உலகம்

img

களநாயகன், கவிதைகளின் நாயகன்

பாப்லோ நெருடா 1904ல் ஜுலை 12இல் சிலியின் பராவில் பிறந்தார். நெருடாவின் எழுத்து ஈடுபாட்டை ஒரு ரயில் இஞ்சின் டிரைவராக வறுமையில் வாழ்ந்த அவரின் தந்தை விரும்பவில்லை. ஆகவே 16வது வயதில் பாப்லோ நெருடா என புனை பெயர் வைத்துக் கொண்டார். அவரது இயற்பெயர் நெஃப்தாலி ரிகார்டோ. சிலியில் ஆண்கள் பள்ளியில் படித்து வரும் போது பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த பெண் பாஸ்லோ இவரது கவிதைகளை படித்து பெரிதும் உற்சாகப்படுத்தினார். அவர்தான் பின்னாளில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற காப்ரியோலா மிஸ்ட்ரா. 1921இல் பல்கலைக்கழ கத்தில் சேர்வதற்கு சிலியின் தலைநகர் சாண்டியா கோவிற்கு நெருடா வந்தார். தனிமையும், வறுமையும் நிறைந்த அந்த இளமைக் காலத்தில்தான் அவருடைய கவிதை வளம் பெற்றிருந்தது.  முதலாவது கவிதை தொகுப்பான CREPUSCULARIO 1923இல் வெளிவந்தது. அதற்கு அடுத்தாண்டு வந்த TWENTY LOVE POEMS AND SON OF DESPAIR (1924) எனும் நூல் 20 வயதே ஆன நெருடாவை சிலி முழுவதும் புகழ் பெறச் செய்தது. இப்பொழுதும் மக்களின் மிக  அபிமானத்திற்குரிய நூலும் இதுதான். குறியீடு களும், உருவாக்கங்களும் நிறைந்த ‘சிம்பலியோ’ கவிதை பாணியிலான இருபது காதல் கவிதை களின் வெற்றியுடன் தனது பிரெஞ்ச் ஆசிரியர் வேலையை உதறிவிட்டு முழு நேர கவிதை படைப்பில் ஈடுபட்டார்.

எழுத்துப் பணி அவரது வறுமையை போக்கவில்லை. வேலை தேடி அலைந்தார்.  மியான்மரில் சிலியின் அரசு தூதர் வேலை  கிடைத்தது. பெரிய ஊதியம் இல்லை என்றாலும்,  சிலிக்கு வெளியே இலங்கையிலும். இந்தோனே சியாவிலும் பணியாற்றினார். இக்காலத்தில் அவர் இந்தியாவிற்கு வந்தார். கொல்கத்தாவில் காங்கிரஸ் கூட்டத்தில் (1926) மகாத்மா காந்தியையும் நேருவையும் சந்தித்து பேசினார். ஆசியாவில் வாழ்ந்த கஷ்டமான, தனிமையான சூழ்நிலையில் அவர் RESIDENCY ON EARTH (1925-31) எனும் கவிதை நூலை படைத்தார். பழைய பாணியில் இருந்து விலகி ஒரு புதிய பாணியை இந்நூல் வாசகர்களுக்கு கொடுத்தது. 1930இல் டச்சு காலனி ஆதிக்கத்திலிருந்த இந்தோனேசியாவின் தூதராக நியமிக்கப்பட்டார். அங்கு அறிமுகமான அண்டோனீட்டா என்ற பெண்ணை மணம் செய்து கொண்டார். 1933இல் அர்ஜெண்டினாவுக்கு நெருடா வந்த பொழுதுதான் ஸ்பெயினின் புகழ்பெற்ற கவிஞர் பெடரிகோ கார்சியா லோர்காவை சந்தித்தார். நெருடாவின் கவிதைக்கு புகழ்சேர்த்ததில் பெரும் பங்கு வகித்தவர் லோர்கா. 1934இல் ஸ்பெயினின் தலைநகர் மார்டிலிலுக்கு அரசு தூதராக நெருடா வந்த போது அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது.

அதற்கு அடுத்த வருடம் 1935இல் RESIDENCY OF EARTH (1925-35) எனும் கவிதை தொகுப்பை வெளியிட்டு புகழின் உச்சிக்கு செல்லும் போதுதான் ஸ்பெயினில் உள்நாட்டு போர் துவங்கியது. சர்வாதிகாரி ஜெனரல் பிராங்கோவை ஆதரிக் கின்ற தேசியவாதிகளுக்கு, எதிராக தொழிலாளர் களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் உள்ளிட்ட குடியரசுவாதிகள் மோதினார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து கலைஞர்கள் உள்ளிட்டோர் ஸ்பெயினுக்கு வந்து குடியரசுவாதிகள் அணியில் சேர்ந்தார்கள். கவிஞர் லோர்காவை தேசியவாதிகள் கொன்றார்கள். குடியரசுவாதிகளுக்கு உதவ பணம் திரட்ட நெருடா ஸ்பெயினிலிருந்து வெளியேறினார். இக்காலத்தில் அவர் எழுதிய கவிதை தான் SPAIN IN MY  HEART (1937), குடியரசு ராணுவம் அதை அச்சடித்து விநியோகம் செய்தது. அது மக்கள் போராளிகளின் போர்ப்பாடலானது. ஆனால் குடியரசுவாதிகள் உள்நாட்டுப் போரில் பலகீனமாக தோற்றார்கள். ஸ்பெயின் சர்வதிகாரி பிராங்கோவின் ஆட்சி நிலை பெற்றது.  தன் சொந்த நாட்டிற்கு திரும்பிய நெருடா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பிரான்ஸின் அரசு தூதராக கொஞ்ச காலம் செயல்பட்டார் (1939). அடுத்த வருடம் மெக்சிகோவில் சிலியின் கன்சல் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். லத்தின் அமெரிக்காவின் புரதான சரித்திரத்தையும், கலாச்சாரத்தையும், கலைகளையும், வாழ்க்கை நிலைகளையும் சித்தரித்த– CANTO GENERAL (1950) எனும் நூல் வெளியானது. “மார்ச்சுபிச்சுவின் மேலே”– போன்ற மிகச் சிறந்த கவிதைகளை கொண்டது இந்த நூல்.

1943இல் நெருடா சிலிக்கு  திரும்பி வந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாள ராக 1945இல் போட்டியிட்டு செனட் உறுப்பினரானார். இடதுசாரியான காப்பிரியேல் கோன்சா லெஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற  நெருடா களம் இறங்கி செயல்பட்டார். லெஸ் வெற்றிபெற்றார். ஆனால் வலதுசாரியாக மாறினார்.  அதனால் நெருடா கடுமையாக அவரை விமர்சித்தார். அதை பொறுக்க முடியாத காப்பிரியேல் அவரை கொல்ல திட்டமிட்டார். அவர் அங்கிருந்து குதிரை மீதும், நடந்தும் ஆண்டிஸ் மலையின் கரடு, முரடான பாதைகளை கடந்து தப்பித்தார். தன் அகதி வாழ்க்கை காலத்தில் அன்றைய சோவியத் யூனியன் அங்கேரி, போலந்து உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு சென்றார்.  மெக்சிகோதான் அவரின் முக்கிய இருப்பிடமாக இருந்தது. அங்கே பழக்கமான மட்டில்டா உருஸ்யா என்ற சிலி தேசத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது மரணம் வரை அவர்தான் உடனிருந்தார்.  நெருடா கவிதைகள் எழுதுவதற்கு உருஸ்யா தூண்டு கோலாக இருந்தார். சிலியின் அரசியல் சூழ்நிலை மாற்றமடைந்தது. நெருடா 1952இல் சொந்த நாடு திரும்பினார். அப்போது அவர் உலகப் புகழ் பெற்றவராக திகழ்ந்தார். அவரது கவிதைகள் உலகத்தின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. அவருக்கு கிடைத்த பல நாடுகளின் அனுபவங்களைக் கொண்டு ELEMENTAL ODIS(1954)என்ற புகழ் பெற்ற நூலை வெளியிட்ட போது நெருடாவின் வாழ்க்கை மற்றொரு கட்டத்திற்கு உயர்ந்தது.  சிலியின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது நெருடா அவருக்கு உற்ற துணையாக இருந்தார். அலண்டே வென்றார். அவர் நெருடாவை பிரான்சின் அரசு தூதராக நியமித்தார். 1970இல் பிரான்சுக்கு செல்லும் போது நெருடாவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 1971இல் நெருடாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. 1973இல் அலண்டேயின் ஆட்சியை அமெரிக்கா சிலியின் ராணுவ உதவியுடன் கவிழ்த்து அலண்டேயை கொன்றது. இந்நிலையில் இரத்த புற்று நோயால் அவதியுற்ற நெருடா 1973 செப்டம்பர் 23இல் சாண்டியாகோவில் இயற்கை எய்தினார்.  - ஆர்.ராஜா சிபிஐ(எம்) திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்

;