headlines

img

ஆர்எஸ்எஸ் தலைவரின் பாசிசப் பேச்சு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் தலைவர், மோகன் பகவத், ஆற்றிய உரையானது ஆர்எஸ்எஸ்-க்குள் ஊடுருவியுள்ள பாசிச சித்தாந்தத்தின் சிந்தனைத் துளிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. ‘குண்டர் கும்பல்கள்’ சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, தலித்துகள் மற்றும் மதச் சிறுபான்மையினரைக் கொல்லும் செயல்களை, “குண்டர் கும்பல் கொலைகள்” (“lynchings”) என்று வர்ணித்திடக் கூடாதாம். குண்டர் கும்பல்கள் கொலைகள் செய்திடும் நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு உண்டாம்.  “இத்தகைய நிகழ்வுகளை “குண்டர் கும்பல் கொலைகள்” என்று குறிப்பிடுவது, பாரதத்தின் பாரம்பர்யத்திற்கு அந்நியமானது, வேறெங்கோ உள்ளது, நம் நாட்டின், ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் புகழை இகழவேண்டுமென்ற நோக்கத்துடனும், சிறுபான்மையினர் என ‘அழைக்கப்படுகின்றவர்கள்’ மத்தியில் அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.  

இந்த ஒரு வாக்கியமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் இரட்டை நாக்கு குணத்தையும், மதவெறிக் கண்ணோட்டத்தையும் தோலுரித்துக் காட்டிவிடுகிறது. ஒரு பக்கத்தில் கும்பல் குண்டர்கள் கொலைகள் மேற்கொண்டுவருகின்றன என்பதை மறுக்கிறார். மறுபக்கத்தில், ‘குண்டர் கும்பல் கொலைகள்’ என்னும் சொற்றொடர் பிராந்திய, கலாச்சார பொருள் கொண்டதல்ல என்கிறார். அந்தச் சொற்றொடரின் பொருள் என்பது குண்டர் கும்பலின் தாக்குதல் கொலையில் முடிவதற்கு இட்டுச் செல்கிறது என்பதாகும். மேலும், மோகன் பகவத் அவருடைய பேச்சில், குண்டர் கும்பல் கொலைகளைக் கண்டிப்பதற்காக மேற்கொண்டிடும் எவ்விதமான முயற்சியும் ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் அவமதிப்பதற்கான முயற்சியாகும் என்றும் குற்றம் சுமத்துகிறார். பசுப் பாதுகாப்புக் குழுவினரால் சிறுபான்மை இனத்தவர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள் என்பதைக்கூட அவர் ஒப்புக்கொள்ள வில்லை. இத்தகைய நிகழ்வுகள் ஒரு பக்கமானது அல்ல என்று கூறும் அவர், சிறுபான்மை இனத்தவரைக்கூட, சிறுபான்மையினர் என ‘அழைக்கப்படுகின்றவர்கள்’ என்று கூறுவதன்மூலம் அவர்களை அங்கீகரிக்கக்கூட அவர் மறுக்கிறார்.

குண்டர் கும்பல்கள் எண்ணற்றோரைக் கொலை செய்ததன் விளைவாகத்தான், 2018 ஜூலையில் உச்சநீதிமன்றம், “கும்பல் கூட்டத்தின் கொலைபாதக நடவடிக்கைகள்”(“horrendous acts of mobocracy”) என்று குண்டர் கும்பல்களின் கொலைகளைக் கண்டித்தது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும்,  சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் வகுத்துத்தந்தது. மேலும் உச்சநீதிமன்றம், பசுப் பாதுகாப்புக்குழு என்ற பெயரிலும் மற்றும் பல்வேறு பெயர்களிலும் ‘குண்டர் கும்பல்கள்’ கொலைகள் செய்துவருவதைத் தடுக்கும் விதத்தில் தனியே ஒரு சட்டத்தை இயற்றுமாறும் நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

‘குண்டர் கும்பல் கொலைகள்’ (mob lynchings) எனக் குறிப்பிடுவதன் மூலம் இந்து சமூகத்தையும், நாட்டையும் அவமதிப்பதற்கான ஒரு முயற்சி  என்று கூறும் ஆர்எஸ்எஸ் தலைவர் உண்மையில், இதற்கு எதிராக நிற்பவர்களுக்கு சவால் விடுத்திருக்கிறார். அவருடைய கூற்றின்படி, “சில நிகழ்வுகள் திரித்து  வெளியிடப்பட்டுள்ள அதே சமயத்தில், சில வேண்டுமென்றே ஜோடிக்கப் பட்டவைகளாகும்.” மேலும், உச்சநீதிமன்றம் கூறியிருப்பதற்கு முரணாக அவர், இப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களே இந்நிகழ்வுகளை எதிர்கொள்ள போதுமானவைகளாகும் என்றும் கூறுகிறார்.

இத்தகைய கண்ணோட்டம் இவர்களிடம் இருப்பதன் காரணமாகத்தான், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்திட்ட கட்டளைகளை இவர்கள் கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்திருக்கின்றன. மோடி அரசாங்கம், ‘குண்டர் கும்பல்களின் கொலைகளுக்கு’ எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரவோ, மேலும்  இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்திடக்கூடிய விதத்தில் நடவடிக்கைகள் எடுத்திடவோ மற்றும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட சம்பந்தப்பட்ட மாநில அரசாங்களைக் கேட்கவோ தயாரில்லை.

மோகன் பகவத்தைப் பொறுத்தவரை, குண்டர் கும்பல் கொலை வழக்குகள் என்பவை நாட்டையும், இந்துக்களையும் “இகழ்வதற்காக” புனையப்பட்ட சதியாகும். இத்தகைய சிதைந்த சிந்தனையோட்டத்தின் காரணமாகத்தான், குண்டர் கும்பல் கொலைகள் குறித்து 49 புகழ்பெற்ற கலையுலகப் பிரமுகர்களும், அறிவுஜீவிகளும் பிரதமருக்கு எழுதிய கடிதம் கூட தேசத்துரோகச் செயலாகப் பார்க்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

“நாட்டின் அடையாளம், நம் அனைவரின் சமூக அடையாளம், நாட்டின் இயற்கையான  அடையாளம் என்பது “பாரத் என்றால் இந்துஸ்தான், இந்து ராஷ்ட்ரம்” என்றே சங் பரிவாரங்கள் கருதுவதாக,” ஆர்எஸ்எஸ் தலைவர் உரக்கப் பிரகடனம் செய்திருக்கிறார். பாரதத்தில் உள்ள அனைவரும் இந்துக்களே என்று வலியுறுத்தும் அவர், “இந்து சமூகத்தையும் இந்துத்துவாவையும் எவ்விதமான அடிப்படையுமற்ற அவதூறான குற்றச்சாட்டுகள் மூலமாக அவமானப்படுத்துவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன,” என்கிறார். மேலும் அவர் ஆர்எஸ்எஸ்-இன் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற சிந்தனையை, இப்போது ஒரே பாஷை,(swbasha), ஒரே மாதிரி உடை (swabhoosha), ஒரே கலாச்சாரம் (swasanskriti) என்கிற கோஷத்தின்மூலமாகப் புதுப்பித்திருக்கிறார். 

இத்தகைய இந்துத்துவா கண்ணோட்டத்தைத் தழுவிக்கொண்ட அடிப்படையில்தான், மோகன் பகவத், இந்துத்துவாவிற்கும் கார்ப்பரேட் மூலதனத்திற்கும் இடையேயான பிணைப்பையும் கையாள்கிறார். அவர், மோடி அரசாங்கம் அந்நிய மூலதனத்திற்கு அநியாயமானமுறையில் வெண்சாமரம் வீசுவதையும், தனியார்மயமாக்கலையும் சரி என ஏற்றுக்கொள்கிறார். “நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்திட”, பல துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்தலும் அவசியம் என்கிறார். இதனைக் கூறிய அடுத்த நிமிடமே தன்னிறைவு குறித்தும், சுதேசி குறித்தும் கூறி கைதட்டலும் பெறுகிறார். எனினும், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, பாஜக அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளை முழுமையாக ஆதரிக்கிறது என்கிற உண்மையை இவை மூடிமறைத்திடவில்லை. நாட்டின் நிலக்கரி வளங்களைச் சுரண்டிட அந்நிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது, நாட்டின் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியையும் அந்நியரிடம் விற்றிட முன்வந்திருப்பது ஆகியவற்றை இவர்கள் எப்படி தன்னிறைவு என்று அழைக்கிறார்கள் என்பதைக் கற்பனைக்கூட செய்யமுடியவில்லை.

இந்துத்துவா எதேச்சாதிகாரத்தின் பின்னே இருந்துகொண்டு இயக்கிடும் பிரதான உந்து சக்தியான மோகன் பகவத், மோடி அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைத் தகர்த்ததையும் வானளாவப் புகழ்கிறார்.  ஆர்எஸ்எஸ்-இன் அகண்ட பாரதக் கண்ணோட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இடமில்லைதான்.

நாட்டில் வலதுசாரி சக்திகள் ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் விளக்கியிருக்கிறார். இதன்மூலம் அவர், ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்களின் வாழ்வாதாதாரங்கள், அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்கள் வேகமாக வந்துகொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

(அக்டோபர் 9, 2019)

(தமிழில்: ச. வீரமணி)

  

 

 

;