headlines

img

பால் வார்க்கும் தீர்ப்பும் பாமக இலக்கும்

சென்னை- சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆறு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது. சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு ஏற்கெனவே இரண்டு பாதைகள் இருந்தபோதும் மூன்றாவதாக எட்டு வழிச்சாலை அமைப்பதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் விவசாய நிலங்கள், வனநிலங்கள், ஏரி, குளங்கள், பறவைகள் சரணாலயம், விவசாயக் கிணறுகள், வீடுகள், பலன் தரும் தென்னை உள்ளிட்ட மரங்கள் அனைத்தையும் நாசமாக்கும் வகையில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் ஆணையை வெளியிட்டிருந்தது. அத்துடன் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி கனவுத் திட்டம் போல உடனடியாக நிறைவேற்றுவதற்கு என்று காவல்துறை, வருவாய்த்துறை, இதர அரசுத் துறைகள் மூலம் மிரட்டல், உருட்டல், கைது, சிறை என்று விவசாயிகளையும் பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் கொடுமைக்குள்ளாக்கியது. 


இதை எதிர்த்து விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆயினும் கட்டாயம் நிலங்களை கையகப்படுத்தியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நின்றது மோடியின்ஆசி பெற்ற எடப்பாடி அரசு. ஆனாலும் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் வலுவடைந்த வண்ணமே இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவண்ணாமலை முதல் சேலம் வரை நடைபயண இயக்கத்தை துவக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திங்களன்று சென்னை உயர்நீதிமன்றம் நிலம் கையகப்படுத்தும் அரசாணையை செல்லாது என்று ரத்து செய்து தீர்ப்பளித்தது ஆறு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆயினும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் இளைஞரணி தலைவரும், தர்மபுரி எம்.பி.,யுமான அன்புமணி ராமதாஸ் தீர்ப்பைவரவேற்றதோடு இது எங்கள் கூட்டணியை பாதிக்காது என்று கூறியுள்ளார். அத்துடன் கூட்டணிக்காக கொள்கையை விட்டுத் தர மாட்டோம் என்றும் வீரவசனம் பேசியுள்ளார். ஆனால் தமிழகஅரசு சார்பில் மேல்முறையீடு செய்ய மாட்டோம்என்று அறிவிக்க செய்ய முடியாமல் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு செய்துள்ளது பாமக.


உண்மையில் தீர்ப்பை வரவேற்றவர்கள் அதற்கெதிரான நிலையில் உள்ள அதிமுக அணியுடன் இருப்பது எந்த வகையில் நியாயமானது? அவர்கள் யாரை ஏமாற்றுவதற்கு இந்தநிலை எடுக்கிறார்கள்? அவர்களுக்கு பதவிஒன்றே குறிக்கோள் என்பதால் எதிர் எதிர் நிலையிலிருந்தாலும் கூடிக் குலாவி சாதகமடைதல் ஒன்றே இலக்காக கொண்டிருக்கிறார்கள். இவர்களை தமிழக மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு வரும் பதினெட்டாம் தேதியன்று சரியான பாடம் புகட்டுவார்கள். 

;