tamilnadu

img

ஜனநாயக போருக்கு தயாராவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை:
நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயக போருக்கு தயாராகுவோம் என்று திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-இன்றைய அரசியல் களத்தில் எதிரணியில் இருப்பவர்கள் நமக்கு மட்டும் எதிரிகள் அல்ல. நாட்டு நலத்திற்கும் வளத்திற்கும் எதிரிகளாக இருக்கிறார்கள். எதிரிகளை நாம் தேடிச் செல்வதில்லை. இனத்திற்கும், மொழிக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களையெல்லாம் எதிர்த்துப் போராடி வெல்கின்ற வலிமை நமக்கு உள்ளது. 

‘குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல், குழியும் பறித்தது’ என்பதுபோல பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகளால் ஏழை நடுத்தர மக்களின் தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் சீரழித்து, அவர்களின் வாழ்வை கீழே தள்ளிய மத்திய பாஜக அரசு, இப்போது பெருந்தொழில் நிறுவனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகிற அளவிற்கு பொருளாதாரத்திற்குப் படுகுழி பறித்திருக்கிறது.விதை நெல்லை எடுத்து விருந்து சமைத்து களிப்பது போல, தன்னுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பினை ரிசர்வ் வங்கி இருப்பிலிருந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து சமாளித்து, எதிர்கால நிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது.மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களால் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் நசுக்கப்படுகின் றன. ‘தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரி’ போல, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் உடன்பட்டு, முழந்தாளிட்டு அவற்றை நிறைவேற்றுகிறது மாநிலத்தை ஆள்கின்ற அதிமுக அரசு. பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு, பகல் கொள்ளையில் பரவசம் கொண்டு, பல நாடுகளுக்கும் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.நாட்டு மக்களை நாளும் வஞ்சித்து வாட்டிக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான ஜனநாயகப் போரினைத் தொடர்ந்து நடத்திடவும், அந்தக் களங்களில் நாம் பெறப்போகும் வெற்றிகளுக்குக் கட்டியம் கூறிடும் வகையில், நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவும் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது முப்பெரும் விழா.கலைஞர் அறக்கட்டளை சார்பில், தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியவர்களில் தலா ஒருவருக்கும், ஊராட்சி செயலாளர்களில் தலா ஒருவருக்கும் ‘கழக விருது’ முப்பெரும் விழாவில் முதன்முறையாக வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;