tamilnadu

img

பேராபத்தை முறியடிக்க ஒன்றுதிரளுங்கள்... மதச்சார்பற்ற சக்திகளுக்கு கி.வீரமணி அழைப்பு

சென்னை:
இந்தியா ‘இந்து நாடு’ என்று ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கும்பேராபத்தை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபடவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சுருக்கம் வருமாறு:-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுக்க முழுக்க‘ஹிந்துத்துவ’ அமைப்பு என்பது உலகறிந்த செய்தி. அது இதுவரை - வேறு எந்த அமைப்பும் பெறாத‘‘பெருமை’’பெற்ற இயக்கம். ஆம், மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம். காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே பயிற்சி எடுத்த இயக்கம்.பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பலமொழிகள், பல நாகரிகங்கள் உள்ள நமதுநாட்டில், ஒரே மதம் - ஹிந்து மதம்; ஒரே மொழி - சமஸ்கிருதம்; ஒரே கலாச்சாரம், சனாதன வைதீக வேத தர்ம வருணாசிரம தர்மமும்தான் இந்த நாட்டில் இருக்கவேண்டும் என்றலட்சியங்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கூறுவதில் தயங்காத இயக்கம்.சமூகநீதி - இட ஒதுக்கீட்டை ஏற்காத இயக்கம் மட்டுமல்ல; அதைப் பகிரங்கமாக வாய்ப்பு வரும்போது வற்புறுத்தவும் தயங்காத இயக்கம். வெளிப்படைத் தன்மைக்கும்,இந்த இயக்கத்திற்கும் வெகுதூரம்! ‘‘தேசிய ஒற்றுமை நாள்’’ என்று சர்தார்வல்லபாய் பட்டேலைக் காட்டி, அந்த  நாளைக் கொண்டாடிய பிரதமரும், மத்திய-மாநில அரசுத் துறைகளும் கையாண்ட சொல்லாம் - ‘வேற்றுமையில் ஒற்றுமை’என்பதே!இந்துக்கள் மெஜாரிட்டியாக உள்ளதால் இது  `ஹிந்து நாடு - ஹிந்துராஷ்டிரம்’ என்று கூறும்போது, இதே அரசமைப்புச் சட்டம் ஏற்றுஅங்கீகரித்துள்ள அடிப்படை உரிமைகளில் முக்கியமான ஒன்றான சிறுபான்மையோர் கல்வி உரிமைகள், பண்பாடு, மொழி காப்பாற்றப்படும் என்ற அடிப்படை உரிமைப் பிரிவின்கதி என்னவாகும்?  இது அடிப்படை உரிமை மட்டுமல்ல; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றப்பட முடியாத அடிக்கட்டுமான பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் உரை, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். நிரந்தர லட்சியம் என்பது அவரதுபிரகடனமானால், அவரும், அவரது அமைப்பும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அதனை ஏற்றுக் கொள்ளாத (ஜனநாயகத்திற்குப் பதிலாக  எதேச்சதிகாரத்தை, பாசிசத்தையே  மூச்சுக் காற்றாகக் கொண்ட)அமைப்பு என்பதை வெளிப்படையாக சொல்லாமல், கருத்தால் உணர்த்துகின்றனர்.நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூகநீதியில் நம்பிக்கை உள்ளோரே, இந்த ஆபத்தை எதிர்கொள்ள ஆயுத்தமாகுங்கள். இல்லை என்றால் ‘இந்தியா’ இனி காணாமற் போய், ‘ஹிந்துராஷ்டிரம் - மனுதர்ம ராஜ்ஜியம்’ தோன்றும்  பேரபாயம் தயார்நிலையில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
 

;