மாநிலங்கள்

img

குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தப் போராட்டம்

தெலங்கானா மாநில அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர்கள் தனியார்மயத்திற்கு எதிராக நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம்  மிகவும் குறிப்பிடத்தக்க போராட்டங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது. 48 ஆயிரம் ஊழியர்கள் அக்டோபர் 5இலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் சந்திரசேகர் ராவின் தடித்தனமான அச்சுறுத்தல்கள், காவல்துறையினரின் அடக்குமுறைகள்,  பழிவாங்கல் நடவடிக்கைகள் அனைத்தையும் துச்சமெனத் தூக்கி எறிந்து வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து தொழிலாளர்கள் நடத்திவருவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

சாலைப் போக்குவரத்துக் கழகத்தை, அரசாங்கத்துடன் இணைத்திடவும்,  ஊதியம் மாற்றம் கோரியும், எண்ணற்ற பணியிடங்களை நிரப்பக் கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்துக் கழகத்தை, அரசுடன் இணைத்திட வேண்டும் என்று அவர்கள் கோருவது, எதிர்காலத்தில் போக்குவரத்துக் கழகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சிகளைத் தடுத்துநிறுத்துவதற்கேயாகும்.  

வேலைநிறுத்தம் தொடங்கியவுடனேயே, முதலமைச்சர், அக்டோபர் 6ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். வேலைநிறுத்தத்தை உடைப்பதில் தோல்வியடைந்த பின்னர், முதலமைச்சர், நவம்பர் 2 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 5,100 மார்க்கங்கள் (routes) தனியாரிடம் தரப்படும் என்று அறிவித்தார்.  மேலும் வேலைநிறுத்த்த்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நவம்பர் 5க்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், இதர மார்க்கங்களும் தனியாரிடம் தரப்படும் என்றும் அச்சுறுத்தினார்.

வேலைநிறுத்த்த்திற்கு மக்கள் மத்தியில் விரிவான அளவில் ஆதரவு பெருகியிருக்கிறது. அனைத்து எதிர்க் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவினை  வெளிப்படுத்தி இருக்கின்றன. அக்டோபர் 19 அன்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தத்தை (பந்த்) அறிவித்து, நடத்தியது முழு வெற்றி பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேரணிகள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. போராடும் போக்குவரத்து ஊழியர்களுக்கு  ஒருமைப்பாடு தெரிவித்து பல்வேறு மாநிலங்களிலும் ஆதரவு இயக்கங்கள் நடந்திருக்கின்றன.

தெலங்கானா சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தனியார்மயத்திற்கு எதிராக, அதிலும் குறிப்பாக பொதுப்போக்குவரத்து போன்ற அடிப்படை சேவைகளைத் தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு எதிராக, அதிகரித்துவரும் உறுதியின் அறிகுறியாகும். முன்னதாக, 2018 அக்டோபரில், ஹரியானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் பாஜக மாநில அரசாங்கம் 700 போக்குவரத்து மார்க்கங்களை தனியாரிடம் ஒப்படைத்திட முடிவு  செய்ததற்கு எதிராக 17 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அப்போதும் அந்த வேலைநிறுத்தத்திற்கும் விரிவான அளவில் ஆதரவு கிடைத்ததைப் பார்த்தோம்.

மோடி அரசாங்கம் மிகவும் பொறுப்பற்ற முறையில் தனியார்மயத்தில் இறங்கியிருக்கிறது. இது, ரயில்வே, ராணுவ உற்பத்தி, நிலக்கரிச் சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள் (பிபிசிஎல்) மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்துத் துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்திடத் திட்டமிட்டிருக்கிறது. இவர்களின் இத்தகைய தனியார்மய முயற்சிகளை நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுபடுத்தி முறியடித்திட வேண்டியிருக்கிறது. தனியார்மயத்திற்கு எதிராக மக்களின் மத்தியில் விரிவான அளவில் பொதுக்கருத்தை உருவாக்குவதுடன் தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாகவே ஆட்சியாளர்களின் தனியார்மயத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை  முறியடித்திட முடியும்.

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் இதற்கான வழியைக் காட்டியிருக்கிறது.

(நவம்பர் 7, 2019)

(தமிழில்: ச.வீரமணி)

   

 

;