tamilnadu

img

பரிதவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் - பசியாற்றும் சி.ஐ.டி.யு. 

கோவை: கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை விட, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. நாடு முழுவதும் பல நூறு கிலோ மீட்டர் பொருட்களையும், குழந்தைகளையும் சுமந்து கொண்டு நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் காட்சிகளே அதற்கு சாட்சியாக உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இன்ஜினியரிங், பவுண்டரி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை சார்ந்து பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா வைரஸ் காரணமான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இத்தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இழந்துள்ளனர். சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமல் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உணவிற்கு வழியின்றி பசியோடு தவிக்கும் வட மாநில தொழிலாளர்கள் பசியாற சிஐடியு தொழிற்சங்கம் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு வருகிறது. மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஹர்சா மஹால் திருமண மண்டபத்தில் தினமும் உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்படுகிறது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் இந்த உணவு தயாரிக்கும் பணிகளில் தொழிற்சங்கத்தினர் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். சிஐடியுவின் ஹோட்டல் தொழிலாளர் சங்கம் உணவு செய்யும் இந்த பணியையும்,  இதனை பேக்கிங் செய்ய, விநியோகிக்க என இதர சிஐடியு இணைக்கப்பட்ட சங்கங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. வட மாநில தொழிலாளர்களுக்கும், உணவின்றி தெருவில் நிற்கும் ஆதரவற்று தவிப்பவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை திறன்பட மேற்கொண்டு வருகிறது. சிஐடியுவின் இந்த முயற்சியால் பலரும் பசியாறி வருகின்றனர். 
இதுதொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ராஜூ என்பவர் கூறுகையில், 'எங்களது அறையில் 20 பேர் தங்கி வேலை செய்து வந்தோம். சுந்தராபுரம் கணேசபுரம் பகுதியில் மட்டும் 200 அசாம் மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காரணமாக அனைவரும் வேலையிழந்து உள்ளோம். பல கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. கையில் இருந்த பணமும் குறைந்து வருகிறது.  எப்படியாவது கையில் உள்ள சிறிய தொகையை கொண்டு பொருட்களை வாங்க சென்றால் காவல் துறையினர் தாக்குகின்றனர். உணவிற்கு வழியில்லாமல் அறைகளில் முடங்கியுள்ளோம். உணவு கிடைக்க அரசு உதவ வேண்டும்.  
இப்போது சிஐடியு சங்கத்தினர் எங்களுக்கு ஒருவேளை தினமும் உணவு அளித்து வருகின்றனர். இதுபோக அரிசி, பருப்பு, எண்ணை ஆகியவற்றை கொஞ்சம் வழங்கியுள்ளனர். இதனைக்கொண்டு சமாளித்து வருகிறோம். அவர்களும் எத்தனை நாளைக்குத்தான் எங்களுக்கு உணவு கொடுக்க முடியும். அரசு எப்படியாவது இங்கு இருக்கும் வடமாநில தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் நிலைமையை அறிந்து எங்கள் குடும்பத்தினர் மிகவும் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  கொரோனாவினால் வேலையிழந்து, வருமானம் இழந்து, சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்காத நிலை உள்ளது. உணவு கிடைக்காமல் பல இடங்களில் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். சிஐடியுவினால் முடிந்தளவு உணவு வழங்கி உதவி வருகிறோம். ஒரு தொழிற்சங்கமோ, அமைப்போ நிரந்தரமாக இதனை தொடர முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆகவே, அரசுதான்  உதவ முன் வர வேண்டும். 
ஆனால், இப்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்கிற கணக்கே அரசிடம் இல்லை. உடனடியாக வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். வட மாநில தொழிலாளர்களுக்கு உணவும், நிவாரணமும் கிடைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலை நீடித்தால் பசியோடு பரிதவிக்கும் தொழிலாளி ஊரடங்கை உதறித்தள்ளி தெருவில் இறங்கும் ஆபத்து உள்ளது. இந்த ஆபத்தை அரசு உணரவேண்டும். கேரள மாநிலம் போல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் விருந்தினர்கள் என்கிற பார்வையோடு தமிழக அரசு அணுக வேண்டும்  என்றார். 
அ.ர.பாபு, கோவை.
 

;