செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

கட்டுரை

img

பீகார்/ ஜார்கண்ட் - அக்காவை விஞ்சும் தங்கை

பீகாரில் கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போதே, அதன் கவனம் வரவிருக்கிற சட்டமன்ற தேர்தலின் மீது திருப்பப்பட்டுவிட்டது. ஆனால், ஜார்கண்ட் மாநிலம் கொள்ளை நோயை சமாளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

தேர்தல் பிரசாரத் தீயைப் பற்ற வைத்தவர்கள்     
ஆட்கொல்லி நோயை எதிர்த்து பீகார் மக்கள் ஒற்றுமையுடன் போராட வேண்டிய நேரத்தில் அவர்களின் கவனத்தை வெற்றிகரமாக அரசியல் பக்கம் திருப்பியவர்கள் பொறுப்பு வாய்ந்த பிரதமரும், மத்திய அரசின் உள்துறை அமைச்சரும்தான். அமித்ஷா  ஜுன் 7 இல் பீகாரில் பேரணி நடத்தி மோடியின் “ஆத்மநிர்பார் பாரத்” திட்டத்தை துவக்கி வைத்து வருகிற  அக்டோபர் - நவம்பரில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைமுடுக்கி விட்டார்.   ஜுன் 20 இல்   தாய் மாநிலந் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு  அளிப்பதற்கான “கரிபி கல்யாண் ரோஜ்கர் அபியான்” திட்டத்தை துவக்குவது என்ற பெயரில் அரசியல் ஜுரத்தை  உச்சத்திற்கு கொண்டு சென்றார் மோடி. கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படைகளை தீரத்துடன் எதிர்த்துப் போரிட்டு வீர மரண மடைந்த பீகார் ரெஜிமெண்ட் படைவீரர்களின் தியாகத்தை வைத்து மோடி தேர்தல் பிரச்சாரம்  செய்தார்.இது பீகாரிகளின் வெற்றி என்றார்.உடனே, கடந்த 85 நாட்களாக வெளி உலகம் வராத முதல்வர் நிதிஷ் குமார் தனது கட்சி ஊழியர்களின் கூட்டத்தை நடத்தி, தனது அரசின் சாதனைகளை மக்களிடம் விரிவாகக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

 அடுத்து முக்கிய எதிர்க் கட்சியான ராஷ்டிரிய ஜனதாதள தலைவர்கள் ராப்ரி தேவியும், தேஜஸ்வி யாதவும்  பேரணி நடத்தி, நிதிஷ் குமார் அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கூறினர். இத்தேர்தல் கூட்டங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான சமூக இடைவெளி,முகக் கவசம் எல்லாம் காணாமல் போய் விட்டன.வைரஸ் பரவல் குறித்து யாருக்கும் பயமில்லாமல் போய் விட்டது.   மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது. இந்தியாவே கொரோனாவைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, பீகார் மக்களிடம் கொரோனா பற்றிய உரையாடலைக் காணோம்.

வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஜார்கண்ட்
பீகாரின் இளைய சகோதரி ஜார்கண்டின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையை எதிர்பார்த்தும், அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருக்கலாம் என்பதை முன்னுணர்ந்தும், அவர்களுக்கு அதீதமான காய்ச்சல்- தொற்று பரிசோதனைகள், பாதிக்கப்பட்டவரகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தயார் நிலையில் ஏற்பாடு செய்திருந்தது. நல்வாய்ப்பாக கிராம மக்களும் ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை தனிமைப்படுத்த உதவினர்.இது கொரோனா பரவலை சிரமமின்றி கட்டுப்படுத்த பெரிதும் உதவியது.ஜுன் 25 இல் ஜார்கண்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2219 ஆகும்.இதில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டுமே 1575 எனும் போது மாநில அரசின் திட்டமிட்ட செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியும்.  உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆகும். ஜார்கண்டில் பாதிப்பில் இருந்து குணமடைந்த வர்கள் விகிதம் 71.7சதவீதம் (தேசிய சராசரி 53சதவீதம்). அம் மாநிலத்தில் இதுவரை 1,28,214 பரிசோதனைகள் நடை பெற்றுள்ளன.தியோகர், கோடா, தும்கா, சாகிப்கஞ்ச் ஆகிய நான்கு மாவட்டங்களில் தொற்று அறவே இல்லை. தலைநகர் ராஞ்சியில்தான்  தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பீகாரில் பரிசோதனைகள் போதாமை
ஜூன் 25 அன்று பீகாரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8351. குணமடைந்தோர் விகிதம் நாட்டிலேயே அதிகமாக 72சதவீதம் ஆக உள்ளது.இதனால், மாநில அரசு தக்க நடவடிக்கைகள் மூலம் இச் சாதனையை அடைந்துள்ளது எனக் கூறிக் கொள்கிறது.ஆனால், எதிர்க்கட்சிகள் பரிசோதனை நடத்துவதில் அரசு முழுமையான தோல்வி அடைந்துவிட்டது. பரிசோதனைகள் போதுமான அளவில் நடக்காவிட்டால் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கையும் குறைவாகத்தானே இருக்கும் என்று குற்றம் சாட்டுகின்றன.பீகாரில் மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.கொரோனா பரவல் அபாயம் பற்றி ராஜ்குமார் என்பர் கூறுகையில்,”கடவுள் பீகாரிகளி
டம் அன்பாக இருக்கிறார்.இல்லாவிட்டால், நாங்கள் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்திருக்கும்” என்கிறார்.

பிரண்ட்லைன் ( ஜூலை 17,2020) இதழில்....
 பூர்ணிமா எஸ்.திரிபாதி கட்டுரையிலிருந்து.....
- தொகுப்பு : ம.கதிரேசன்

;