இலக்கியச் சோலை

img

இஸ்லாமிய பெண் மனதை சொற்களால் நெய்தவர் -மணிமாறன்

மரணம் தன் கொடிய நாவினைச் சுழற்றி அலை கிறது நம் நிலமெங்கும். கிரிஷ்கர்னாட், கவிஞர் முகில், செயற்பாட்டாளன் தோழர் அசோக், எழுத்தாளன் ரோஜா குமார் என மரணம் நம்மை நிலைகுலையச் செய்கிறது. மரணமே நிறுத்தி க்கொள் உன் குரூரத்தை என உர த்துக் கத்த வேண்டும் போல் இருக்கிறது.மேலூர்க்காரர்களுக்கு பழக்கடை மைதீன் பாயாகவும் நமக்கு ரோஜா குமாராகவும் அறிமுகமாகியிருந்த எழுத்தாளன் இன்று இல்லை.பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் ‘வாங்க தோழர் அப்புறம் இப்ப யார் தோழர் புதுசா எழுதுறா’ எனும் குரலை இனி கேட்க முடியாது.  ஆனாலும் காலத்தில் கரைந்திருக்கும் அவரின் கதை மனிதர்களின் சொற்களின் வழி நம்மோடு நித்தமும் பேசுவார்.எத்தனை ஆபூர்வக் கதைகளை எழுதிய கை அது.மொசக்குட்டி,உள்வீட்டிலிருந்து நிலா முற்றம் வரை எனும் அவருடைய கதைத் தொகுப்புகள் தமிழ்ச் சிறுகதைகளின் தனிப் பெரும் அடையாளமாக என்றும் நிலைத்திருப்பவை. எளிய இஸ்லாமியக் குடும்பங்களின் உளவியலை  தன் கதைகளின் வழி கண்டறிந்து சொன்னவர் ரோஜாகுமார்.நேற்று கல்யாணம் இன்று பொருள் தேடி வளைகுடா நாட்டிற்குப் பயணம்.இனி எப்போது வருவான் எனக் காத்திருக்க வேண்டும் அவள்.தனித்து வீட்டிற்குள் உறைந்திருக்கும் இஸ்லாமியப் பெண் மனதின் சொற்களால் நெய்யப்பட்டதே அவரின் கதைகள்.அறையெங்கும் சிதறிக் கிடக்கும் கண்ணாடி வளையல்களுக்கு மட்டும் தான் தெரியும் அவளின் கோபம்.சுவரில் அப்பியிருக்கும் மருதாணியில் நெளிகிற ரேகைகளில் பதுங்கிக் கிடக்கும் அவளின் கோபத்தையும் ஆற்றாமையையும் இனி  அவரைப் போல் யார் எழுதுவார்கள். எழுதுங்கள் தோழர்களே என அவர் விட்டுச் சென்றிருக்கும் கதைகளை வசப்படுத்து வோம். எழுதத் துவங்கிய நாட்களில் இருந்து அவர் நேசித்துப் பயணித்த த.மு.எ.க.ச. எனும் எளிய படகினில் கதைக் காரர்கள் காத்திருக்கிறார்கள். அவரின் கதைச் சொற்களை கைக் கொள்ள. இனியான நாட்களில் அவர்கள் எழுதிச் செல்லும் கதைக ளின் சொற்களுக்குள் ரோஜா குமார் நிலை பெற்று இருப்பார். 

;