உலகம்

img

இந்நாள் ஜுலை 12 இதற்கு முன்னால்

1971 - தேசியப் பழங்குடியினர் நாளையொட்டி, தற்போது ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடிகளில் ஒன்றாகவுள்ள ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் கொடி முதன்முறையாகப் பறக்கவிடப்பட்டது. இத்துடன், அரசின் கொடி, டாரஸ் நீரிணைத் தீவினரின் கொடி என்று ஆஸ்திரேலியாவுக்கு 3 தேசியக்கொடிகள் உள்ளன. இவைதவிர ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள், உள்ளாட்சிகள்கூட தனிக் கொடிகளைக் கொண்டுள்ளன. ஒரு நாட்டின் கொடி என்பது போரின்போது அடையாளம்காண உதவும் ஒன்றாகவே தொடங்கியதால், தொடக்க காலத்தில் ராணுவம் சார்ந்ததாகவே கொடி இருந்துள்ளது. பிற நாடுகளுக்குச் செல்லவும், பிறநாட்டுக் கலங்களைச் சந்திக்கவும் கடற்பயணங்கள் வழியேற்படுத்தியதைத் தொடர்ந்து எந்த நாட்டுக் கப்பல் என்பதையும், வந்திருக்கும் நாடு எது என்பதையும் அடையாளப்படுத்தக் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1603இல் உருவாக்கப்பட்டு, இன்றும் இங்கிலாந்தின் கொடியாக உள்ள, யூனியன் ஜாக் கொடியே தற்போதுள்ள மிகமூத்த கொடியாகும். அமெரிக்க விடுதலைப்போரைத் தொடர்ந்து, 18ஆம் நூற்றாண்டில் பொதுமக்களும் நாட்டுப்பற்றை வெளிக்காட்ட தேசியக் கொடியைப் பயன்படுத்தும் பழக்கம் உருவானது. 19,20ஆம் நூற்றாண்டுகளில்தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் (ஏற்கெனவேயிருந்த போர்க் கொடியையொட்டிய) கொடிகளை பயன்படுத்தத்தொடங்கின. தற்போது நிலத்தில் பொதுமக்கள் பயன்பாடு, அரசுப் பயன்பாடு, ராணுவப் பயன்பாடு என்றும், நீரிலும் இதே 3 வகைகளிலும் ஆக ஆறுவகையான கொடிகளை ஒவ்வொரு நாடும் வைத்துக்கொள்ளும் முறையிருந்தாலும், பெரும்பாலும் ஒரே கொடியே (அப்படியே அல்லது சிறு மாற்றங்களுடன்) பயன்படுத்தப்படுகிறது. சீனா, தைவான், ஜப்பான் முதலான சில நாடுகள் போருக்குத் தனிக்கொடி வைத்துள்ளன. நேபாளத்தைத்தவிர மற்ற அனைத்து நாடுகளின் கொடிகளும் செவ்வக வடிவத்திலேயே உள்ளன. எல்லா நாட்டின் கொடிகளும் நீளம் அதிகமாகவும், உயரம் குறைவாகவுமே உள்ளன. ஸ்விட்சர்லாந்து, வாட்டிகன் ஆகியவற்றின் கொடிகள் மட்டும் சதுரமாகவுள்ளன. எல்லா நாட்டுக் கொடிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறங்கள் உள்ளன. உலகிலுள்ள 155 நாடுகளின் கொடியில் சிவப்பு நிறம் இடம்பெற்றுள்ளது. மற்ற கொடிகளுடன் பறக்கவிடப்படும்போது, தேசியக்கொடி முதலில் ஏற்றப்பட்டு, கடைசியாக இறக்கப்படவேண்டும், பல நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படும்போது ஒரே அளவில், ஒரே உயரத்தில் பறக்கவிடப்படவேண்டும், நிகழ்ச்சி நடத்தப்படும் நாட்டின் கொடி தனித்துக் காட்டப்படவேண்டும் என்பன உள்ளிட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தேசியக்கொடியை மேலிருந்து கீழாகத் தொங்கவிடுவதற்கும் விதிமுறைகள் உள்ளன!

;