன். 
தமிழ்ஒளி, விந்தன், ஜெயகாந்தன்  இவர்கள் உறவு,  ஒத்துழைப்பு, ‘மனிதன்’ இதழில் இவர்களது செயல்பாடுகள்,  இவை பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால், ‘புதிய பார்வை’ வெளியிடும். 
எனக்கு வரலாற்று உண்மைகள் மிக முக்கியம்;  வீரவணக்கம் அல்ல ! 
தோழமையுடன் - தி.க.சி.

;