கட்டுரை

img

கொரோனா தடுப்பு - கேரளா காட்டும் பாதை பினராயி விஜயன் கேரள முதலமைச்சர்

டிசம்பர் 2019-ன் பிற்பகுதியில் சீனாவின் ஹுபே மகாணத்தின் வுகான் நகரம் முழுவதிலும் பரவி வரும் நோய்க்கு புதுவகையான கொரோனா வைரஸ், சார்ஸ்-கோவி-2 தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.  தற்போது, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதிலும் 195 நாடுகளையும், பிரதேசங்களையும் பாதித்துள்ளது.  அதாவது, ஒட்டுமொத்த உலகமும் இத்தொற்றின் பிடியில் சிக்கியுள்ளது.  ‘இத்தொற்று வேகமாகப் பரவிவருகிறது’ என உலக சுகாதார அமைப்பால் நாம் எச்சரிக்கப்பட்டோம்.  முதல் 1 லட்சம் என்ற எண்ணிக்கையிலான நோயாளிகளை எட்ட 67 நாட்கள் ஆனது,  அதன் பின்னர் 11 நாட்களில் அது 2 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டி, அதன் பிறகு வெறும் 4 நாட்களில் அது 3 லட்சம் என்ற எண்ணை எட்டியது.

கேரளத்தில் ஆரம்ப கட்ட தயாரிப்புகள்
ஜனவரி 18 முதல் 22 வரையிலான காலகட்டத்திலேயே கேரள அரசு, உலக சுகாதார மையம் மற்றும் இந்திய அரசு, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அளித்த அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் அனைத்து 14 மாவட்டங்களோடும் பகிர்ந்து கொண்டது.  மாநில அளவிலானதொரு உடனடி செயல் அமைப்பு (rapid action force) கூடி, கண்காணிப்பு, பரிசோதனைக் கூடங்கள், சிகிச்சை மற்றும் பயிற்சி தொடர்பான வழிகாட்டுதல்களை தயாரித்தது. இவ்வழிகாட்டுதல்களும் மாவட்டங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. எத்தகையதொரு நிலையையும் எதிர்கொள்ள மாவட்ட அளவிலான பொது சுகாதார அமைப்புகள் உருவாக்கப்பட்டன.  அதன் பின்னர், சீனாவிலிருந்து வருகின்ற பயணிகள் அனைவரும் கொச்சி விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டனர்.  சீனாவிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளையும் கறாராக கண்காணிக்க துணை சுகாதார குழுக்கள் உருவாக்கப்பட்டன.  தொடர்புகள் மூலமாக இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மற்றும் சாத்தியக் கூறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு மாவட்ட ஒருங்கிணைந்த கண்காணிப்பு திட்டக் குழு கண்காணிக்கத் துவங்கியது.

இந்நோய் சர்வதேச அளவில் மேலும் வேகமாகப் பரவத் துவங்கியது.  மேலும், வெளிநாடுகளிலிருந்து கேரளத்திற்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.  இந்நிலையில், மாநிலத்தில் கோவிட்-19 நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.  தங்களது மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை தயார் செய்திட மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர்.  நோயாளிகளை மருத்துவமனையில் தனிமைப்படுத்திடவும், வீடுகளில் தனிமையில் வைத்திடவும் தேவைப்படுபவை குறித்த உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. சுகாதார சேவைக்கான இயக்குநரகத்தில் ஜனவரி 24ம் தேதியன்றே கண்காணிப்பு அறை ஒன்று துவக்கப்பட்டது.  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தேவையான வழிகாட்டுதல்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஜனவரி 25ம் தேதியன்று அளிக்கப்பட்டன.  ஜனவரி 28ம் தேதிக்குள் மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆரம்பகட்ட நோயாளிகள்
கோவிட்-19 முதல் நோயாளி இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனவரி 30ம் தேதியன்று கேரளத்தில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் உறுதி செய்யப்பட்டது.  வுகான் நகரத்திலிருந்து நாடு திரும்பி, திருச்சூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவியே இந்த முதல் நோயாளி ஆவார். அதன் பின்னர், பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது நோயாளிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களும் வுகான் நகரத்திலிருந்து திரும்பி வந்த மாணவர்கள் ஆவர். ‘மாநில அளவிலான பேரிடர்’ அறிவிக்கப்பட்டு, அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளத் துவங்கப்பட்டன.  இந்த ஆரம்பகட்ட நிலையிலேயே, சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் மற்றும் சுகாதார சேவைத் துறையின் இயக்குநர் ஆகியோர் கூடி மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரமான தலையீடுகள் குறித்து முடிவெடுத்தனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான உடனடி செயல்பாட்டு குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டன.  

பிப்ரவரி 1ம் தேதியன்று, ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் பிரிவு மாதிரிகளை சோதனை செய்ய தயாரானது.  மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அறைகளும் 24 மணி நேரமும் செயல்படத் துவங்கின.  வகைப்படுத்தப்பட்ட அனைத்து மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளுக்கான தனிமைப் பிரிவுகளின் வசதிகளும் மேலும் வலுப்படுத்தப்பட்டன.  நோய்க்கான அறிகுறியோடு இருந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய தேவையோடு வரும் நோயாளிகளைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தன.  இத்தகைய முன்தயாரிப்புகளோடு நாங்கள் இருந்ததன் காரணமாக, துவக்கத்தில் கண்டறியப்பட்ட நோயாளிகளிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவுவதை கேரளாவால் தடுக்க முடிந்தது.  ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்து பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

கூடுதல் நடவடிக்கைகள்
கோவிட்-19 நோய் குறித்த விழிப்புணர்வு காணொலிகள் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டன. இந்நோய் குறித்த தகவல்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி பண்பலை அலைவரிசைகளிலும் தகவல்கள் விளம்பரப்படுத்தப்பட்டன. அதேநேரத்தில், சமூகவலைதளத்தில் பொய்யான செய்திகளை பரப்பும் அற்பச் செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத் துறையால் இந்நோய் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.  விமானநிலையங்களிலும், துறைமுகங்களிலும் இந்நோய்க்கான அறிகுறிகளுடன் உள்ளவர்களை கண்டறிவதற்கான  கடுமையான சோதனைமுறைகள் நிறுவப்பட்டன.  இத்தாலி மற்றும் ஈரானில் இந்நோய் கடுமையாக பரவுவது குறித்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, இச்சோதனை முறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் அல்லது இந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதிக்கு பின்னர் இந்நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.  

இதர மாநிலங்களிலும் இந்நோய்க்கான அறிகுறிகளுடன் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்ட நிலையில், அனைத்து மாநிலங்களோடும் காணொலிக் கூட்டத்தை செயலர் கூட்டினார்.  கேரள சுகாதாரத் துறையின் முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், முதன்மைச் செயலரை இது குறித்த அறிமுகத்தை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  கேரள மாநிலத்தால் உருவாக்கப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுமாறு இதர மாநிலங்களை அறிவுறுத்தினார்.  இந்த வைரஸ் நோயின் தாக்குதலை எதிர்கொள்ள இதர மாநிலங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேரள மாநிலத்தை அவர் கேட்டுக் கொண்டார்.  

பின்னர் கண்டறியப்பட்ட நோயாளிகளும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும்
புலம்பெயர் தொழிலாளர்களை பெரும் எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலமாக இருப்பதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் மக்கள் கேரள மாநிலத்திற்குள் வந்து கொண்டிருந்தனர்.  சுற்றுலாவிற்கும் புகழ்பெற்ற தலமாக இருப்பதால், சர்வதேச சுற்றுலாப் பயணிகளை அதிக எண்ணிக்கையில் ஈர்ப்பதாகவும் இம்மாநிலம் உள்ளது.  மார்ச் 8ம் தேதியிலிருந்து கேரளத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளில் பிரதானமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.  இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடனான நேரடி தொடர்பு காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரு சில நோயாளிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு காரணமாக ஏற்பட்ட நோய்த்தொற்று தவிர, மூன்றாம் நிலையில் நோய் மாநிலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் கவனத்துடன் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். 

பின்னர் கண்டறியப்பட்ட நோயாளிகளும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும்
புலம்பெயர் தொழிலாளர்களை பெரும் எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலமாக இருப்பதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் மக்கள் கேரள மாநிலத்திற்குள் வந்து கொண்டிருந்தனர்.  சுற்றுலாவிற்கும் புகழ்பெற்ற தலமாக இருப்பதால், சர்வதேச சுற்றுலாப் பயணிகளை அதிக எண்ணிக்கையில் ஈர்ப்பதாகவும் இம்மாநிலம் உள்ளது.  மார்ச் 8ம் தேதியிலிருந்து கேரளத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளில் பிரதானமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக ஐரோப்பிய மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.  இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடனான நேரடி தொடர்பு காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரு சில நோயாளிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு காரணமாக ஏற்பட்ட நோய்த்தொற்று தவிர, மூன்றாம் நிலையில் நோய் மாநிலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் கவனத்துடன் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

தற்போதைய நிலை என்ன?
மார்ச் 24ம் தேதி வரை, கோவிட்-19 நோயால் 109 பேர் கேரளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 4 பேர் குணமடைந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள 105 பேர் மாநிலம் முழுவதிலுமுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 72,460 பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.இவர்களில் 466 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4,516 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் 3,331ல் நோய்த்தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.  இந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக கேரளத்தில் அதிகரித்து வருகிறபோதும், இந்நோயின் தொற்றால் இம்மாநிலத்தில் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இத்தொற்று சமூகப்பரவல் என்ற நிலையை கேரளத்தில் எட்டிவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

அதே நேரத்தில், அவசரகால நிலைமை உள்ளிட்ட எத்தகையதொரு சூழலையும் கையாளக் கூடிய வகையில் கூடுதல் வசதிகளையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். இத்தொற்று நோய் பிரச்சனையைக் கையாள போதுமான மனிதவளம் இருப்பதை உறுதி செய்திட சுகாதாரத் துறையில் 276 மருத்துவர்களை அவசரகால பணிநியமனம் செய்துள்ளோம். தேவைக்கேற்ப இதர துணை மருத்துவ ஊழியர்களும் பணிநியமனம் செய்யப்படுவர். மாநில பொதுத் தேர்வாணையத்தின் பட்டியலிலிருந்தே இந்நியமனங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக செயல்படத் தகுதியுடைய கட்டிடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இளைஞர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் இக்கட்டிடங்கள் எல்லாம் சுத்தப்படுத்தப்பட்டு, செயல்படத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநில மருந்துகள் மற்றும் பார்மசுயூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் கேரள மாநில தொழில் முன்னேற்றக் கழகம் போன்ற இம்மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் சானிடைசர்கள், முகக்கவசங்கள் போன்ற பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் முன்கை எடுத்தன.  இவ்விஷயத்தில் கேரள மாநிலத்தின் சிறைகளில உள்ள கைதிகளும் கூட தங்களது பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.  பல்வேறு குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னார் அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகளும் கூட சானிடைசர்கள் மற்றும் முகக்கவசங்களை தயாரித்து, விநியோகிப்பதை தங்களது சமூகக் கடமையாக ஏற்றுக் கொண்டனர்.

புதுமையான இக்கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திட, மனிதர்களுக்கிடையே பாதுகாப்பான இடைவெளி பராமரிக்கப்படுவதோடு தனிநபர் சுகாதாரத்தையும் உத்திரவாதம் செய்யும்படி சர்வதேச சுகாதார அமைப்புகளும், இத்துறையின் வல்லுநர்களும் அறிவுறுத்துகின்றனர்.  சோப்புகள் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்தி தங்களது கைகளை மக்கள் கழுவுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி, ‘சங்கிலித் தொடரை துண்டிப்போம்’ என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அரசு அலுவலகங்கள், பொதுமக்களுக்குரிய அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், புகழ்பெற்ற தனிநபர்கள் மற்றும் பலர் இப்பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதை மாபெரும் வெற்றியாக்கினர்.  சமூக வலைதளத்தை புதுமையாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட நூதனமான வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கதவடைப்புகள்
பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகளில் சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மட்டுமே மக்களிடையே பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்ய இயலும்.இதனைச் செயல்படுத்திட, ஒட்டுமொத்த மாநிலமும் தற்போது கதவடைப்பின் கீழ் உள்ளது.பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன.தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன.பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.மக்கள் கூடுவதும், மதரீதியான வழிபாட்டு விழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டன.பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டன. மாநிலத்தின் எல்லைகள் மூடப்பட்டன. அதே நேரத்தில், அவசரகால சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் மருந்துக் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறிப்பிட்ட கால அளவிற்கு திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் சமைத்த உணவுகளை வீடுகளுக்கு வாங்கிச் செல்லவும், வீடுகளுக்கு கொண்டு சென்று அளித்திடவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. உணவு தானியங்கள் போதுமான அளவில் கையிருப்பு இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மேலும், உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகுத்திட மாநில எல்லைகளுக்கிடையே சரக்குப் போக்குவரத்தை நாங்கள் அனுமதிக்கிறோம். அரசு அலுவலகங்களின் செயல்பாட்டை உத்திரவாதம் செய்ய அரசு ஊழியர்கள் பல கட்டங்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கோவிட்- 19 நிவாரணங்கள்
போக்குவரத்தும், மக்களின் நடமாட்டத்தின் மீதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையைப் பாதிக்கிறது. இதை நன்கு உணர்ந்து கொண்டிருந்ததால், மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கதவடைப்பை செயல்படுத்துவதற்கு மிக முன்பே, அதாவது மார்ச் 18ம் தேதியே, எதிர்வருகிற நெருக்கடியை சமாளித்திட 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணங்களை கேரள அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்கான தொகையை மார்ச் மாதத்தில் முன்கூட்டியே ஓய்வூதிய நலத்திட்டப் பயன்களை விநியோகித்திட 1,320 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. ஓய்வூதிய நலத்திட்டங்களின் கீழ் பயனடைய தகுதி பெற்றிராத குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 1000 ரூபாயை உதவித்தொகையாக அளித்திட 100 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. அடுத்த 2 மாதங்களில், குடும்பஸ்ரீ திட்டத்தின் வாயிலாக 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இதற்கான வட்டி தொகையை முழுமையாக மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் வேலையளித்திட 2000 கோடி ரூபாய்கள் பயன்படுத்தப்படும்.

கோவிட்-19 நோய் பாதுகாப்பு சிகிச்சைக்காக பொது சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்படும் கூடுதல் செலவுகளுக்காக 500 கோடி ரூபாய்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. 100 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும்.  பட்டினி இல்லாத கேரளம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, வெறும் 20 ரூபாய்க்கு உணவை அளித்திட 50 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும். இதனைச் செயல்படுத்திட ஏப்ரல் மாதத்திலேயே 1000 உணவகங்கள் திறந்து வைக்கப்படும். 25 ரூபாய் விலையில் உணவு அளித்திட செப்டம்பர் மாதத்தில் உணவகங்கள் திறந்து வைக்கப்படும் என மாநில பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசு அளிக்க வேண்டியுள்ள நிலுவைத் தொகைகளை செலுத்திட 14,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும். இவ்வாறாக, அவசரகால அடிப்படியில் மாநிலத்தின் பொருளாதாரத்தில் 20,000 கோடி ரூபாய் உட்செலுத்தப்பட்டு வருகிறது.

ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் டாக்சிகளுக்கான தகுதிக் கட்டணம் தளர்த்தப்பட்டுள்ளது. ஸ்டேஜ் வண்டிகள் மற்றும் ஒப்பந்த வண்டிகள் மீதான காலாண்டு வரிகளில் ஒரு மாத காலத்திற்கு தளர்வு அளிக்கப்படும். இவ்வகையில் 23.60 கோடி ரூபாய் அளவிலான சலுகைகள் அளிக்கப்படுகின்றன. மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை எந்தவிதமான அபராதமும் இன்றி ஒரு மாத காலம் தாமதமாக செலுத்திடலாம். திரையரங்குகள் மீது விதிக்கப்படும் கேளிக்கை வரி ஒரு மாத காலத்திற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளித்திட உதவிடும் வகையில் அவசரகால நடவடிக்கையாக பொருளாதாரத்தினுள் நிதியை உட்செலுத்தியதோடு, மக்களுக்கு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்திட வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கதவடைப்பு செய்யப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், காய்கறிகள், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குடும்பங்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்திட ஆன்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  

தேவைகளைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிட தன்னார்வ அமைப்புகளின் சேவைகள் உத்திரவாதம் செய்யப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு வாசிப்பதற்கு புத்தகங்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் பதிப்பகங்களின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொலைதொடர்பு சேவையை அளிப்பவர்களுடனான பேச்சுவார்த்தைகளை அடுத்து போதுமான அளவிலான இணையளதள அலைவரிசையும் உத்திரவாதம் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மக்கள் வீடுகளில் இருக்கின்ற போது தகவல் பரிமாற்றத்திற்கும், பொழுது போக்கிற்கும் போதுமான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்து வரும் இத்தருணத்தில் கொடுத்த கடனைத் திரும்ப வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும், வட்டித் தொகை மற்றும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையிலும் சலுகை அளிக்கவும் வேண்டுகோள் விடுத்து மாநில அளவிலான நிதி நிறுவனங்களின் குழுவின் கூட்டம் நடத்தப்பட்டது

. இதுதொடர்பாக கேரள மாநில உயர்நீதிமன்றமும் சாதகமானதொரு தீர்ப்பை அளித்தது. ஆனால், மத்திய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில், உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்துள்ளது.  முழுமையான முடக்கத்தை நோக்கி நகர்கின்ற அதே நேரத்தில், மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதை உத்திரவாதம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மனித வாழ்வை நீடிக்கச் செய்திட, சுகாதாரமும் பொருளாதார நடவடிக்கையும் தேவையாகும். சவால்கள் நிறைந்த இக்காலகட்டத்தில், இவை இரண்டையும் உத்திரவாதம் செய்திட கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வீடுகளுக்குள்ளே இருங்கள் என்று நாங்கள் வெறுமனே அவர்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. அவ்வாறு அவர்கள் வீடுகளுக்குள் இருக்கும்போது, அவர்கள் தங்களது வாழ்வை நீடிக்கச் செய்து கொள்வதைக் கூட நாங்கள் உத்திரவாதம் செய்துள்ளோம்.

மத்திய அரசிடம் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகள்
வைரஸ் தொற்று இருப்பதை கண்டுபிடித்து, நோயுற்றிருப்பவர்களுக்கு சிகிச்சையளித்திட, நோய் மேலும் பரவாமல் தடுத்திட அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சீன மற்றும் தென்கொரிய அனுபவமும், உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தல்களும் பரிந்துரைக்கின்றன.  இதன்படி, அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், மாநில அரசால் ஒரு எல்லைக்குட்பட்டே செயல்பட இயலும்.  நாடு முழுவதிலும் அதிக அளவில் இதுபோன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல், வைரஸ் தொற்றின் பரவலையும், நோயின் தாக்கத்தையும் நம்மால் துல்லியமாக மதிப்பிட இயலாமல் போகும். இதில் ஏற்படும் சிறிய தவறு கூட கடுமையான துயரில் நாட்டை தள்ளிவிடும். எனவே, பரிசோதனைகளை நடத்திட மேலும் அதிக எண்ணிக்கையிலான மையங்களை அனுமதிக்குமாறு மத்திய அரசை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.

சார்ஸ்-கோவ்-2 மற்றும் கோவிட்-19 ஆகியனவற்றை எதிர்த்து போராடிய காலம் முழுமையிலும், பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டபோதும் கேரளா பல்வேறு இன்னல்களை அனுபவித்தது.  பிரதமர், சுகாதார அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பலருக்கு கடிதங்களை எழுதுவதன் மூலம் இவற்றை எல்லாம் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம்.   மாநில அரசுகளுக்கு கிடைக்கிற வரம்புகளுக்குட்பட்ட நிதியாதாரத்தோடுஇதுபோன்ற பெரிய அளவிலான தொற்றை சமாளிப்பது. மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யாமல், இப்போராட்டத்தை நடத்தி முழுமையான வெற்றியை பெற இயலாது. எனவே, மாநிலங்களின் கடன் பெறுவதற்கான வரம்பை உயர்த்துதல், வட்டி விகிதத்தை குறைத்தல், கடனை முன்கூட்டியே பெற அனுமதித்தல், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் கீழ் வேலைநாட்கள் மற்றும் கூலியை உயர்த்திட அனுமதித்தல், மருந்துப் பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள், சானிடைசர்கள் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களை அனுமதித்தல், பரிசோதனை வசதிகளை அதிகரித்தல், கூடுதலாக மருத்துவ உபகரணங்களை அளித்தல், டிஆர்எப்களின் பயன்பாட்டில் தளர்வை அளித்தல் போன்ற சில நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். 

உடலால் விலகியிருத்தல், உணர்வால் ஒன்றுபடல்
கேரள மாநிலத்தை பொறுத்தவரை, வைரஸ்கள் மற்றும் தொற்று நோய்கள் அடிக்கடி தாக்குவதால் எங்களது பொது சுகாதார திட்டத்தின் மீளும் திறனை அதிகரிக்கச் செய்துள்ளது.  இது எங்களது குறைபாடுகளை புரிந்து கொள்ளவும், சரி செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உதவியுள்ளது.  வலுவான பொது சுகாதார நடைமுறையின் அவசியத்தையே கோவிட்-19 நோயை எதிர்ப்பதில் உலகம் முழுவதிலும் கிடைத்துள்ள அனுபவம் கோடிட்டு காட்டுகிறது.  இப்படிப்பினையை உள்வாங்கிக் கொண்டு, கேரள மாநிலத்தின் பொது சுகாதார நடைமுறையை வலுப்படுத்திட போதுமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.  சுகாதார சேவைகளை மக்களுக்கு இணக்கமாக அளிப்பதற்கான ஆர்த்ராம் திட்டத்தின் மூலம் நாங்கள் ஏற்படுத்திய திறன்கள் இத்தருணத்தில் எங்களுக்கு பெருமளவில் உதவியுள்ளது என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். 

இந்நெருக்கடியை எதிர்கொண்டு மீண்டிட சமூகம் ஒட்டுமொத்தமாக முன்செல்வதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்.  ‘உடலால் விலகுவது, சமூகமாக ஒன்றுபடுவது’ என்பதே கோவிட்-19 நோயை எதிர்கொள்வதில் எங்களது லட்சியமாக உள்ளது.  சமூகத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதில், பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அதிகாரபூர்வமான தகவல் அலைவரிசைகள் வாயிலாக ஒவ்வொரு நிலையையும் நாங்கள் மக்களுக்கு தெரிவித்து வருகிறோம். அதிகாரப்பூர்வமான மற்றும் அறிவியல்பூர்வமான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், வதந்திகளை எதிர்கொள்ளவும், தவறான செய்திகளை தடுக்கவும் சமூக ஊடகங்கள் சீரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களுக்கு நிவாரணத்தை அளித்திட அரசு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைச் செயல்படுத்திட, ‘கேரள தொற்றுநோய்கள் அவசரச் சட்டம், 2020-ஐ நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்,  இதன் வாயிலாக, தொற்றுநோய் காலத்தில் நிலைமைக்கு ஏற்றவாறு சிறந்த முறையிலும், முன்கூட்டியே அரசு தலையீடு செய்திட இயலும்.

மிகுந்த அசாதாரணமான சவாலை நாம் சந்தித்து வருகிறோம். நாம் முன்செல்ல நமது நடைமுறைகள், வாக்குறுதிகள், சகமனிதர்கள்பால் நாம் கொண்டுள்ள அன்பு என அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு வருகின்றன.  இத்தொற்று, பல வளர்ந்த நாடுகளை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.  இந்த வைரஸ் பரவுவதை தடுத்திட கேரள மாநிலம் கடுமையாகப் போராடி வருகிறது.  இதனைத் தடுத்து நிறுத்திட, நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.  இப்போராட்டத்தை கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு முன்னின்று நடத்தி வருகிறது. 
தமிழில் - எம்.கிரிஜா   பீப்பிள்ஸ் டெமாக்ரஸி (மார்ச் 29)

 

;