தலையங்கம்

img

விதை நெல் விற்கும் ஊதாரித்தனம்...!

இந்தியாவின் பொதுத்துறை பங்குகளை விற்று 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதி திரட்ட போவதாக நிதிநிலை அறிக்கையில்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2008 ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து  இந்திய பொரு ளாதாரத்தை காப்பாற்றியது இதே பொதுத்துறை நிறுவனங்கள்தான். அந்த பொதுத்துறை நிறுவ னங்களின் கழுத்தை நெரித்து காவு கொடுக்கும் விதத்தில் பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்க ளில் இதுவரை அரசின் பங்கு மட்டும் 51 சதவிகிதம் இருந்து வந்தது. அதனை மாற்றி இனி அரசு நிறுவனங்களின் பங்குகளை யும் சேர்த்து 51 சதவிகிதம் இருந்தால் போதும் என்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. உதாரண மாக  ஒரு நிறுவனத்தில் அரசுக்கு 51 சதவீதம், எல்.ஐ.சிக்கு 20 சதவீத பங்குகள் இருந்தால் இனி அரசு 31 சதவீதம் வைத்திருந்தால் போதும். 20 சதவீத பங்குகளை விற்று விடலாம். அதாவது இதுவரை கொஞ்சம் கொஞ்சமாக பொதுத்துறையை விற்று வந்தவர்கள் இனி முழுவதுமாக விற்க வழிமுறை களை உருவாக்கியுள்ளனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் “யானை புக்க புலம் போல’’ பொதுத்துறை நிறுவ னங்களை மொத்தமாக விற்க முடிவு செய்தி ருக்கின்றனர். 

பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்காகவே, அதன் பங்குக ளை விற்கிறோம் என மோடி அரசு காரணம் கூறுகிறது. அப்படியானால், 2017-18ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை  மோடி அரசு ரூ.1 லட்சம் கோடி வரை விற்பனை செய்தது. அந்த பணம் எங்கே சென்றது? அந்த பணத்தை கொண்டு எத்தனை பொதுத்துறை நிறுவனங்க ளின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது?  உண்மையில் அந்த நிதி பொதுத்துறை நிறுவனங்க ளின்  செயல்திறனிற்காக செலவிடப்பட்டிருந்தால்,  ஏன் மீண்டும் இந்த பட்ஜெட்டில் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறை பங்குகளை விற்க முடிவு செய்ய வேண்டும்.  ரயில்களை தனியாரிடம் கொடுக்கும் வேலை துவங்கியிருக்கிறது. அதோடு அந்த ரயில்களில் கட்டணமும் உயரும் என்பதை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.  

சேலம் உருக்காலையின் பங்குகளை விற்க மோடி அரசு உலகளாவிய டெண்டர் அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதற்கு மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.  தமிழக முதல்வர் மற்றும்  எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட் டோரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள னர்.   ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மோடி அரசு தீவிரப்படுத்தி வருவது நல்லதல்ல. இதனை தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். 

;