விளையாட்டு

img

தோனியின் ரன் அவுட் அதிர்ச்சியால் ரசிகர் மரணம்

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்களை துரத்தி சென்ற இந்திய அணி தொடக்கத்திலேயே மிடில் ஆர்டர் வீரர்களை இழந்தது. இருப்பினும் ஆல்ரவுண்டர் ஜடேஜா, அனுபவ வீரர் தோனி ஆகியோர் மான்செஸ்டர் களத்தில் நங்கூரம் அமைத்து வெற்றிக்காகப் போராடினர்.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா கடைசி கட்டத்தில் ஆட்டமிழக்க தோனி மட்டும் இந்திய அணியின் இறுதி தூணாகப் போராடினார். தோனி இருப்பதால் எப்படியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இந்திய கிரிக்கெட் உலகம் இமைகள் அசையாமல் போட்டியை உற்றுநோக்கியது. ஆனால் கெடுவாய்ப்பாக தோனி ரன்  அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார். தோனி ஆட்டமிழந்த அடுத்த சில நிமிடங்களில் பின் வரிசை வீரர்கள் சீட்டுக்கட்டாய் சரிய இந்திய அணி அரையிறுதி  வாய்ப்பை இழந்தது. இந்நிலையில்  கொல்கத்தாவைச்  சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் மைதி (வயது 33) ஹாட்ஸ்டார் மூலம் தனது   ஸ்மார்ட்போனில் இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தோனி ரன் அவுட் ஆனதும் தரையில் மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  ஸ்ரீகாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

;