கட்டுரை

img

திடீர் தமிழ்ப்பற்று, தமிழுக்குநல்லதா?  -த.பூங்குழலி

உலக பொதுமறையாம் திருக்குறளை உலகினுக்கு தந்த வள்ளுவனுக்கு,  மதசாயம் பூசும் மாண்பிலா செயலை சங்கப் பரிவாரங்கள் தமிழ்ப்பற்று என்ற போர்வையில் அரங்கேற்றி வருகிறது. இவர்களின் இந்த திடீர் தமிழ்ப்பற்று, தமிழக மக்கள் தந்த பாராளுமன்ற தேர்தல் தோல்வியில் ஆரம்பமாகியது. தேர்தலுக்கு முன்பும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும், வட இந்தியபாணியில் அவர்களுக்கே உரிய மதவாத வித்தைகளையும் தமிழ் மண்ணிலும் நிகழ்த்தினர். ஆனால் தமிழக மக்கள் பேரிடியாய் பெரும் தேர்தல் தோல்வியை பரிசளித்தனர். மேலும் அடையாள அடிக்கல் நாட்டும் விழாக்களின் உதவியோடு, தமிழகத்தில் காலூன்ற முயன்றனர், தமிழக மக்கள் தெளிவாக“Go Back” என்று கருப்புக்கொடி காட்டி வழி அனுப்பி விட்டனர்.
தேர்தல் யுத்தியில் வல்லவர், வீரர், என்றெல்லாம் சங்கப் பரிவாரங்களால் புகழப்படும் அமித்ஷாவுக்கும், அவர் கட்சியினருக்கும் பெரும்சவாலாகவும், பின்னடைவாகவும் இருக்கும் தமிழகத்தில், காலூன்ற அவர்கள் தற்போது எடுத்துள்ள ஆயுதம் மொழிப்பற்று. சங்கப்பரிவாரங்கள் மிகவும் லாவகமாக ஒதுக்கித் தள்ளும் சமூகநீதியே, தமிழக அரசியலின் அடிப்படை என்று அறியாதவர்கள் இல்லை நம் பரிவார நண்பர்கள். ஆனால் சமூகநீதி என்ற நெருப்பு, அவர்கள் உயர்த்தி பிடிக்கும் சனாதன தர்மங்களை சாம்பலாக்கி விடும் என்பதை நன்கு உணர்ந்தமையால், மேல் பூச்சாக, மொழி என்ற அடையாள அரசியலை செய்து மக்கள் அபிமானத்தை பெற விரும்புகின்றனர். அதன் முன்னெடுப்புகளே பிரதமரின் “வணக்கம்”, திருக்குறள் பற்று, வேட்டி அணிந்த அடையாள  அரசியல், அமெரிக்காவில் தமிழ் மற்றும் சீன பிரதமரிடம் தமிழ். தமிழிலேயே மூச்சு விடுகிறார் பாவம்.

தேசிய அளவில் இத்தகு முயற்சிகள் நடக்கும்போது, மாநில அளவில் பற்று முற்றிப்போய், திருவள்ளுவருக்கு அரசியல் காவி நிறம்பூசி, அவரை பகவத் கீதையைப் பரப்பும் தூதுவராக்க பெரும் முயற்சியில் இறங்கிவிட்டனர். 2000 ஆண்டுகளாக திருக்குறளை சிறிதும் பொருட்படுத்தாத, நம் சங்கப்பரிவாரநண்பர்கள், பிரதமர் தாய்லாந்து நாட்டில், தாய்லாந்து மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் பிரதிகளை வெளியிட்டஉடன், தமிழக பரிவாரங்களுக்கு புதியசிந்தனைகள் உதித்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலம், பிரங்சு, ரஷியன், ஜப்பனீஸ், உள்ளிட்ட 82 உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்க பட்டுள்ளது. நம் மாநில பரிவாரங்களுக்கு தாய்லாந்து மொழி மட்டும் தான் படிக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால்தான் பிரதமர் தாய்லாந்து மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்ட பிரதிகளை வெளியிட்ட இரண்டு நாட்களில், அதை பகுத்தறிந்து, திருக்குறள் பகவத் கீதையின் தழுவல் என்பதையும், திருவள்ளுவர் வேதங்களை ஏற்கும் சனாதன இந்து என்றும் கண்டுபிடித்து, அந்த அறிய கண்டுபிடிப்பை டிவிட்டரில் வெளியிட்டுவிட்டனர்.

சமூகநீதி எப்படி அவர்கள் கையில் எடுக்க முடியாத நெருப்போ, அதேபோல் பொதுவுடைமை, சமத்துவம், சகோதரத்துவம் பேசும் திருக்குறளை தந்த ஐயன் வள்ளுவரும் சனாதனத்தை சுட்டெரிக்கும் அறமெனும் நெருப்பாவார். திருவள்ளுவருக்கு காவி பூசுவதை விடுத்து, அவரின் குறள்களை படித்து, அதன்படி நடக்க முயன்றால், சங்கப் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் கால் மட்டும் இல்லை கையையும் சேர்த்து ஊன வாய்ப்புகள் உண்டு. சங்கபரிவாரங்கள் ஐயனின் 1330 குறள்களை படித்து அதன்படி நடந்தால் நமக்கு பெரும் மகிழ்ச்சி. இல்லையேல் பின்வரும 7 குறளையேனும் படித்து அதன்படி நடக்க முயன்றால் இந்தநாடும், மக்களும்பெரும் பயன்பெருவர்.

குறள் 1: 
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்

தம்மை போன்று பிற உயிர்களை மதித்து, உதவி புரிந்து வாழ்பவனே உயிர் உள்ள மனிதனாக கருதப்படுவான் என்கிறார் திருவள்ளுவர். வாழ்வியல் முறையில் வேத மதத்தை ஏற்காத அனைவரையும் குறிப்பாக இஸ்லாமியர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பகையாக பார்த்து, அவர்கள் மீது வன்மத்தையும், அடிமை கட்டுபாடுகளையும் கட்டவிழ்த்து விடுபவர்களை பிணத்திற்கு சமமாக இழித்து கூறுகிறார் திருவள்ளுவர்.


குறள் 2:
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்.
பிச்சை எடுத்துதான் சிலர் வாழும் நிலை இருக்குமானால், அத்தகு உலகை படைத்தவன் அலைந்து கெட்டழிவான். படைத்தவன் என்பது இறைவனையும் குறிக்கும், ஆட்சி புரியும் மன்னனையும் குறிக்கும். மதப்பிளவுகளில் மட்டும் முழு உழைப்பை செலுத்தியதன் பலனாய், நாடு எதிர்க்கொள்ளும் பொருளாதார வீழ்ச்சியால், மக்களை வறுமையின் பிடியில் சிக்க வைத்த, தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த குறளை முதலில் படிக்கவேண்டும்.

குறள் 3:
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றங் கொளக் கிடந்தது இல்

நாட்டின் நிலையை அறிந்து, அதற்கேற்ப ஆட்சி நடத்தாத மன்னனுடைய ஆட்சி தழைத்து உயர வாய்ப்பில்லை. பண மதிப்பிழப்பு மற்றும் தவறான பொருட்கள் மற்றும் சேவைவரி(GST), போன்ற பொருளாதார கொள்கையினால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, பலஆயிரம்மக்கள்வேலை இழந்து, துன்பத்தில் வாழ்வதை, புரிந்து அந்நிலையை சரி செய்ய முயற்சிகள் செய்ய வேண்டும் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது. மாறாக பொருளாதாரம் மிகவும் செழுமையாக உள்ளது, மக்களிடம்  பணப்புழக்கம் மிகவும் அதிகமாக உள்ளது என்று உண்மை நிலையை மறைத்து, பொய்யுறைத்து வாழும் ஆட்சியாளர்களால் நாடு சீரழியும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

குறள் 4:
நோயெல்லாம் நோய் செய்தார்மேலவாம்நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவர்களுக்கே வந்துசேரும். சுயநலமான பதவி ஆசையின் காரணத்தால் மதத்தின் பெயரால் மசூதியை இடித்து பிறருக்கு துன்பம் விளைவித்தாலோ, காஷ்மீரில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழும் காரணத்தால், ராணுவத்தை பயன்படுத்தி அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பறித்து,அவர்களுக்கு கடும் துன்பம் விளைவித்தாலோ, மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்தால், அந்த இளைஞரை அடித்து கொன்று, அவருக்கும் அவர் சார்ந்த குடும்பத்தாருக்கும் மறையாத துன்பத்தை விளைவித்தாலோ, அதேபோன்று கொடிய துன்பங்கள் பல, துன்புறுத்தியவர்களுக்கு வந்தடையும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

குறள் 5:
எண்ணென்ப ஏனைஎழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

எண்ணும், எழுத்தும்மக்களுக்கு இரு கண்களைப் போன்றது, ஆகையால் மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் மூன்று மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொது தேர்வு வைத்து குழந்தைகளின் கற்றலுக்கு தடைக்கற்கள் நடுவதை வள்ளுவர் ஏற்கவில்லை.  NEET என்ற நுழைவு தேர்வு முறையை புகுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை அழிக்கும் ஆட்சியாளர்களை வள்ளுவர் ஏற்கவில்லை.

குறள் 6:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றே. தான் செய்யும் தொழிலில் ஒருவன் செலுத்தும் அர்பணிப்பே, அவர் உயர்வை தீர்மானிக்கும். நான்கு வர்ணங்களை நானேபடைத்தேன், என்று கடவுள் கிருஷ்ணர் கூறுவதுபோல, மனிதருக்குள் வேற்றுமை விஷத்தை விதைக்கும் பகவத்கீதை என்ற வேத நூலை, ஒரே குறளில் மறுத்த, பெருமை மிகு நாத்திகராக மின்னுகிறார் நம் திருவள்ளுவர். சமூக நீதியை 2000 ஆண்டுகளுக்கு முன்பே விதைத்த பெருமை திருவள்ளுவரையும் சாரும். இன்று வரை ஆகமம் என்ற அடிப்படையற்ற விடையங்களை கூறி அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பவர்களை ஐயன் வள்ளுவர் ஏற்கமாட்டார்.

குறள் 7:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக்காய் கவர்ந்தற்று.

இனிய சொற்கள் இருக்கும்போது, கடுமையான சொற்களை பயன் படுத்துபவர்கள், கனிகளை விடுத்துகாய்களை தேர்வுசெய்யும் பண்புடையவர்கள். இணைய தளங்களில் பொய் அடையாளங்களோடு, தங்கள் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை உடைய ஆளுமைகளை மிகவும் கொச்சையாக திட்டும் மாண்பிலா பண்பை திருவள்ளுவர் இழிவாக கருதுகிறார். பெண் போராளிகளுடைய ஒழுக்கத்தை தரம் தாழ்ந்து விமர்சிப்பதையும், அனைத்து பெண்களின் பெண்மையை சோதிப்பதையும் திருவள்ளுவர் ஒழுக்ககேடாக கருதுகிறார்.


சங்கப்பரிவாரங்களின் பட்டியலில் சிறந்த தலைவர்கள் இல்லாததின் வறட்சி, அவர்களை கண்ணில் படும் ஆளுமைகள் மீதெல்லாம் அரசியல் காவிபூசி தனதாக்க முயலும் பரிதாபநிலைக்கு தள்ளி விட்டது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வரலாற்றை உண்மைக்கு மாறாக மாற்றும்செயலை, சிறிதும் தயக்கமின்றி செய்யும் வல்லமை மிக்கவர்கள் நம் சங்கபரிவார நண்பர்கள்.இன்னும் 100 ஆண்டுகளில் நம் குழந்தைகள் பின்வரும் வரலாற்று திரிப்புகளை படிக்கும் பரிதாபம் நேர்ந்தாலும் ஆச்சிரியப்படுவதற்க்கில்லை.

1.காந்தி தற்கொலை செய்துகொண்டார்.
2.திப்பு சுல்தான் இந்தியாவை சீரழித்துவிட்டார்.
3.அம்பேத்கர் ஒரு இந்து சனாதன தலைவர்
4. சர்தார் வல்லபாய்படேல் ஒரு RSS தலைவர்
5.பெரியார் ஒரு ராமபக்தர்
6.நாராயண குரு நான்கு வர்ண பிரிவினையை ஆதரித்து பிரச்சாரம்செய்தார்
7.திருவள்ளுவர் பகவத்கீதையை ஆதரிக்கும் பொருட்டு திருக்குறளை இயற்றினர்.
8.திருவள்ளுவர் ஒரு இந்து துறவி.திருக்குறளை முதலில் சமஸ்கிருத மொழியில் தான் எழுதினார்

இப்படி பலபல பொய்களை பரவவிடும் வல்லமைமிக்கவர்கள் நம் சங்கபரிவார நண்பர்கள். சங்கபரிவாரங்கள் அரசியல் காவிபூசி மறைக்க முற்படும் ஆளுமைகளின் உயரிய கருத்துகளை, அதன் உண்மை தன்மை மாறாமல் மக்களிடம் கொண்டு செல்வதே எல்லாத பிரச்சனைகளுக்கும் தீர்வைத்தரும். மதத்தின் பெயரால் மனிதத்தை அழிக்கமுயல்பவர்களுக்கு பாடம் புகட்டி, நாட்டின் பன்மைத்தன்மையை பாதுகாக்க, திருவள்ளுவர் தொடங்கி அனைத்து ஆளுமைகளின் கருத்துகளை துணையாககொண்டு, அனைவரும் ஒன்றிணைவோம்.

--த.பூங்குழலி

;