தேசம்

img

மூத்த வழக்குரைஞர்கள் ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங் இல்லங்களில் சிபிஐ ரெய்டு

புதுதில்லி, ஜூலை 11- உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் தம்பதிய ரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். இவர் மனித உரிமை சார்ந்த வழக்குகளைக் கையாள்வதில் புகழ்பெற்றவர். இவரது கணவர் ஆனந்த் குரோவர். இவரும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருக்கிறார். தம்பதியர்களான இவர்கள் இருவரும் மனித உரிமைக்காகப் போராடும் ’லாயர்ஸ் கலெக்டிவ்’ என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் 2006-07 முதல் 2014-15 வரையிலான ஆண்டுகளில் வெளிநாட்டு நிதி ரூ.32.39 கோடியைத் தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்ற ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவருக்குச் சொந்தமாக மும்பை மற்றும் தில்லியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ வியாழ னன்று (ஜூலை 11) சோதனை நடத்தி வருகிறது. வெளி நாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக வும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் தவறான முறையில் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றதாகவும் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இது ஒரு பழிதீர்க்கும் நடவடிக்கையாகும் என்று குற்றம்சாட்டியுள்ளார். நீண்ட காலமாகச் சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நலனுக்காகப் பாடுபட்டு வரும் இவ்விரண்டு மூத்த வழக்கறிஞர்களுக்கு எதிரான இச்செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். “அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு எதிரான அரசின் மிகப் பெரிய ஆயுதமே இதுபோன்ற குற்றச்சாட்டுகளும் ரெய்டுகளும்தான்” என்று கூறியுள்ள மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “இது அரசின் பழிதீர்க்கும் நடவடிக்கை” என்று குற்றம்சாட்டியுள்ளார். வியாழன் காலை 5 மணி முதலே மும்பை மற்றும் தில்லியில் உள்ள தங்களது அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்றதாக இந்திரா ஜெய்சிங் ஊடகங்களிடம் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டின் 50 தலைசிறந்த தலைவர்களுக் கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திரா ஜெய்சிங் 20ஆம் இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;