கட்டுரை

img

இது ஒரு உலக யுத்தம்! - ஜி ஜின்பிங்

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு மார்ச் 26, 27 தேதிகளில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாநாடு, உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று நோய் காரணமாக நடைபெறுமா என்ற நிலை எழுந்தது. இம்மாநாட்டிற்கு இந்த ஆண்டு தலைமையேற்றுள்ள சவூதி அரேபிய அரசு, மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடத்தலாம் என்று ஆலோசனை வெளியிட்டது. இதை ஜி20 நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். கொரோனா தொற்றுக்கு எதிராக மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ள சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜின்பிங் ஆற்றிய உரை இங்கு தரப்படுகிறது. 

உச்சி மாநாட்டிற்கு தலைமையேற்றுள்ள சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லா ஆசீஸ் அல் சவுத் அவர்களே, சக நாடுகளின் தலைவர்களே! கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று மிகப் பெரும் அபாயமாக எழுந்து நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சீன அரசாங்கமும், சீன மக்களும் இந்த தொற்று நோயை உறுதியுடன் எதிர்கொள்வதில் விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறோம். கொரோனா தொற்று உருவான முதல் நாளிலிருந்தே நாங்கள் மக்களின் வாழ்வையும், சுகாதாரத்தையும் முதன்மை இலக்காக நிறுத்தி போராடி வருகிறோம். 
மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குவது, ஒற்றுமையை பலப்படுத்துவது, தொற்று நோயை அறிவியல் ரீதியாக கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சையளிப்பது மற்றும் இவை அனைத்தையும் நிறைவேற்றிட இலக்கு நிர்ணயித்து பணிகளை முடுக்கிவிடுவது என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக ஒட்டுமொத்த தேசத்தையும் அணிதிரட்டியுள்ளோம்; தொற்றை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் கூட்டான நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் திறந்த மனதுடனும், மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் செய்து வருகிறோம். 
கோரொனா தொற்றுக்கு எதிராக இப்போது நாம் நடத்திக் கொண்டிருப்பது ஒரு மக்கள் யுத்தம். இந்த யுத்தத்தில் விடாப்பிடியான, உறுதியான செயல்பாடுகளையும், எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு தியாகங்களையும் எமது மக்கள் செய்திருக்கிறார்கள். இப்போது சீனாவின் நிலைமை என்பது ஒரு சாதகமான பாதையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை எட்டி அதே பாதையில் உறுதியாக நகர்ந்து கொண்டிருக்கிறது என என்னால் குறிப்பிட முடியும். அன்றாட வாழ்க்கையும், பணிகளும் சீனாவில் விரைவாகவே இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. எனினும், நமது பாதுகாப்பையோ அல்லது கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகளையோ குறைப்பது அல்லது குறைத்து மதிப்பிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

உலகின் உதவிகளை என்றென்றும் மறக்க மாட்டோம்
கொரோனா தொற்று நோய் ஏற்பட்டது முதல் அதற்கு எதிராக நாங்கள் நடத்திய மிகக் கடுமையான போராட்டத்தின் போது, அந்த கடினமான சூழலை எதிர்கொள்வதற்காக உலக சமூகத்தின் எண்ணற்ற மக்கள், அரசுகளிடமிருந்து நாங்கள் உதவிகளை பெற்றிருக்கிறோம். எங்கள் மீது நட்புறவை வெளிப்படுத்திய அனைவரையும் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அந்த உதவிகளை சீன மக்கள் என்றென்றும் மறக்க மாட்டோம்.
மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிற இந்த தொற்று நோய், நம் அனைவருக்குமான எதிரி. இன்றைக்கு அது உலகம் முழுவதிலும் பரவி, ஒட்டுமொத்த உலக மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு, உயிர் வாழ்க்கைக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இன்றைக்கு எழுந்துள்ள நிலைமை, மிகுந்த வேதனை தருவதாகவும், உடனடியாக தீர்க்கப்படாததாகவும் அச்சத்தை நீட்டிக்கச் செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய தருணத்தில் சர்வதேச சமூகம் பரஸ்பரம் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

ஒருவரையொருவர் பாதுகாக்கும் பொறுப்பினை கூட்டாக ஏற்றுக் கொண்டு, கூட்டாகப் பணியாற்ற வேண்டும். நாம் உறுதியான முறையில் ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய தொற்று நோய்க்கு எதிரான இந்தப் போரில் மனிதகுலம் வெற்றி பெறுவதற்கு இத்தகைய ஒற்றுமையும், கூட்டுச் செயல்பாடும் அடிப்படையானது. இதைச் செய்து முடித்திட உலக சமூகத்திற்கு முன்பு சீன மக்கள் சார்பில் நான் 4 யோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

1) ஒன்று கோவிட் 19 தொற்று நோயை எதிர்த்து நாம் உறுதியான முறையில் ஒரு முழுமையான உலகப் போரினை நடத்தியாக வேண்டியது அவசியம். எந்த வேறுபாடுமின்றி, ஒட்டுமொத்த தேசிய சமூகங்களும் உறுதியான முறையில் இந்த வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்துவதை நோக்கி நகர்ந்திட வேண்டும். ஜி20 நாடுகளது சுகாதார அமைச்சர்களின் ஆலோசனை உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதில் பரஸ்பரம் நாடுகளுக்கிடையே தற்போதைய சுகாதார நிலைமை குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது, மருந்துக்கள், தடுப்பூசிகள் மற்றும் கொள்ளை நோய் கட்டுப்பாட்டுக்கான திட்டங்களை பரிமாறிக் கொள்வது; மற்றும் எல்லை தாண்டி தொற்று நோய் பரவி விடாமல் தடுத்து நிறுத்துவது ஆகிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பற்றி பேசி முடிவு செய்ய வேண்டும். ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகிலுள்ள வளர்முக நாடுகளின் பலவீனமான பொது சுகாதாரக் கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்திட; அந்த கட்டமைப்புகள் எதையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய உதவிகள் செய்திட வேண்டும். உலக சுகாதார அமைப்பின் உதவியோடு, இத்தகைய தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற இந்த உயரிய கண்ணோட்டத்தோடு, நாங்கள் எங்கள் நாட்டில் மேற்கொண்ட பல நல்ல நடவடிக்கைகள் மூலம் கிடைத்த அனுபவங்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கவும் மேம்படுத்தவும் உற்பத்தி செய்யவும் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் தேவையான உதவிகள் என அனைத்தையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் அனைத்து உதவிகளை செய்யவும் தயாராக இருக்கிறோம்.

2)இரண்டாவதாக, சர்வதேச அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் தேவை ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை அனைத்து நாடுகளும் உணர வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த வைரசுக்கு எல்லைகள் இல்லை. இது நமது அனைவரின் பொது எதிரி. எனவேதான், ஒரு வலுவான சர்வதேச அளவிலான கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை வலைப்பின்னல் தேவைப்படுகிறது. இதுவரைக்கும் இந்த உலகம் பார்க்காத அளவிற்கு அப்படிப்பட்ட பிரம்மாண்டமான தடுப்பு மற்றும் சிகிச்சை வலைப் பின்னலை மனிதகுலம் உடனடியாக கட்டமைக்க வேண்டியது அவசியம். சீனா, கோவிட் 19 தொடர்பாக தற்போது தனக்கு கிடைத்துள்ள ஒட்டுமொத்த அறிவையும் இந்த உலகிற்கு சமர்ப்பிக்கும் விதத்தில் வெளிப்படையாக பதிவு செய்து வலுகிறது. அதேபோல உலக நாடுகள் அனைத்தும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பரிசோதனை திறன்களை பரிமாறிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் தங்களிடம் உள்ள பலம், பலவீனங்களை வெளிப்படையாக கூறி பரஸ்பரம் உதவிகளை பரிமாறிக் கொள்வது தவிர்க்க முடியாத அவசியமாக மாறியிருக்கிறது. உலகின் பல பிராந்தியங்களில் அவசர நிலை கட்டுப்பாட்டு மையங்கள், விரைவாக நாடுகளின் பொது சுகாதார அவசர நிலைக்கு உதவுவதற்கான மையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டியது அவசியம்.

3)மூன்றாவதாக, சர்வதேச அமைப்புகள் இந்தப் பணியில் ஊக்கத்துடன் செயல்பட நாம் உதவ வேண்டியது அவசியம். ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார மையம் சர்வதேச அளவில் இந்த மாபெரும் பணியை மேற்கொள்வதையும், அறிவியல் அடிப்படையில் முறையாக தொற்று நோய் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை முடுக்கிவிடுவதையும், எல்லை தாண்டி தொற்று பரவாமல் தடுத்து நிறுத்தும் பணியை மேற்கொள்வதையும் முன்நின்று செய்வதை சீனா முழு மனதுடன் ஆதரிக்கிறது. உலக சுகாதார மையத்தின் உதவியோடு ஜி 20 உறுப்பு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் இந்த கொள்ளை நோய் தடுப்புக்கான தகவல் பரிமாற்றம்; தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை பரஸ்பரம் வெளிப்படையாக தெரிவிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான ஆன்லைன் சந்திப்புகளும், ஆலோசனைகளும் சர்வதேச அளவில் தொடர்ந்து நடைபெற வேண்டும். இந்தப் பணிகளில் சீனா முழு மனதோடும், உறுதியோடும் அனைத்து சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுக்கு உதவி செய்யும்.

4)நான்காவதாக, சர்வதேச அளவில் பேரளவு பொருளாதார ஒத்துழைப்பு கொள்கையை இப்போது உறுதி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதிலும் தொழில் உற்பத்தியை முடக்கியுள்ளது. பொருட்களுக்கான சந்தை கிராக்கியை காலி செய்துள்ளது. இதனால் மிகப் பெரிய பாதகமான தாக்கம் ஏற்படும். உலகப் பொருளாதாரம் மிகப் பெரும் மந்தத்திற்குள் வீழ்வதை தடுக்க வேண்டியது அவசியம். எனவே, உலக நாடுகள் தங்களது பொருளாதாரக் கொள்கைகளை பரஸ்பரம் ஒத்துழைப்பு சார்ந்ததாக மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. நாம் நமது நாணயங்களின் மதிப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள பொருத்தமான நிதி மற்றும் பணக் கொள்கைகளை வலுவாக அமலாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. சிறந்த முறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பது, சர்வதேச நிதி சந்தைகளை நிலையாக வைத்து கொள்ள முறையாக நிதி ஒழுங்காற்று செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாம், உலக தொழில் உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பு உள்ளிட்ட அந்த சக்கரத்தை நிலையாக சுழலச் செய்வதற்கு இந்த தருணத்தில் கூட்டாக செயல்பட வேண்டியது அவசியம். இந்த சமயத்தில் உலக அளவில் மருந்துப் பொருட்கள் உற்பத்தி தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது. சர்வதேச சந்தையில் மருந்துகள், மருந்துக்களுக்கான மூலப் பொருட்கள், உலகம் முழுவதும் அன்றாடம் தேவைப்படுகிற மருத்துவம் சார்ந்த அனைத்து பொருட்கள் மற்றும் கொள்ளை நோய் தடுப்புக்கான பொருட்கள் உள்பட இவற்றின் அளிப்பு (சப்ளை) எந்தவிதத்திலும் தடைப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சீனா முழுமையாக செயல்படும். நாம் நமது பெண்கள், குழந்தைகள், மூத்தோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் எளிதாக சுகாதாரப் பிரச்சனைக்கு இலக்காகும் விளிம்பு நிலையில் இருக்கிற ஏராளமான மக்கள் சமூகங்கள் ஆகிய அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் நிற்கிறோம். இந்த அனைத்து மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை அளிக்க வேண்டியது அவசியம். இதற்கு தேவையான கொள்கைகளை சீனா உறுதியாக செயல்படுத்தும். சர்வதேச அளவில் இதுதொடர்பான வர்த்தகங்களுக்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வது, அனைவரும் இதற்கான வர்த்தகச் சூழலை மேம்படுத்துவது, ஏற்றுமதி, இறக்குமதியை விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் உலகப் பொருளாதாரம் பாதுகாக்கப்பட அனைத்து ஒத்துழைப்பையும் சீனா நல்கும்.

எனவே, கட்டண உயர்வுகள், வரி உயர்வுகளை வெட்டுவது; உலகாளவிய தடைகளை ரத்து செய்வது; உலகம் முழுவதும் வர்த்தகம் தங்கு தடையில்லாமல் நடப்பதை உறுதி செய்வது ஆகியவற்றில் ஜி20 உறுப்பு நாடுகள் கூட்டான முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்க நான் விரும்புகிறேன். உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உறுதியான, நம்பிக்கையான சமிக்ஞைகளை நாம் ஒன்றுபட்டு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, நண்பர்களே, இது மிக முக்கிய தருணம். ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாக எழுந்து நின்று உறுதியாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய தருணம். நாம் பரஸ்பரம் ஆதரவையும், உதவிகளையும் செய்வதில் தோளோடு தோள் நிற்போம். கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தி, அதை வீழ்த்துவோம். மனித குலத்திற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை அளிப்போம். நன்றி!

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்
நன்றி: பீப்பிள்ஸ் டெய்லி, சீனா

;