tamilnadu

img

கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக கூட்டுறவு சாகுபடி

திண்டுக்கல்:
கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக கூட்டுறவு மூலம் சாகுபடி மற்றும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்க நிதிக்குழு கன்வீனர் கிருஷ்ணபிரசாத் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக் குடியில் நடைபெற்ற காபி விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து அவர் உரையாற்றியதாவது:உலகில் வணிக ரீதியாக பெட்ரோலுக்கு அடுத்து அதிக லாபம் பெறக் கூடிய பயிராக காபி உள்ளது. ஒரு காபி விவசாயிக்கு மதிப்புக் கூட்டப் பட்ட காபியிலிருந்து 10 சதவீத வருவாயே கிடைக்கிறது. மீதமுள்ள 90 சதவீதம் காபி தொழில் நிறுவனங்களுக்கும், வர்த்தகர்களுக்கும், இடைத் தரகர்களுக்கும் தான் போய்ச் சேருகிறது.  ஆகவே இந்த மாநாடு காபி விவசாயிகளுக்கு ஒரு கட்டுப்படியான விலையைப் பெற்றுத் தரும் மாநாடாக இது அமையும். ரப்போஸ்டா ஒரு கிலோ காபிக்கு ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் அராபிக்கா காபிக்கு ஒரு கிலோவிற்கு ரூ.120 முதல் ரூ.140 வரை தான் கிடைக்கிறது. இது மிகக் குறைவான விலையாகும். 
 எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்த ஆட்சியாளர்கள் விவசாயிகள் கோரிக்கையைப் பற்றிக் கண்டுகொள்ளாத போக்கு உள்ளது. எனவே நாடு முழுவதும் நமது கோரிக்கைக்காகப் போராட வேண்டியுள்ளது. அதற்காக நாம் ஒன்றுபடுவது மூலமாகத் தான் இந்த கோரிக்கைகளை நாம் வென்றெடுக்க முடியும். 

பயிர்வாரி சங்கங்கள் உருவாக்குவோம்
கடலூரில் நடைபெற்ற நமது விவசாயிகள் சங்க மாநாட்டிலும், ஹரியானாவில் நடைபெற்ற மாநாட்டிலும் நாம் எடுத்திருக்கக்கூடிய முடிவு என்னவென்றால் பயிர்வாரியான சங்கங்களை உருவாக்குவது ஆகும். அந்த முடிவின் அடிப்படையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதற்கான முன் முயற்சியை எடுத்துள்ளது.கார்ப்பரேட்டுகளால் விலை வீழ்ச்சி காப்பி விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. நியாயமான விலை கிடைக்கவில்லை என்பது கடந்த 20 ஆண்டுகளாகக் காபி விவசாயிகள் சந்திக்கிற பிரச்சனையாகும். கேரள மாநிலம் வயநாட்டில் அதிகளவு அதாவது 67 சதவீதம் விவசாயிகள் காபி விளைவிக்கிறார்கள். மன் மோகன்சிங் பிரதமராக இருந்தபோது புதிய தாராளமயக் கொள்கை அமலான பின்னர்  1999ல் ஒரு கிலோ காபிக் கொட்டை விலை ரூ.90 ஆக இருந்தது. 2007ல் ரூ.24ஆகக் குறைந்தது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். மிகப்பெரும் கடனாளிகளாக மாறிப்போனார்கள். வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அரசின் கணக்குப்படி 967 பேர் வயநாடு பகுதியில் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது துயரமான செய்தி.

நெஸ்லே லாபம் மட்டும் எப்படி அதிகரித்தது 
இந்த தற்கொலைக்கு மூலகாரணம் என்ன என்று அனைத்து கட்சியைச் சார்ந்தவர்களும் இணைந்து நமது விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைப்படி ஆய்வு செய்தார்கள். காபிக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் நெஸ்லே குழுமத்தின் இன்ஸ்டண்ட் பவுடர் ஒரு கிலோ ரூ.450க்கு விற்கப்படுகிறது. காபிக்கொட்டையின் விலை கிலோவுக்கு ரூ.24 எனக் குறையும் போது காபி பவுடரின் விலை நியாயமாகக் குறையவேண்டும் தானே. ஆனால் ரூ.450லிருந்து ரூ.1400 வரை விற்பனை செய்யப்பட்டது என்பதை ஆய்வு செய்தோம். நெஸ்லே குழுமத்துக்கு 3 மடங்கு வரை கொள்ளை லாபம் கிடைத்தது.  அதில் சரிபாதி லாபம் கூட காபி விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை என்பது வேதனையான விசயம்.  

பெருமுதலாளிக்கான கொள்கை
காப்பி விவசாயிகளுக்கான நியாயமான விலையை யார் கொடுப்பார்கள்? நாம் அரசு கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறோம். அரசு காப்பியை கொள்முதல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். காபி விலை நிர்ணயம் செய்வதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதற்குக் காரணம் அரசின் கொள்கையாகும். கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. என்றைக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகள் மாறுகிறதோ அன்றைக்குத் தான் பிரச்சனைகள் தீரும். 

கூட்டுறவு விவசாயம் மூலம் மாற்றத்தை உருவாக்குவோம்
நிலத்திற்கான போராட்டங்களை நடத்தியது போல நாம் ஏன் ஒரு தொழிற் சாலையை உருவாக்க முடியாது. நாம் ஒன்றுபட்டால் காப்பி தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க முடியும்.கூட்டுறவின் மூலமாக அப்படிப்பட்ட தொழிற்சாலையை நம்மால் உருவாக்க முடியும். கூட்டுறவே நாட்டுயர்வு என்று சொல்கிறோம். விவசாயிகள் கூட்டுறவை பின்பற்றுகிற போது அதில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட் முறையிலான விவசாயத்தை ஊக்கப்படுத்துகிறார்கள். இதில் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்காது. எனவே நாம் கூட்டுறவு விவசாயத்திற்கு மாற வேண்டும். அதனை அரசு அங்கீகரிக்க வேண்டும். கூட்டுறவு தொழிற் சாலை உருவாக்க வேண்டும் என்பது நமது முழக்கமாக இருக்க வேண்டும். என்னுடன் பிரம்மகிரி சொசைட்டியின் மேலாளர்கள், ஊழியர்கள் வந்துள்ளார்கள். எங்களது கூட்டுறவு முறையை முதலமைச்சர் பினராயி விஜயன் ஏற்றுக்கொண்டுள்ளார். கூட்டுறவு மூலமாக விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலைக் குக் காப்பியை கொடுக்க முடிகிறது.

குறைந்த விலைக்கு கோழிக்கறி 
கேரளாவில் ஒரு கிலோ கோழிக் கறி 250க்கு விற்கப்படுகிறது. கோழி வளர்க்கும் விவசாயிகளுக்குக் கூட்டுறவு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு கோழிக்கு ரூ.3.50ம் அதிகபட்சமாக ரூ.5 தான் கிடைக்கிறது. கூட்டுறவு மூலமாக கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு கேரளாவில் ஒரு கோழிக்கு ரூ.11.வரை கிடைக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.170க்கு விற்க முடிகிறது. கேரள அரசின் நடவடிக்கையால் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கிறது, பொதுமக்களுக்கும் குறைந்த விலைக்குக் கோழி கிடைக்கிறது. எனவே கூட்டுறவு மூலமாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது கேரள இடது ஜனநாயக அரசு.எனவே கூட்டுறவு முறையிலான உற்பத்தியை நாம் இந்தியா முழுவதும் விஸ்தரிக்க வேண்டியுள்ளது.  இதன் மூலம் கார்ப்பரேட்டுக்கள் நம்மிடம் நடத்தும் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியுள்ளது. கிருஷ்ணபிரசாத்தின் ஆங்கில உரையை அகில இந்திய விவசாயிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மொழி பெயர்த்தார்.

;