இலக்கியச் சோலை

img

கானமழை பொழிந்த முகில்

முகில் என்றால் சின்னப் பல்வரிசை சிரிப்பு; வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கும் பாங்கு; முதல் சந்திப்பிலேயே மனதில் இடம்பிடிக்கும் வசீகரம் இவற்றின் இணைவு என்று பொருள். தாளகதியைக் கைகளில் அசைத்தால் தப்புகள் தானாகவே ஒலிக்கும். நாட்டார் பாடல்கள் தட்டை யானவை அல்ல; அவற்றில் ஆயிரம் நளினங்கள் இருக்கின்றன என்பதை ஏற்ற இறக்கக் குரலின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். ‘வழுக்குப் பாறையிலே உழுந்த காயவச்சி’ என்று குரலெடுத்து வேகம் ஏறிக்கொண்டே போகும்போது ஆடாத கால்களும் அடவுகட்டி ஆடும்.  இத்தனைக் கலைவித்தைகளின் மூல ஊற்று அவரது தந்தைதான். கூத்துக்கலை ஞராக, பாடகராக, இசைவாணராகத் திகழ்ந்த தந்தையின் அருகிருந்து தன்னை யும் வளர்த்துக் கொண்டவர் முகில்.  தனது திறமையை, ஆற்றலை அடுத்தவர்களுக்குக் கொடையாகத் தந்தவர்.  திருவண்ணா மலையில் நடைபெற்ற தமுஎகச - வின் மாநில மாநாடு என்று நினைக்கிறேன்..... இளைய வர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக மாநிலக்குழுவிலிருந்து தாமாக முன்வந்து விடுவித்துக்கொண்டவர். ஆனாலும் இயக்கத்துடனான தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து பராமரித்து வந்தவர்.

 எழுத்தாக்கங்களில் தனது எண்ணங்களைப் பதிவு செய்துவைக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் முகில். ஆனால் தனக்குத் தந்தையாகவும் ஆசானாகவும் விளங்கிய சடையமுத்து வாத்தியாருக்கு அந்த வாய்ப்பு இல்லை. செவிவழி கேட்டதை மனதில் பதித்து தேவைப்படும்போது வாய்மொழி மூலம் உலகுக்கு அவர் வழங்கினார். இந்த நினைவு களைக் குறுந்தகட்டில் பதிவு செய்தார் முகில். மகன் தந்தைக்காற்றும் நன்றியாக இதனைக் கொள்ளலாம்.  ஆழமான கருத்துள்ள படைப்புகள் படிப்ப வர் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டான எழுத்துக்கள் முகிலுடையவை. இதற்கு சாட்சி சொல்கிறார் முனைவர் கே.பார்த்திபராஜா.   “பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் தான் அவரது ‘ஞானம் புதுசு ‘ நாவல் படித்தேன்.  என்னை இடதுசாரி இயக்கத்துக்குள் இழுத்து வந்த நூல் அது. பெரியாரைப் படித்து நாத்திகனாக மட்டுமே இருந்த நான் 12 ஆம் வகுப்பின் இறுதியில் இடதுசாரி  அமைப்பின் உறுப்பினராக,  மாணவர் சங்கச் செயற்பாட்டாளராக உருவாக அந்நூலே உந்துதல்”.  இதனைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தோழரிடம் சொன்னேன் . “அப்படியா...... அப்படியா....” என்று வியப்படைந்தார். 

இசைப் பாடல்கள் கூத்துப் பாடல்கள் என என்னில் அவர் மீதான  வசீகரம் கூடியிருந்தது .

“ காலம் மாறி போச்சுதுங்க
ஆண்டை மார்களே -  உங்க
வாலைக்  கொஞ்சம் ஆட்டாதீங்க
ஆண்டைமார்களே ........ 
பறையன் செருப்புப் போட்டுவந்தா
பஞ்சாயத்து வைக்கிறீங்க -  எங்க
பறைச்சி கொஞ்சம் அழகா
            இருந்தா
ஆண்டைமார்களே  - உங்க
பல்லைக் கொஞ்சம் காட்டுறீங்க
ஆண்டைமார்களே........

காலில் சலங்கை கட்டிக் கூத்தாடும் தனது தந்தை சடைய முத்து வாத்தியாரின் பாடலைப் பாடுவார் முகில். அந்த சுரீர்க்குரல் காதில் இன்னமும் தங்கியிருக்கிறது.       “ஒய்யாரக் கொண்டை போட்டு ...... குரலில் மாயம் காட்டும் கலைஞன். “ராமைய்யாவின் குடிசை” நாடகம் கீழவெண்மணித் தழலின் அனல் வந்து நம் முகத்தில் அப்பியது.  தமுஎகச - வின் முன்னணி ஊழியர் ,  இசைக்கலைஞர், நாடக ஆசிரியர், தலித் உரிமைக் குரலொன் எனப் பன்முகம் கொண்ட தோழரின் மறைவு  மலையைவிட மேலதிகமாக மனதை கனக்கச் செய்கிறது.” பார்த்திபராஜா சாட்சியத்தோடு இன்னொரு கவிஞர் முத்துநிலவன் இணை கிறார். அவர் பதிவிடும்போது கவிஞர் , கலைக்குழு ஒருங்கிணைப்பாளர்.  கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர்,  கிராமியக்கலை நாடகர்,  நாவல் எழுத்தாளர்,  அறி வொளிக்கால களப்பணியாளர் , தமுஎகச- வின் ஆரம்பகால திருச்சித் தலைவர்களில் முக்கியமானவர் . மிக இனிய மனிதர்.  அவரது மறைவு மிகுந்த துயரம் தருகிறது.  “காலம் நம் கையில் தானே...” எனப் பாடும் அந்தக் கலைஞனின் குரல் எக்காலத்தும் ஓயாது முழங்கும். முகில் என்றால் மேகம் என்று பொருள். கானமழை பொழிந்த  மேகம் இந்த முகில் . ஒரு மேகம் காற்றில் கரைந்தால் அடுத்த ஒரு  மேகக்கூட்டம் நிச்சயம் கானமழை பொழியும்...

;