புதன், செப்டம்பர் 30, 2020

கட்டுரை

img

ரிசர்வ் வங்கியிடம் சென்றால் கூட்டுறவு வங்கிகள் என்ன ஆகும்?

சமீபத்தில் (24.06.2020) மத்திய அமைச்சரவை கூடி பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான், நாடு முழுவதும் உள்ள 1540 நகரக்  கூட்டுறவு வங்கிகளை பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதாகும். இம் முடிவால் 8.6 கோடி வைப்பு தாரர்கள் தங்களின் ரூ.4.80 லட்சம் கோடி வைப்புகளுக்கு பாதுகாப்பு பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். முன்னதாக இந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் இட்டு வைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த அவசரச் சட்டம் 25.06.2020 அன்று குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்டு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை, வங்கிகள் ஒழுங்கு முறைச் சட்டம் 1949க்கு பல்வேறு திருத்தங்களை செய்து வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலை என்ன?
நகரக் கூட்டுறவு வங்கிகள் ஒரு மாநிலத்தில் செயல்படும் வங்கிகள் 1482ம், பல மாநிலங்களில் செயல்படும்  வகையில் 58ம் உள்ளன. இதில் 54 வங்கிகள் அட்ட வணை (Schedule) வங்கிகளாகும். தற்போது இந்த  வங்கிகள் அந்தந்த மாநில அரசின் கூட்டுறவு சங்கங் களின் பதிவு பெற்ற சங்கங்களாகும். பல மாநிலங்களில் செயல்படும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பன்மாநிலக் கூட்டுறவு சட்டத்தின் (Multi State Co - op. Societies Act) கீழ் பதிவு பெற்றவை யாகும். இக்கூட்டுறவு வங்கிகள் தற்போது பதிவு, அன்றாட நிர்வாகம், கடன் கொள்கை, தேர்தல் போன்ற வேலை களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் நிர்வகிக்கப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி லைசன்ஸ் வழங்குவது, தணிக்கை, வங்கியியல் கட்டுப்பாடுகள் சம்பந்தமான சுற்றறிக்கை கள் வெளியிடுதல் போன்றவைகளின் மூலம் கட்டுப்படுத்தப்படு கிறது. அதாவது இரட்டைக் கட்டுப்பாடுகள் (Dual Control) என்பதாகும்.

இதன் மூலம் ஏதாவது சிக்கல் வருகிறதா? வங்கிகளின் செயல்படாத தன்மைக்கு மாநில அரசுகள் மட்டும்தான் காரணமா? போன்ற கேள்விகளுக்கு ஆட்சி யாளர்களிடம் பதில் இல்லை.யெஸ் வங்கி (Yes Bank) நட்ட மடைந்தபோது எல்ஐசியும், ஸ்டேட் வங்கியும் இவர்களின் பெரும்பகுதி பங்குகளை வாங்கி காப்பாற்றினர். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்ட இந்த வங்கியை மீட்டெடுக்க முடியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் நகர கூட்டுறவு வங்கிகள் சரியாக செயல்படவில்லை என்ற காரணம் காட்டி வங்கி கள் ஒழுங்குமுறைச் சட்டம் 35A-ன்கீழ் அறிவிக்கை வெளி யிடப்பட்டு 25க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்படாமல் உள்ளன. இவை அனைத்தும் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இன்று வரை ஒரு தீர்வும் ரிசர்வ் வங்கியால் ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் உண்மை நிலை. பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, தற்போது சிகேபி கூட்டுறவு வங்கி போன்றவற்றின் மீதும் 35A அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வங்கிகள் வழங்கிய கடன்கள் முறைகேடாக வழங்கப்பட்டன. பிஎம்சி வங்கியில் 21,000 பொய் கணக்குகள் உருவாக்கி 44 கடன்கள் மூலம் சுமார் ரூபாய் 4355 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கியில் ரிசர்வ் வங்கி 5 முறை தணிக்கை செய்துள்ளது. அதேபோல சிகேபி  வங்கியில் மொத்த வைப்பு ரூ. 161 கோடி. இதில் 157 கோடி வராக் கடனாக மாறியது (97%). 10 ரியல் எஸ்டேட் முதலாளிக்கு கொடுத்த பணம் வரவில்லை. இங்கும் ரிசர்வ் வங்கி பல ஆண்டுகளாக தணிக்கை செய்துள் ளது. மேற்சொன்ன வங்கிகளில் நடந்திட்ட ஊழல் மற்றும் முறைகேடுகளை ஏன் ரிசர்வ் வங்கி கண்டுபிடிக்கவில்லை? பிஎம்சி வங்கியின் ஊழலை அங்குள்ள பெண் ஊழியர்களே வெளிக் கொண்டு வந்தனர்.  ஆக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் ஊழல் தடுத்து நிறுத்தப்படும், வங்கி வளர்ச்சி உத்தர வாதப்படும் என்பதில் உண்மையில்லை. அதேசமயம் இவ்வங்கிகளை வேறு வங்கிகளோடு இணைத்தும் தனியா ருக்கு தாரைவார்த்து வாடிக்கையாளர் வைப்புகளை திருப்பித் தரலாம். தற்போது Deposit Insurance and Credit Guarantee Cospin(DICGC) மூலம் ஒவ்வொரு வைப்புதாரருக்கும் ரூபாய் 5 லட்சம் வரை இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு மேல் உள்ள தொகையை தர ஏற்பாடு செய்யப்படும்.

பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு என்ன?
நகரக் கூட்டுறவு வங்கிகள் பலவீனமடைந்தாலோ நட்டமடைந்தாலோ அல்லது பலமாக இருந்தால்கூட அவை (சிறிய நிதி வங்கி) Small Finance Bank - ஆக  மாறிவிடலாம். இதற்கு ரூ. 50 கோடி வைப்பு இருந்தால் போதுமானது. பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் காந்தி தலைமையில் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக்குழுவும் இதே பரிந்துரையைத்தான் தந்தது. மேலும் ரூ. 2000 கோடிக்கு மேல் வைப்புகள் உள்ள நகர  வங்கிகள் நேரடியாகவே வணிக வங்கிகளாக மாறிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. 5 ஆண்டுகளாகி யும் இதை கேட்பாரில்லை. இந்நிலையில் தான் தற்போது வைப்புதாரர்களின் பணத்தை காப்பாற்றுகிறோம் என்று கூறி கூட்டுறவுகளை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டுள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள அவசரச் சட்டத்தில் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 45ல் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தத்தில் (iv) sub section5ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. for the words `date of monatorum` shall be sub- situed, the words `reconstruction or amalgamation` என்று கூறப்பட்டுள்ளது.  பிரிவு 56ன்கீழ் B(iii) Memorandum of Association or Articles of Association shall be contrued as references to bylaws. மேற்கூறிய வாசகங்கள் தனியாருக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும் திருத்தங்களாகும். அதாவது கூட்டுறவுகள் கூட்டுறவு அமைப்புகளாக நீட்டிக்க சட்டத்திருத்தம் வகை செய்யவில்லை. இவ்வங்கி களை தனியார் நிறுவனங்களாக மாற்றிடவும் தனியா ருக்கு தாரை வார்க்கவுமே திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

இனி மாநில அரசு என்ன செய்ய வேண்டும்?

1. மாநில அரசுகள் தங்கள் அதிகாரம் மற்றும் உரிமை பறிப்பு செய்துள்ள சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
2. சிறிய மற்றும் நடுத்தர மக்களுக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்து வரும் இந்நிறுவனங்களை தனியார்மயமாக்கவோ சிறு நிதி வங்கிகளாக மாற்றிடவோ அனுமதிக்கக் கூடாது.
3. மாநில அரசைப் பொறுத்தவரை கூட்டுறவுத் தேர்தலில் போட்டோ அடையாள அட்டை கொடுத்து அதனடிப்படையில் வங்கியின் சேவை பெற்றவர்களுக்கே வாக்குரிமை வழங்கிட வேண்டும். கட்சி அரசியலைத் தாண்டி தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெற வேண்டும்.
4. அரசியலமைப்பு 97ஆவது திருத்தத்தின்படி நிர்வாகக்குழுக்களில் தகுதிவாய்ந்த கல்வித் தகுதியும், வங்கியியல் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
5. வழங்கக் கூடிய கடன் அளவு வங்கியின் ஒட்டு மொத்த வியாபாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
6. கடனை வாங்கி திருப்பிக் கட்டாதவர்கள் திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும் கட்டாதவர்கள் மீது (wilful defaulters) கடும் நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களை கைப்பற்ற வேண்டும்.
7. DICGCன்படி வங்கி வைப்புதாரர்களின் அனைத்து வைப்புகளுக்கு உச்சவரம்பின்றி முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
8. கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வருமானவரியிலிருந்து சட்ட விலக்களிக்க வேண்டும்.
9. பலவீனமான வங்கிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மறு முதலீட்டு நிதி வழங்கிட வேண்டும்.
மேற்சொன்னவை அமல்படுத்தப்பட்டால் நகரக் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு மேலும் சிறப்பாக அமையும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதால் பெரிய பயன் ஏதும் ஏற்பட்டு விடாது.

கட்டுரையாளர் : தலைவர், 
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு

 

;