கட்டுரை

img

சுகாதார நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் - ஜான் டிரேஸ்

நாவல் கொரோனா வைரஸ் பரவுகின்ற இந்த நேரத்தில், இந்தியா இரண்டு பிரச்சனைகளை எதிர் கொள்கின்றது. ஒன்று சுகாதாரப் பிரச்சனை. மற்றொன்று பொருளாதாரப் பிரச்சனை. இந்நோயால் மரணமுறுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அது சுருங்கியே உள்ளது. வருடத்திற்கு 80 லட்சம் மக்கள் மரணமுறும் ஒரு தேசத்தில் வெறும் 10 பேர்தான் இந்நோயால் இறந்துள்ளனர். ஆயினும் எண்ணிக்கை என்பது வேகமாக உயர்ந்து வருகிறது. இதனிடையே பொருளாதார நெருக்கடி தன்னுடைய முழு பலத்துடன் மோதுகிறது. லட்சக்கணக்கானோரை வேலைகளிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது. சுகாதார நெருக்கடியினைப் போன்று இது ஒன்றும் வர்க்கப்பாகுபாடு இல்லாமல் வருவதல்ல. ஏழை மக்களை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது.

பொருளாதாரம் மந்தமாகிறது

புலம் பெயர்ந்த  தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் - இப்படி முறைசாராத் துறையின் ஒவ்வொரு பகுதித் தொழிலாளி யும் இந்தப் பொருளாதாரச் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் பெரும் பகுதியினராக உள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் கும்பல் கும்பலாக பணி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் தங்களுடைய சம்பளத்தைக்கூட வாங்காமல் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் பலர் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ள காரணத்தால் மகாராஷ்டிர மாநிலத்திற்கும் தங்களுடைய சொந்த ஊருக்கும் இடையே மாட்டிக் கொண்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம், மற்ற மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவுகிறது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படுகின்றன. இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புவதற்கான எந்த நம்பிக்கையுமில்லை. வட இந்தியாவிலுள்ள பல உழைக்கும் மக்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கோதுமை அறுவடையானது, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அளிப்பதாக அது இல்லை. இது வெறும் முன்னோட்டம் மட்டுமே.

உதவி இல்லாமல் ‘லாக்டவுன்’ நீடிக்க முடியாது

இந்தப் பொருளாதார நெருக்கடியானது, சில உடனடியான பரந்த அளவிலான நிவாரண நடவடிக்கைகளின் தேவைகளை உணர்த்துகிறது. நோய்த் தொற்றின் பரவலைக் குறைப்பதற்கு ‘லாக்டவுன்’ தேவைப்படலாம். ஆனால் ஏழை மக்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. அவ்வாறு தொடர்ந்து இருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டால், அவர்களுக்கு உதவி தேவைப்படும். இந்த விசயத்தில், இந்தியாவுக்கும்  நல்ல சமூக நலத்திட்டங்கள் அமலாகக்கூடிய வளர்ந்த நாடுகளுக்குமிடையே முக்கியமான வேறுபாடு உள்ளது. கனடாவிலோ , இத்தாலியிலோ ஒரு சராசரிக் குடிமகன் லக்டவுனின் போது வீட்டிற்குள்ளேயே இருக்க முடியும். ஆனால் ஒரு இந்தியக் குடிமகனுக்கு அவ்வாறு இருப்பதற்கான சக்தி கிடையாது.

சமூக நலத்திட்டங்களை பயன்படுத்துங்கள்...

‘நேரம்’ மிகவும் பொன் போன்றது என்பதால், அரசு எடுக்கும் முதல் நடவடிக்கையானது தற்போது நடைமுறையில் உள்ள சமூகநலத் திட்டங்களை, ஏழை மக்களுக்கு உதவுகின்ற வகையில் சரியாகப் பயன்படுத்துவதாகும். பென்ஷன், பொது விநியோக முறை, மதிய உணவு, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பென்ஷனை முன்கூட்டியே கொடுக்கலாம். பொது விநியோக முறையில் கூடுதலாகப் பொருட்களை வழங்குவது, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் பாக்கி வைத்துள்ள ஊதியத்தை உடனடியாகக் கொடுப்பது, விரிவான முறையில் ரேசன் பொருட்களை பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் வழங்குவது - இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். இதற்கு மத்திய அரசிடமிருந்து பெரிய அளவில் நிதி உதவி தேவைப்படுகிறது. அரசானது, கார்ப்பரேட்டுகளை கை தூக்கி விடுவதற்கு தன்னுடைய நிதி ஆதாரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளைச் சார்ந்தவர்கள், தங்களை மீட்டெடுக்க உதவுமாறு அரசினை நிர்ப்பந்திப்பார்கள்.    

இதனிடையே, அத்தியாவசியச் சேவைகளை மொத்தமாக இழுத்து மூடுவது, மக்களின் துயரத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். பொதுப் போக்குவரத்து, அரசு நிர்வாக அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் - இப்படி ஏராளமான சேவைகள் பல மாநிலங்களில் பல மட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவற்றில் சிலவற்றை நியாயப்படுத்த இயலும். மற்றவை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். நாம் ஒரு சுகாதார நெருக்கடியினை மட்டும் சந்திக்கவில்லை. ஒரு பொருளாதார நெருக்கடியினையும் சந்தித்துக் கொண்டுள்ளோம் என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். பொதுச் சேவைகளை நிறுத்துவது, சுகாதார நெருக்கடியினைக் கையாள உதவும் என்ற போதிலும், பொருளாதார விளைவுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மதிப்பிடுகிற போது, இரண்டு நோக்கங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றபோது, அதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. தன்னைப் பாதுகாத்துக் கொள்வது என்பது ஒன்று; பொதுவான பாதுகாப்பு என்பது மற்றொன்று.   இதில், ‘தன்னைப் பாதுகாத்துக் கொள்வது’ என்பது, தானும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற பயத்திலிருந்து வருவது; ‘பொதுவான பாதுகாப்பு’ என்பதில் கிருமியானது பரவுவதிலிருந்து தடுப்பதற்கான பொது முயற்சியில் இணைவது.’

படைப்பாற்றலை வெளிப்படுத்துவோம்

இதேபோன்ற நியாயங்கள், எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பொதுச் சேவைகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். அரசாங்க (பொது) ஊழியர்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது என்பது மட்டும் முக்கியமானதல்ல, ‘பொது நோக்கம்’ என்பது முக்கியமானது. மேலும் ‘பொது நோக்கம்’ என்பது இழுத்து மூடும் நடவடிக்கைகளால் ஏற்படும் பொருளாதார விளைவுகளையும் கணக்கில் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு பொதுச் சேவையானது, சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் எனில் அது உடனே நிறுத்தப்படலாம். இந்தக் காரணத்தினாலேயே பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஆனால் அதே நேரத்தில், பெரிய அளவில் எந்தவித சுகாதார சீர்கேட்டையும் விளைவிக்காத, சாதாரண ஏழை, எளிய மக்களுக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்யக்கூடிய சேவைகள் தொடர்ந்து இயக்க வேண்டும். இது, சுகாதாரச் சேவைகளுக்கும், பொது விநியோக முறைக்கும் மட்டும் பொருந்தாது. மாவட்ட மற்றும் உள்ளூர் அளவில் உள்ள அரசு நிர்வாக அலுவலகங்கள் உட்பட பல பொதுச் சேவை அலுவலகங்களுக்குப் பொருந்தும். சாதாரண ஏழை, எளிய மக்கள் இந்த அலுவலகங்களின் சேவைகளை பல்வேறு மாவட்டங்களில் நம்பி உள்ளார்கள். அவைகளை ஒட்டு மொத்தமாக இழுத்து மூடுவதென்பது, பொருளாதார நெருக்கடியை மேலும் கடுமையாக்கவே செய்யும். சுகாதார நெருக்கடியை தடுப்பதற்கும் பெரிய அளவில் அது உதவாது.

இதுபோன்ற சேவைகளைத் தொடர்ந்து கொடுப்பதற்கு சிறிது முன்முயற்சியும், புதுமையான அணுகுமுறையும் தேவைப்படுகின்றன. அத்தியாவசியச் சேவைகள் குறித்த ஒரு வெளிப்படையான பட்டியலும், பணியிடத்தில் கொரோனா நடவடிக்கைகள் தயார்நிலை குறித்த அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வைத்திருப்பதென்பது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். பல பொது இடங்கள் இன்னும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதவையாகவே உள்ளன. சில சேவைகளை புதுமையாக நாம் செய்ய முடியும். உதாரணமாக அங்கன்வாடி மையங்களை, அங்கிருக்கும் குழந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, பொதுச் சுகாதாரத்திற்கான மையங்களாக மாற்றிட இயலும். தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளோடு பொது இடங்கள் பலவற்றை, கைகழுவுதல், தூரத்தில் நிற்றல் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதற்கான இடங்களாகப் பயன்படுத்தலாம்.

பயனுள்ள சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது உடனடி அவசியமாகிறது.இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கையில், மிக விரைவிலேயே சில மாநில அரசுகள் பொது விநியோக முறையை செயல்படுத்துவதையோ, நல்ல குடிநீர் வழங்குவதையோ மேற்கொள்வது சிரமமாகிவிடும் எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அது பொருளாதார நெருக்கடியை மட்டுமல்ல, சுகாதார நெருக்கடியையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இந்தியாவில் பலவீனமான சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் வெட்ட வெளிச்சமாவதற்கு இது உகந்த நேரமல்ல.

தமிழில்: செ.சிவசுப்பிரமணியன்
நன்றி: தி இந்து (ஆங்கிலம்) 23.3.2020

 

;