தலையங்கம்

img

சூழும் ஆபத்து!

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்; மீண்டும் தமிழகத்தின்  பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.   இரண்டாம், மூன்றாம் சுற்றாக நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட் டங்களிலும் புதுச்சேரியிலும் புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டு மொத்த உணர்வுக ளையும் உதாசீனப்படுத்துவதோடு, காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் நய வஞ்சக முயற்சியில் தொடர்ந்து மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. திறந்தவெளி அனுமதி முறை யில் 2018 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் முதல் சுற்று அனுமதியை மோடி அரசு அளித்தது. குறிப்பாக பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான  வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓ.என்.ஜிசி, ஐஓசி ஆகிய நிறுவனங்களுக்கு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப் பட்டது. மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்தவெளி அனுமதியும் தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது.  இந்த அனுமதியின் மூலம்  நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன்,  ஷெல் கேஸ், ஷெல் ஆயில்  என நிலத்தின் கீழ் இருக்கும் எந்த ஒரு வளத்தையும் இந்த நிறுவனங்கள் எடுத்துக் கொள்ள முடியும்.  எந்த சிறப்பு அனுமதியும் பெறத்தேவையில்லை. 

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் மண்ணின் வளங்கள் முழுமையாக அழியும். அதனை நம்பியுள்ள விவசாயிகளும் வாழ்வா தாரத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். குறிப் பாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவேரி டெல்டா பகுதி முழுமையும் பாலைவன மாக மாறும்.  சட்டமன்றத்தில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கம்போல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காலத்திலும் தமிழக அரசு அனுமதிக்காது. மத்திய அரசே அனு மதித்தாலும் அதற்கு மாநில அரசின் ஒப்புதல் அளிப்பது அவசியம். ஒரு போதும் மாநில அரசு அனுமதி அளிக்காது என்று பதிலளித்துள்ளார். இது மக்களிடம் எந்த நம்பிக்கையையும ஏற்படுத்தாது.

காரணம் ஏற்கனவே நீட்தேர்விற்கு எதிராக சட்டமன்றத்தில் போட்ட தீர்மானம் என்ன ஆனது?  அல்லது நீட் தேர்வை அனுமதிக்க முடி யாது என தமிழக அரசு தேர்வை நடத்த  மறுத்ததா? ஒரு புறம் எதிர்ப்பது போல் எதிர்த்துக்கொண்டே மறுபுறம் மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்க ளை எடப்பாடி அரசு அமல்படுத்தி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.   ஏன் இதே ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் கூட  மேற்கொள்ள கூடாது என மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் காவல்துறையை கொண்டு அடக்குமுறை ஏவப்பட்டதே. அதன் நோக்கம் என்ன?  எடப்பாடி அரசிற்கு உண்மையில் தமிழக விவசாயிகள் மீது அக்கறை இருக்கிறதென்றால்; உடனே டெல்டா மாவட்டங்களை  பாதுகாக்கப் பட்ட விவசாய மண்டலமாக அறிவித்திட வேண்டும்.

;