இலக்கியச் சோலை

img

மூச்சுக் காற்று நிற்கலாம் மூட்டிய நெருப்பு அணையுமா? மயிலைபாலு

முற்போக்கில் ஆரம்பித்து வாழ்க்கை முடியும்போது பிற்போக்கில் அல்லது திருத்தல்வாதத்தில் மூழ்கி மண்ணாகிப்போனவர்களை நமட்டுச்சிரிப்போடு காலம் உள்வாங்கி செமித்துவிடுகிறது. பிற்போக்குத்தனத்தில் தொடங்கி பரிணாம வளர்ச்சியில் முற்போக்குத் தளத்தில் நடைபோட்டு வாழ்வை நிறைவு செய்பவர்களைக் காலம் கைநீட்டி வரவேற்று இடம்கொடுத்து அமரச்செய்கிறது. அதேசமயம் முற்போக்கு விதையிலிருந்து முற்போக்கு விளைச்சலாகி வாழ்க்கையின் இறுதியும் முற்போக்காக இருந்தால் காலம் அவர்களைக் கைகூப்பித் தொழுது வரவேற்கும்; மறைவுக்குப் பின்னும் வாழவைக்கும்.  இறுதியாகக் கூறப்பட்ட நிலைக்கு மிகவும் பொருத்தமான ஆளுமையாக வாழ்ந்து மறைந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்து கர்நாடகத்தில் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர். கர்நாடக மொழியிலேயே நாடகம், திரைப்படம் போன்ற படைப்புகளைத் தந்தவர்.  கிரிஷ் கர்னாடின் தந்தையே  முற்போக்காளர் என்பதை அவரது வாழ்க்கை நிகழ்வு காட்டுகிறது. ராவ்சாஹேப் கர்னாட் ஒரு மருத்துவர். இவரிடம் செவிலியராகப் பணிபரிந்தவர் கிருஷ்ணாபாய் மான்கீக்கரா. இருவரும் பணிஏற்றத்தாழ்வு கருதாமல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள் என்று கற்பனை செய்வது இயல்பு. அதுதான் இல்லை. கிருஷ்ணாபாய் ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயாகி, இளம் வயதிலேயே கணவரை இழந்தவர். தற்காத்து தன்குழந்தையை யும் பாதுகாக்க அவர் வாழ்க்கைப் போராட்டம் நடத்தினார். அவரது போர்க்குணம் மிக்க அரப்பணிப்பு வாழ்க்கை மருத்துவர் கர்னாடைக் கவர்ந்தது.

அந்த அபிமானமே காதலாக மலர்ந்தது.  ஆனால் ஒருபெண் மறுமணம் செய்துகொள்வது அவ்வளவு எளிதல்ல அக்காலத்தில். அது மிகவும் புரட்சிகரமானது. அதுவும் ஒரு குழந்தைக்குத் தாயானபின். ஆனால் அது நடந்தது. ஐந்து ஆண்டுகளுக்குப்பின். எவ்வளவு மன உளைச்சல்; எவ்வளவு ஏக்கம்; இந்தச் சமூகத்தின் மீதான கோபம் எல்லாம் கலந்தி ருக்கும். இறுதியில் ஆர்ய சமாஜத்தின் உதவியுடன் அந்தப் புரட்சிகரத் திருமணம் நடந்தது.   இதற்குப்பின் கர்னாட் - கிருஷ்ணாபாய் தம்பதியருக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளில் ஒருவர்தான் கிரிஷ் கர்னாட்.  அதுவும் சாதாரண பிறப்பல்ல. சிலிர்க்கவைக்கும் அதன் சிறப்பை அவரே நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.  “எனது  தாய் கிருஷ்ணாபாய் இரண்டுக்குப்பிறகு  வேண்டாம் என்ற முடிவோடு மூன்றாவதாக சுமந்த என்  கருவைக் கலைத்து விட நினைத்து மருத்துவமனைக்குச் சென்றாராம். அரைநாள் காத்திருந்தும் மருத்துவர் வராததால் மன உளைச்சலோடும் வெறுப்போடும் வீடு திரும்பியிருக்கிறார். அன்றைக்குத் தப்பிப் பிழைத்தவன்தான் - பிறந்தவன்தான் நான் என்று அம்மா எனக்கு சொன்னார். நான் இல்லாத இந்த உலகத்தை எண்ணிப்பார்த்து வியந்தேன்.”  கிருஷ்ணாபாய் கருக்கலைப்பு முயற்சியைக் கைவிட்ட தால்தான் கிரிஷ் நமக்குக் கிடைத்தார் . அதுவும் மிகச்சிறந்த முற்போக்குப் படைப்பாளியாக. நாடக, திரைத்துறை ஆளுமை யாகக் கிடைத்தார்.  கிரிஷ் கர்னாட். திருமணமும் கூட தந்தையைப் போலவே காதல் திருமணமாக அமைந்தது.  அவர் சென்னையில் உள்ள ஆகஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அச்சுக்கூடத்தில் தனது எதிர்காலத் துணையாகவிருக்கும் சரஸ்வதி கணபதியை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்திக்கிறார்.  இவரது தாய் நர்கீஸ் முகாசேத் பார்சி இனத்தவர் .தந்தை கொடவா சமூகத்தைச் சேர்ந்த கொடந்தேரா கணபதி.

கிரிஷ் கர்னாட் - சரஸ்வதி கணபதியின்  முதல் சந்திப்பே மனப்பிணைப்பை  ஏற்படுத்துகிறது.  இருந்தாலும் 10 ஆண்டுகள் கழித்து  42வது வயதில்தான்  திருமணம் செய்துகொண்டார்.  இறுதிமூச்சு நிற்கும்வரை இந்துத்துவா சக்திகளை எதிர்த்தவர் ; சனாதனத்தைச் சாடியவர் ; சகபடைப்பாளிகளுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதனைத் தனக்கு இழைக்கப்பட்டதுபோல் எண்ணி எதிர்த்து நின்றவர். கோரேகான் சம்பவ நிகழ்வை நினைவுகூர்ந்த முற்போக்காளர்களை , சமூகச் செயற்பாட்டாளர்களை அர்பன் ( நகர்ப்புர ) நக்சல்கள் என்று பாசிச பாஜக அரசு முத்திரை குத்தி கைது செய்தது . இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் கிரிஷ் கர்னாட். அதோடு மட்டுமல்ல கர்நாடகாவில் சங்பரிவாரக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷின்  முதலாவது ஆண்டு  நினைவு நிகழ்ச்சியில்  கிரிஷ் கர்னாட் கலந்து கொண்டார். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம்  இருந்த நிலையில் மூக்கில் ஆக்சிஜன் குழாயைப் பொருத்தியபடி நிகழ்வில்  அமர்ந்தி ருந்தார்.  கடைசி மூச்சு இருக்கும் வரை அநீதிகளை எதிர்த்துப்  போராட வேண்டும் என்ற உத்வேகம் தான் அதற்குக் காரணம் . அந்த நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கும்போது “மீ டூ அர்பன் நக்சல்” நான் கூட அர்பன் நக்சல் தான் என்று வாசகம் எழுதப்பட்ட அட்டையை கழுத்தில் தொங்க விட்டிருந்தார்.  இந்த நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பேசிய அவர் “புனேயிலிருந்து விசாரணை நடத்துகிறார்கள் தில்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கிறார்கள். இது மிகக் கொடுமை. இந்தச் சூழலில் நானும்கூட அர்பன் நக்சல்தான். கொலைப்பட்டியலில் ஒருவனாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்.”  இந்த நிகழ்ச்சிக்குப்பின்  அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. யாரால் தெரியுமா?  கௌரி லங்கேஷைப்  படுகொலை செய்த கும்பலுக்கு வழக்கறிஞராக ஆஜராகும் அம்ருதேஷ்  என்பவன்தான் வழக்கைத்  தொடுத்தான். அதனை எதிர்கொண்டு முடிப்பதற்குள் அவரது வாழ்க்கை முடிந்து போனதுதான் சோகம்.  எந்த விஷயத்திலும் முற்போக்கு,  இடதுசாரி சிந்தனை ; அநீதிக்கு எதிரான உறுதிமிக்க போராட்டம் ; ரௌத்திரம் பழகி அதிலேயே காத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை ஆகியவற்றுக்கு சொந்தக்காரர் கிரிஷ் கர்னாட் .

;