உலகம்

img

இந்நாள் ஜுலை 11 இதற்கு முன்னால்

1979 - மிகப்பெரிய அளவில் உலகின் கவனத்தை ஈர்த்த நிகழ்வான ஸ்கைலேப் புவியில் விழுதல் நிகழ்ந்தது. 1973 மே 14இல் ஏவப்பட்ட ஸ்கைலேப்-தான் நாசாவால்(அமெரிக்காவால்) ஏவப்பட்ட முதலாவதும், அமெரிக்கா தனியாக அனுப்பிய ஒரே விண்வெளி நிலையமுமாகும். (சோவியத் ஒன்றியம் 1971இலேயே முதல் விண்வெளி நிலையமான சல்யூட்-1ஐ அனுப்பிவிட்டது!) 1974 பிப்ரவரி வரை 3 முறை மனிதர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தியபின் பயன்படுத்தப்படாமல்விடப்பட்ட ஸ்கைலேப்பை மேம்படுத்தி, மீண்டும் பயன்படுத்தும் திட்டங்கள் செலவைக்கருதி கைவிடப்பட்ட நிலையில், 77.5 டன் எடையுள்ள அது, சுற்றுவட்டப்பாதையைவிட்டு புவியைநோக்கி வரத்தொடங்கியது. வளிமண்டலத்திற்குள் நுழையும் ஸ்கைலேப் சிதறும்போது, 152இல் ஒரு சிதறல் மனிதனைத் தாக்குவதற்கும், 7இல் ஒரு சிதறல் ஒரு லட்சம்பேருக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களைத் தாக்குவதற்கும் வாய்ப்பு உண்டு என்றும் கணிக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், உலகம் முழுவதும் மக்கள் தங்கள் தலையில் விழுந்துவிடுமோ என்று விண்ணைப் பார்த்துக்கொண்டே அலையும் அளவுக்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்படும் நாட்டுக்கு உடனே சென்று உதவ தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஸ்கைலேப் டி-ஷர்ட், தொப்பி என்று பலவும் விற்பனைக்கு வந்தன. ஸ்கைலேப் மேலே விழாமல் தவிர்க்கும் தொப்பி என்றும் மீறி விழுந்தால் பணம் திருப்பித்தரப்படும் என்றும் விளம்பரங்கள் வந்தன. ஸ்கைலேப்-பின் சிதறலை முதலில் கொண்டுவருபவருக்கு பத்தாயிரம் டாலர் தருவதாக சான்பிரான்சிஸ்கோ எக்சாமினர் இதழ் அறிவிக்க, ஸ்கைலேப் விழுந்து தானோ, சொத்தோ பாதிப்படைபவருக்கு 2 லட்சம் டாலர் தருவதாக சான்பிரான்சிஸ்கோ க்ரானிக்கிள் அறிவித்தது. எங்கு விழவேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், தென்ஆப்பிரிக்காவில் விழலாம் என்று நாசா அறிவித்தது. இக்கணக்கீட்டில் ஏற்பட்ட 4 சதவீத பிழையால், ஸ்கைலேப் ஆஸ்திரேலியாவில் விழுந்தது. சிதறல்கள் விழுந்த ஆஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியின் உள்ளாட்சி அமைப்பு, தங்கள் பகுதியைக் குப்பையாக்கிவிட்டதாக நாசாவுக்கு 400 டாலர் அபராதம் விதித்தது. நாசா செலுத்தாத அபராதத்தை, அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சி நடத்தும் ஸ்காட்பிராட்லி என்பவர் நிதிதிரட்டி 2009இல் செலுத்தினார்.

;