tamilnadu

img

ஆணவப் படுகொலை நடக்கத்தான் செய்கிறது முதல்வர் அலட்சியப் பேட்டி

 மதுரை, ஜூலை 11- காவல்நிலைய மரணங்களும் ஆணவப் படுகொலைகளும் எந்த ஆட்சியாக இருந்தாலும் நடைபெறத்தான் செய்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் காவல்நிலைய மரணங்களும் ஆணவப் படுகொலைகளும் எந்த ஆட்சியாக இருந்தாலும் நடைபெறத்தான் செய்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது. 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்யக் கூடாது என்று தீர்ப்பில் உள்ளது.  வருகிற தண்ணீரை தடுத்து வேறு பக்கம் திருப்பக் கூடாது. எனவே அங்கு அணை கட்ட இயலாது. சேலம் எட்டு வழிச் சாலை மத்திய அரசின் திட்டம். மாநில அரசின் திட்டம் அல்ல. உயிர் சேதத்தை தடுக்க, விபத்தைத் தடுக்க, விரைந்து செல்ல, எரிபொருளை மிச்சப்படுத்த, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்ற  காரணங்களுக்காகவே சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. மத்திய அரசு ராணுவ உதிரிபாகங்கள், ராணுவத் தளவாடங்கள் அந்த உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் எல்லாம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து அதிகமாக தொழில் முதலீடு செய்ய வருவார்கள். நிலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சாலையை மத்திய அரசு அமைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

;