headlines

img

அயோத்தி: மதத்தையும் அரசியலையும் கலத்தல் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு, ராமஜன்மபூமி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டபோதிலும், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் ஆளுநர் பங்கேற்புடன் பிரதமர் அதற்கு அடிக்கல் நாட்டியதிலிருந்து அதிகாரபூர்வ அரசு நிகழ்ச்சியாக மாறியது.

இவ்வாறு, ஆகஸ்ட் 5, இந்துத்துவாவின் அரசியல் திட்டத்தின் ஒரு முக்கிய கட்டத்தைக் குறிக்கிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்பது ஓர் இந்து பெரும்பான்மை அரசை நிறுவுவதற்கு அனைத்துத்தரப்பினரையும் அணிதிரட்டுவதற்கான ஒரு முக்கியமான உத்தியாக அது மேற்கொண்டுவந்தது. ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணிக்கு ராமர் கோவில் திட்டம் என்பது ஒரு “தேசிய கவுரவம்” மிக்க விஷயமாகும். இந்துக்களுக்கு எதிராக வரலாற்றில் இழைக்கப்பட்ட “தவறுகளுக்கு” இதன்மூலம் பரிகாரம் காணப்படும் என்று அது கூறிவந்தது. இவர்களுக்கு ராமர் ஒரு தெய்வம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அடையாளமுமாகும். 

எல்.கே. அத்வானியின் தலைமையின்கீழ், 1989இல் நடைபெற்ற பாஜகவின் பாலாம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது என்று தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்துத்துவாவின் மதவெறி அரசியல் பயணம் அத்வானியின் ரத யாத்திரையுடன் தொடங்கியது. அது தொடங்கியபின் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள், பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது, அவ்வாறு பாபர் மசூதி இடிக்கப்பட்டபின்பும் கொடூரமான முறையில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இவற்றுக்குப்பின்னர் அந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கான சட்ட அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் பல்வேறுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

2019 மே மாதத்தில் பாஜக பெரிய அளவில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின்னர், உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்தியது.  நாள்தோறும் விசாரணை மேற்கொண்டு, அரசாங்கம் விரும்பியவண்ணம் தீர்ப்பும் அளித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை மிகமோசமான சட்டமீறல் என்று குறிப்பிட்டுவிட்டு, அதன்பின்னர் அங்கேயுள்ள ஒட்டுமொத்த 2.77 ஏக்கர் நிலத்தையும் இந்து மனுதாரர்களுக்கு கோவில் கட்டுவதற்காக ஒப்படைத்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.  

கோவில் கட்டுமானம் இந்துக்களின் ராமரை வழிபடுபவர்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்களால் வரவேற்கப்படும். எனினும், இங்கே மற்றுமொரு முக்கியமான  எதார்த்த நிலை இருக்கிறது.  இதன்மூலம் இந்தியக் குடியரசின் குணம் மாறிக் கொண்டிருக்கிறது. ‘குடியரசு’ என்னும் சொல் (இதன் பொருள் மக்களின் அரசாங்கமேயொழிய, இது மன்னராட்சி அல்ல) மதச்சார்பின்மை என்பதைக் குறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதாரணமாக,  ஈரான் இஸ்லாமியக் குடியரசு, இஸ்லாமிய சித்தாந்தத்திலிருந்து அதன் சட்டபூர்வமான தன்மையைப் பெறுகிறது. இஸ்ரேல் அரசு, தன்னை ஓர் யூதர் அரசாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறது. அதற்காகவே அங்கேயுள்ள அரபு மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகக் குறைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில், இந்தியக் குடியரசை ஓர் இந்து பெரும்பான்மைக் குடியரசாக மாற்றுவதற்கான ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அரசியல் திட்டம், ராமர் கோவில் கட்டுமானத்துடன் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டின் கிரிமினல் சட்டங்களையும் எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி மீறி பாபர் மசூதி என்னும் கலைச்செல்வத்தை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள் மீது எவ்விதத் தண்டனையும் இல்லை.

மோடி,  அயோத்தியில் பேசியபோது, ராமரை, தேசிய கவுரவத்துடனும், தேசிய ஒற்றுமையுடனும் இணைத்துப் பேசியிருக்கிறார். ராமர் கோவில், தேசிய உணர்வின் அடையாளம் என்று அழைக்கிறார். ராமர் கோவில் இயக்கம் தொடங்கியபின்னர் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் ஏராளமாக அரங்கேறியபின்னர், இப்போது சகோதரத்துவம் குறித்தும் ஒற்றுமை குறித்தும் பேசுவது பாசாங்குத்தனமாகும்.

மோடி, அயோத்தியில் மிகவும் அப்பட்டமான முறையில் அரசியலையும் மதத்தையும் கலந்து பேசியிருக்கிறார்.  இந்நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு குஜராத்தில் சோம்நாத் கோவில் கட்டுவது சம்பந்தமாக எடுத்த நிலைப்பாட்டுக்கும் இப்போது இவர்களின் நிலைப்பாட்டுக்கும் எவ்வளவு வேறுபாடு? நேரு, அக்கோவில் கட்டுவதற்கு அரசின் நிதி எதையும் அனுமதிக்க மறுத்தார். கோவிலைத் திறப்பதற்கு ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்துக்கு ஆட்சேபணையைத் தெரிவித்தார். அவருடைய கொள்கை மிகவும் தெளிவானது, எளிதானது. ஒரு மதச்சார்பற்ற அரசு எந்தவொரு மதஞ்சார்ந்த இடம் கட்டுவதற்கும் ஆதரவினையோ, நிதியையோ அளிக்க முடியாது என்று தெளிவாகத் தெரிவித்தார்.

இனவாத-மதவாத தேசியவாதம் மக்களை மதத்தின் அடிப்படையில் அணிதிரட்ட முயல்கிறது. இன அடையாளம் என்பது நாட்டில் நடைபெற்ற காலனிய எதிர்ப்புக்கு நேரெதிரானது. அனைத்து இனத்தினரும் அனைத்து மதத்தினரும் இணைந்துதான் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தி, சுதந்திர இந்தியக் குடியரசை நிறுவியிருக்கின்றனர். பிற மதத்தினருக்கு எதிராகவும் சிறுபான்மையினரைக் குறிவைத்தும் வெறுப்பைக் கக்கும் அரசியலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற இவர்களுடைய குறுகிய தேசியவாதம் உலகில் பல வலதுசாரி எதேச்சாதிகார ஆட்சிகளின் அடையாளச் சின்னமாக மாறி இருக்கின்றன.

மோடி அடிக்கல் நாட்டுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு, ஜூலை 24 அன்றுதான், துருக்கி ஜனாதிபதி ரெசெப் எர்டோகான் (Recep Erdogan), இஸ்டான்புல்லில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகமாக இருந்த ஹாகியா சோஃபியா (Hagia Sophia)வில் முதல் வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தியுள்ளார். இந்த இடம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் நோபிள் (பின்னர் இஸ்டான்புல்)-இல் பைசாந்தியப் பேரரசின் மாமன்னராக இருந்த ஜஸ்டினியன் என்பவரால் கட்டப்பட்ட தேவாலயமாகும். இந்த வரலாற்றுச் சின்னம் சுமார் 900 ஆண்டுகள் தேவாலயமாக இருந்து பின்னர் கி.பி. 1453இல் கான்ஸ்டாண்டிநோபிளை ஒட்டோமான்கள் கைப்பற்றியபோது மசூதியாக மாற்றப்பட்டது. கேமல் அடாடுர்க் (Kemal Ataturk), வயதான ஒட்டாமானைத் தூக்கி எறிந்துவிட்டு, 1934இல் ஒரு மதச்சார்பற்ற குடியரசை நிறுவும் விதத்தில் புரட்சிகர நடவடிக்கை எடுத்தபின், அமைச்சரவை முடிவின்படி, 1500 ஆண்டு கால மதச் சின்னம், ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.  மிகவும் அற்புதமான கட்டடக்கலைச் சிறப்புகளுடன் விளங்கிய அந்த இடம் சென்ற மாதம் வரையிலும் அருங்காட்சியகமாகத்தான் இருந்தது.

துருக்கியை ஆண்டுவரும் இஸ்லாமிய ஏகேபி கட்சி, ஹாகியா சோஃபியா மீண்டும் மசூதியாக மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. துருக்கியின் உச்சபட்ச நிர்வாக நீதிமன்றம், அதற்கு இசைந்து, 1934 அமைச்சரவை முடிவு சட்டவிரோதமானது என்றும், மசூதியாக அதன் அந்தஸ்து மீளவும் வழங்கப்படுகிறது என்றும் கூறியது. அது அவ்வாறு கூறிய அன்றே ஜனாதிபதி எர்டோகான் இதுகுறித்து ஆணை பிறப்பித்தார். மோடியைப் போன்றே, எர்டோகானும் இதனை தேசிய கவுரவத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்றுதான் கூறியிருக்கிறார்.

இஸ்ரேலில், மோடியின் சித்தாந்தரீதியான நண்பனான, நெடான்யாஹூ, ஓர் இனவாத அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்திவருகிறார். இவர், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முதல் யூதர் கோவிலின் மிச்சசொச்சங்களைத் தோண்டி எடுப்பதற்காக, டெம்பிள் மவுண்ட்-(Temple Mount)இன்கீழ் பல ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட இடத்தைத் தோண்டும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். மெக்கா-மெதினாவிற்கு அடுத்து, மிகவும் புனித இடமாக முஸ்லீம்கள் கருதும் அல்-அக்தா மசூதி, மவுண்டின் மீது இடம்பெற்றிருக்கிறது. யூதத் தீவிரவாதிகள் அந்த மசூதியை இடித்திட வேண்டும் என்றும், அங்கே ஒரு யூதர் கோவிலைக் கட்ட வேண்டும் என்றும் நீண்டகாலமாகவே கோரிக் கொண்டிருக்கிறார்கள். மவுண்ட், யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் ஆகிய அனைவருக்குமே ஒரு புனித ஸ்தலமாகும். இந்த இடத்தைத்தான் யூத வெறியர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராகவும் அராபியர்களுக்கு எதிராகவும் யூதர்களைத் திரட்டுவதற்கு ஒரு வளம்கொழிக்கும் இடமாக வைத்திருக்கிறார்கள்.  

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு வழியேற்பட்டுவிட்டதால், இனி இந்துத்துவா மதவெறி அணிதிரட்டல் இத்துடன் காலாவதியாகிவிடும் என்று சிலர் கருதுகிறார்கள். அவர்கள் தவறு செய்கிறார்கள். இந்துத்துவா ஆட்சியாளர்களின் அரசியல் திட்டம் என்பது, மக்கள் மத்தியில் மதவெறித் தீ எப்போதும் எறிந்துகொண்டிருக்கக்கூடியவிதத்தில் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் அதன்மூலம் அதிகாரத்தை எப்போதும் தாங்கள் தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்பதுமேயாகும். உதாரணமாக,  1992ஆம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் சட்டத்தின்கீழ் 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த மதஞ்சார்ந்த இடங்களில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளாமல் அப்படியே (status quo) இருக்க வேண்டும் என்று ஆணைபிறப்பித்திருக்கிற்து. அயோத்தி அதன்  வரையறுக்குள் வராமல் இருந்தது. ஏனெனில் சுதந்திரத்திற்குமுன் அங்கே தாவா இருந்தது.  ஆர்எஸ்எஸ்-விசுவ இந்து பரிசத்தின் ஒரிஜினல் பிரச்சாரம் அயோத்தியில் மட்டுமல்ல, காசி மற்றும் மதுரா ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதாகும். எனவே பிரச்சனைகளை எழுப்பும்போது,  சட்டம் என்பது இந்துத்துவா வெறியர்களுக்கு எப்போதுமே ஒரு தடையாக இருந்ததில்லை.

இறுதியாக, ஆகஸ்ட் 5இல், அயோத்தியில் பூமி பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்ததை ஒருவர் நினைவுகூர்ந்திட வேண்டும். இதே தேதியன்றுதான், ஓராண்டுக்குமுன், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தன் சிறப்பு அந்தஸ்தை இழந்தது, மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்தியாவில்  முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள ஒரு மாநிலம் இருப்பதை இப்போதைய ஆட்சியாளர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் இப்போது ராமர் கோவில் கொண்டாட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் ஒரு சந்தர்ப்பவாத அணுகுமுறையைப் பின்பற்றினால், அது, இந்தியாவை, இந்து ராஷ்ட்ரமாக நிறுவ வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுக்கும்.

(தமிழில்: ச.வீரமணி)

 

 

;