தலையங்கம்

img

பட்ஜெட் : மக்கள் மீது துல்லிய தாக்குதல்

மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசின் முதல் பட்ஜெட் முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளின் தொடர்ச்சி என்பதையும் தாண்டி தாராள மயத்தையும், தனியார்மயத்தையும் மேலும் அதிகமாக திணிப்பதாகவும், கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதாக வும், ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிதைப்ப தாகவுமே அமைந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தை திருப்திப்படுத்துவது போல நாக்கில் தேன் தடவு கிற சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவர்களது வாழ்க்கையிலும் மண் அள்ளிப் போடுவதாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.  பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தற்போது அன்றாடம் உயர்ந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு  தலா ரூ.2 செஸ் வரியாக வசூலிப்பது நடுத்தர வர்க்கத்தினரை மட்டுமின்றி விவசாயிகள், மீனவர்கள், வர்த்த கர்கள் என அனைவரையும் பாதிக்கும். அத்தியா வசியப் பொருட்களின் விலைவாசி மேலும் உயரும். பண வீக்கமும் அதிகரிக்கும். 

அந்நிய கார்ப்பரேட் முதலாளிகளின் மனங்களை குளிரச் செய்வதற்கான பல அறி விப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இன்சூரன்ஸ் ரயில்வே, சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, ஓய்வூதியத் துறையிலும் அந்நி யர்கள் புகுந்து விளையாட இந்த பட்ஜெட் கதவு திறந்து விடுகிறது. பட்ஜெட்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை வரி வருவாய் குறைந்து கொண்டே வருவதால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை விற்பதன் மூலம் பெரும் தொகையை திரட்ட முடியும் என்று கூறியிருந்தது. மேலும் இந்த பட்ஜெட்டில் பொதுத்துறை பங்கு களை விற்பதன் மூலம் 1.05 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் சுய சார்பு பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்படும் கொடும் தாக்குதலாகும்.

மகளிர் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 5.1 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாக குறைக் கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீடும் அவர்களது மக்கள்தொகை விகிதத்திற்கேற்ப இல்லை. கிராமப்புற மக்க ளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குகிற தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடும் முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது ரூ.1000 கோடி அளவிற்கு வெட்டப்பட்டுள் ளது. பிரதமரின் கனவுத்திட்டம் என்று அவர்க ளால் சொல்லப்படுகிற தூய்மை இந்தியா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 4,500 கோடி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.  மொத்தத்தில் எதிர்வரும் காலத்தில் அந்நிய முதலாளிகளால் ஒட்டுமொத்த இந்திய பொரு ளாதாரமும் சூறையாடப்படுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. வலுவான போராட்டங்கள் மூலமே இந்த பேராபத்தை தடுக்க முடியும்.

;