தேசம்

17-வது மக்களவைக்கு கிரிமினல் வழக்கில் தொடர்புடைய 233 பேர் தேர்வு

புதுதில்லி, மே 26-17ஆவது மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் தொடர்பான விவரங்களை ஆராய்ந்து வெளியிட்டுவரும், அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்), தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளது. இதன் முடிவில் மக்களவைக்குத் தேர்வான இரண்டில் ஒருவர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதாவது ஏடிஆர் ஆய்வின் மூலம், “தேர்தலில் வெற்றிபெற்ற 542 பேரில் 539 பேரின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வுசெய்தனர்.இதில், 233 பேர் (43 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2009 இல் 30 சதவீதம் பேர் மீதும், 2014 தேர்தலில்34 சதவீதம் பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருந்துள்ளன. ஆனால், இவை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது 30 பேர்மீது கொலை வழக்குகளும், 19 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன.மாநிலங்கள் அளவில், கேரளாவில் மொத்தமுள்ளவர்களில் 90 சதவீத எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கேரளாவைத் தொடர்ந்து பீகாரில் 82 சதவீதம் பேர் மீதும், தெலுங்கானாவில் 52 சதவீதம் பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, பாஜக சார்பில் வெற்றிபெற்ற 303 பேரில் 116 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் ஒருவர்மீது பயங்கரவாத வழக்கும் உள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;