india

img

ஊதியங்கள் மீதான சட்டமுன்வடிவானது அரசாங்கம் தொழிலாளர் விரோதி என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது

புதுதில்லி, ஜூலை 31-

ஊதியங்கள் மீதான சட்டமுன்வடிவு என்பது, இந்த  அரசாங்கம் தொழிலாளர் விரோத அரசாங்கம் என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் செவ்வாய் அன்று மாலை 2019 ஊதியங்கள் சட்டம் (The Code on wages, 2019) என்கிற பெயரில் ஒரு சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது. அதன்மீது பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

இப்போது கொண்டுவந்திருக்கும் சட்டமுன்வடிவு, தற்போது நடப்பில் உள்ள குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம் (Minimum Wages Act), ஊதியங்கள் வழங்கல் சட்டம் (Payment of Wages Act), போனஸ் வழங்கல் சட்டம் (Payment of Bonus Act), மற்றும் சம ஊதியச் சட்டம் (Equal Remuneration Act) ஆகிய நான்கையும் ஒன்றாக்கும் ஒரு சட்டமேயாகும். இவ்வாறு இந்தச் சட்டமுன்வடிவானது இவை அனைத்தையும் மிகவும் மோசமான விதத்தில் எவ்விதமான பழிபாவங்களுக்கும் அஞ்சாது, இவற்றிலிருந்து வந்த தொழிலாளர் நலன்களுக்கான ஆக்கக்கூறுகள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்திடும் விதத்தில் மாற்றியமைத்து இந்தப் புதிய சட்டமுன்வடிவு கொண்டுவரப் பட்டிருக்கிறது. குறிப்பாக, ஊதியம் சம்பந்தமாக வேலையளிப்பவர்களுக்கு இருந்துவந்த கடப்பாடுகளை அவர்கள் செய்யாது தட்டிக்கழித்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாத விதத்தில் இதுகாறும் இதுதொடர்பாக இருந்துவந்த அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்யும் விதத்தில் இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு நுணுகி ஆராய்கையில், இது தொழிலாளர் ஆதரவு நோக்கத்தோடு கொண்டுவரப்படுவதாகத் தெரியவில்லை. மாறாக, பல இடங்களில் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத நிலைப்பாடு நன்கு வெளிப்பட்டிருக்கிறது. இப்புதிய சட்டமுன்வடிவு தொழிலாளர் நல ஆதரவு சட்டப்பிரிவுகளை, முதலாளிகள்  ஆதரவு சட்டப்பிரிவிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, கொண்டுவரப்படுகிறது. பல இடங்களில் ‘தொழிலாளி’ (‘worker’) என்பது ‘ஊழியர்’ (‘employee’) என்று மாற்றப்பட்டிருக்கிறது. இதனை ஏற்க முடியாது.

மேலும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் குறித்து, 45ஆவது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் அனைத்துத்தரப்பினரும் ஒப்புக்கொண்டு பரிந்துரைத்திட்ட குறைந்தபட்ச ஊதியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும்.  அதனை இந்தச் சட்டமுன்வடிவு செய்திடவில்லை.

குறைந்தபட்ச ஊதியம் இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளின் அடிப்படையிலும் பரிசீலிக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாயாக இருந்திட வேண்டும் என்று இவை பரிந்துரைத்திருக்கின்றன. அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச்சட்டமுன்வடிவு இவை பற்றியெல்லாம் எவ்விதக் கவலையும் படவில்லை.

குறைந்தபட்ச ஊதியம் குறித்து, மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசனை எதுவுமின்றி மத்திய அரசாங்கம் முடிவெடுத்திருப்பதை அமல்படுத்தப்பட முடியாது.

அடுத்தாக, “வேலையளிப்பவர்” (‘Employer”) என்பது “முதன்மை வேலையளிப்பவர்” (“Principal employer”) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்  சட்டத்தில் இது மிகவும் முக்கியமான சொல்லாகும். இந்தச் சட்டமுன்வடிவில், “முதன்மை ஊழியர்” (‘Principal Employee”) இருந்திட வேண்டும்.  

அதேபோன்று “ஒப்பந்தக்காரர்” (“contractor”) என்கிற சொல்லுக்கான வரையறையும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஊதியங்களைப் பொறுத்தவரை, இது தொர்பான வரையறை மிகவும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஓவர்டைம் ஊதியம், வீட்டு வாடகைப் படி, போனஸ் ஆகியவையும் அடக்கமா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில் இந்தச் சட்டமுன்வடிவு அவசியமற்றதும், தேவையில்லாததுமாகும். இது, இந்த அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கையின் ஓர் அங்கமாகும். எனவே, இந்தச் சட்டமுன்வடிவை நான் எதிர்க்கிறேன்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் கூறினார்.

(ந.நி.)

 

;