தலையங்கம்

img

கூர்மையடையும் முரண்பாடு

 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் அமலாக துவங்கிய காலகட்டத்தில் உலக முதலாளித்துவ பொருளாதாரம் தொடர்ச்சியான பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. அப்போதுதான் ஜி 20 அமைப்பு உருவாக்கப் பட்டது. பொருளாதார நெருக்கடிகளை ஆய்வு செய்து அதை எதிர்கொள்வதற்கு சர்வதேச அள வில் பல முனைகளில் வழிகளை கண்டறிவதும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதும் அதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீண்டு பயணிப்பதும் தான் இதன் இலக்கு. ஆனால் அப்போது பொரு ளாதார அறிஞரான தாமஸ் ஹாப்ஸ் என்பவர் பளிச்சென்று இதை விமர்சித்தார். ஜி 20 என்கிற இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதே, “எல்லோ ரும் ஒன்று சேர்ந்து எல்லோர் மீதும் நடத்துகிற போர்” போன்றதுதான் என்றார் அவர்.  ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து முடிந்துள்ள ஜி20 உச்சி மாநாட்டின் முடிவற்ற முடிவும் இப்படித் தான் அமைந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து எல்லோர் மீதும் போர் நடத்திக் கொள்கிறார்கள்; அதன் துவக்கப் புள்ளியாக அமெரிக்க ஏகாதி பத்தியம் இருக்கிறது. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதி பத்தியம் என்று சொன்னார் மாமேதை லெனின். ஏகாதிபத்தியத்தை நோக்கிய பயணத்தில் - ஒட்டு மொத்த உலகின் வளங்களும் தனது காலடியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற பேராதிக்கத்தை நோக்கிய பயணத்தில் - உலக முத லாளித்துவத்தின் தலைமையிடமான அமெ ரிக்கா, ஒட்டு மொத்த உலகையே பலவந்தமாக மிரட்டுகிறது. இதனால், அமெரிக்காவின் எதிரி களான ரஷ்யா, சீனா மட்டுமல்ல; அமெரிக்கா வின் கூட்டாளிகளான - சக முதலாளித்துவ நாடு களான ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய யூனி யன் நாடுகளே கூட அமெரிக்காவோடு முரண்படுகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கிடை யிலான முரண்பாடு கூர்மையடைகிறது.  இப்போதைய முரண்பாடு, லாபத்தை குவிக்க முடியாத மிக ஆழமான நெருக்கடியில் சிக்கி யுள்ள நிலையில், உலகின் வளங்களை கைப்பற்று வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடு. 2008ல் அமெ ரிக்காவில் துவங்கிய பொருளாதார நெருக்கடி யிலிருந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவம் மீள முயற்சிக்கிறது. ஆனால் முடியவில்லை. பெரும் கார்ப்பரேட் முதலாளி களின் மூலதனம் லாபத்தை தேடி அலைகிறது. உலக நாடுகளின் வளங்களையும் சொத்துக்களை யும் மிக பிரம்மாண்டமான உழைப்பு சக்திகளை யும் சந்தையையும் மிரட்டியும், நயந்து பேசியும், நயவஞ்சகமாக சூழ்ச்சி செய்தும் கைப்பற்றி சூறை யாட முயற்சிக்கிறது. இதற்கு தலைமை யேற்றுள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம் டிரம்ப் அரசை இயக்குகிறது. அதனால்தான் டிரம்ப் திடீ ரென சீனாவை மிரட்டுகிறார்; திடீரென வட கொரியாவுடன் கைகுலுக்குகிறார்; திடீரென இந்தியாவை செல்லமாக அடித்து விளையாடு கிறார்; திடீரென ஈரானை தாக்க உத்தரவு போடு கிறார்; மூலதனத்திற்கு சாதகமாக நிலைமை மாறக்கூடும் என்று கருதி அந்த உத்தரவை அவரே கிழித்துப்போடுகிறார். ஜி20 மாநாட்டிலும் இதைத்தான் அவர் செய்தார். ஆனால் மற்ற வர்கள் ஏற்கவில்லை. மாநாடு தோல்விய டைந்தது. முரண்பாடு மேலும் கூர்மையாகிறது.

;