tamilnadu

தமிழகத்தில் 71.87% வாக்குப்பதிவு

சென்னை, ஏப்.19- தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் வியாழனன்று(ஏப்.19) 38 மக்களவைத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளிலும் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.18 சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை 75.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


புதுச்சேரியில் 81.57 விழுக்காடு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 7 லட்சத்து 93 ஆயி ரத்து 833 வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகளில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 227 பேர் ஆண்கள். 4 லட்சத்து 18 ஆயிரத்து 535 பேர் பெண்கள் ஆவர். 71 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 81.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அசோக் ஆனந்தின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதால், புதுச்சேரி மக்கள வைத் தொகுதியோடு தட்டாஞ்சாவடி சட்டப் பேரவைக்கும் இடைத்தேர்தல் நடந்தது.மொத்தம் உள்ள 29 ஆயிரத்து 757 வாக்காளர்களில், 23 ஆயிரத்து 109 பேர் வாக்களித் துள்ளனர். இதில் 10 ஆயிரத்து 955 பேர் ஆண் வாக்காளர்கள். 12 ஆயிரத்து 153 பேர் பெண் வாக்காளர்கள். ஒரே ஒருவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர். தட்டாஞ்சாவடியில் 77.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

;