புதன், அக்டோபர் 21, 2020

கட்டுரை

img

5 கண்மாய்களை ஆக்கிரமித்து உப்பளங்கள் அமைப்பு... கேள்விக்குறியாகும் 3 மாவட்ட மக்களின் நீர் ஆதாரம்

7  அடி, 8 அடி தோண்டினாலே நீர் ஊற்றெடுக்கும். வளம்மிக்க மண்ணில் வசிக்கும் மக்கள் தற்போது குடிநீரை குடம் பத்து ரூபாய்க்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 250 அடி ஆழத்துக்கு 15க்கும் மேற்பட்ட ராட்சத ஆழ்குழாய்கள் அமைத்து சட்டவிரோதமாக செயல்படும் உப்பளங்களால் நீர் வளத்தை இழந்துள்ளன வேம்பார், வேம்பார் தெற்கு ஊராட்சிகள்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ளது வேம்பார் கடற்கரை. தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து குண்டாறு, வேம்பாறு, வைப்பாறுகளில் பெருக் கெடுத்து வரும் மழைநீர் இங்குள்ள கஞ்சம்பட்டி (வேம்பார்) ஓடை வழியாக கடலில் கலக்கிறது. இங்குள்ள கழிமுக பகுதியான தரக்குடி தரவையில் மழைக்காலங்களில் கடல்போல் தண்ணீர் தேங்கும்.வீணாக கடலில் கலக்கும் இந்த நீரை தடுப்பணைகள் மூலம் தேக்கி விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த உதவ வேண்டும் என்பது இந்த 3 மாவட்ட மக்களிடம் தலைமுறைகள் கடந்து நீடிக்கும் கோரிக்கை. இதற்கான போராட்டங்களையும் மக்கள்நடத்தியுள்ளனர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாகி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகிவிட்டது.

குடிநீர் ஆதாரமான வேம்பார் ஓடை
வேம்பார் பகுதி மக்கள் பெரும்பாலும் உப்பளத்தொழில், மீன் பிடித்தல், பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடியை சேர்ந்த பிரபலதுணிக்கடை உரிமையாளரும், வணிக வளாக உரிமையாளரும் தங்களது குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள் பெயரில் உப்பளங்கள் அமைக்கவும் ராட்சத ஆழ்துளை கிணறுகள் தோண்டவும் அதிகாரிகள் துணை நிற்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வைப்பாறையும் குண்டாற்றின் கிளை நதியையும் இணைப்பதாக வேம்பார் ஓடை இயற்கையாகவே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஓடை மூலம் வரும் தண்ணீர், ஐந்து கண்மாய்களை நிரப்பி பின்னர் வேம்பார் பெரியசாமிபுரம் வழியாக கடலில் சென்றடைகிறது. இந்த நீர் ஓடை சிவப்பெருங்குன்றம், பெரியசாமிபுரம், வேம்பார், கீழ சண்முகபுரம், முத்தையாபுரம், மாதரசிபுரம், பச்சையபுரம், குஞ்செயபுரம், சிலுவைபுரம் உள் ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. அது மட்டுமில்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீருக்கான நிலத்தடிநீர் ஆதாரமாகவும் வேம்பார் ஓடை விளங்குகிறது.

ஓடையின் பரப்பில் எட்டு மடங்கு ஏப்பம்
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிலஉப்பள முதலாளிகள் அரசு அதிகாரிகளின் உதவியுடன் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சர்வே எண்89, 90, 91, 93/2, 103 கொண்ட சுமார் 100 ஏக்கர்பரப்பளவு கொண்ட ஐந்து கண்மாய்களை முழுமையாக ஆக்கரமித்து உப்பளங்களாக மாற்றியுள்ளனர். வேம்பார் ஓடையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து,சூரன்குடி வேம்பார் பிரதான சாலயில் இருந்து உப்பளங்களுக்கு செல்வதற்கு சுமார் 15 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 435 மீட்டரில் பரந்து விரிந்த ஓடையின்அகலம் சுமார் 50 மீட்டருக்குள் சுருக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.18 கோடிமதிப்பில் பெரியசாமிபுரம் பகுதியில் கட்டப்பட வேண் டிய தடுப்பணையை ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக சிவப்பெருங்குன்றம் பகுதியில் அமைத்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டம், நீதிமன்றத்தின் துணையுடன் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார் வேம்பார் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசேகரன். அவர் கூறுகையில், நீர்பிடிப்புப் பகுதிகளில் முறைகேடாக பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளுக்கும் உதவிய நபர் பத்தாண்டுகளுக்கு பிறகுவட்டாட்சியராக பொறுப்பேற்றிருக்கிறார். வருவாய்துறை, வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, உப்புவாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த முறைகேடுகளுக்கு பின்னணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விதி எண் 110-ன் அறிவிப்பும் வீணானது
மேலும் அவர் கூறுகையில், 2011 ஆம் ஆண்டுஅன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கஞ்சம்பட்டி ஓடை கூட்டுக்குடி நீர் திட்டத்தை அறிவித்தார். சட்டமன்றத்தில் விதி எண் 110இன் கீழ்வெளியிடப்பட்ட அறிவிப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அந்த பகுதியையே நாசப்படுத்தும் உப்பளங்களை சட்டவிரோதமாக அனுமதித்துள்ளனர் என்றார்.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் புவிராஜ் தலையிலான ஒரு குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தது.

இதுகுறித்து புவிராஜ் கூறுகையில், வேம்பார் நீர் ஓடை தற்போது உப்பள முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்ட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியின் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி குடிநீர் பஞ்சம் ஏற்படும்அபாயம் உள்ளது. ஒரு கிராமத்தையே முற்றிலுமாக அடையாளம் தெரியாத அளவிற்கு அழித்துஉப்பளங்களாக மாற்றியுள்ளனர். அப்பகுதி மக்கள் பல வருடங்களாக போராடியும் கண்டுகொள்ளாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாகமாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஆக்கிரமிப்பாளர் களின் பிடியிலிருந்து கண்மாய்கள் மற்றும் நீர்ஓடையை பாதுகாக்க வேண்டும். பொதுமக்களின் குடிநீர் தேவையை புறக்கணித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நீர் நிலைகள், நீர் பிடிப்புப் பகுதிகள், நீர் வரத்துகால்வாய்களை ஒட்டி ஏதுமற்ற ஏழைகள் குடிசைஅமைத்தால் மாற்று ஏற்பாடுகளைக்கூட செய்யாமல் அகற்றுவதற்கு ஓடிவரும் அரசு இயந்திரம் வசதி படைத்தவர்கள் என்றால் ஆக்கிரமிப்புக்கு உதவுகிறது. இது இருப்போருக்கு ஒரு நீதி இல்லாதோருக்கு ஒரு நீதி என்பதை மட்டுமல்ல, நாட்டில் நிலவும் பாரபட்சத்தை அம்பலப்படுத்துவதாகவும் உள்ளது.

பினாமி பெயர்களில் உப்பளங்கள்
10 ஏக்கருக்கு மேல் உப்பளம் அமைக்க வேண்டுமென்றால் சென்னை சாஸ்திரி பவனில் செயல்படும் உப்புவாரியத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், வேம்பாரில் 10 ஏக்கருக்கும் குறைவான பரப்பளவில் 28 உப்பளங்கள் செயல்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது. உண்மையில் இவற்றில் பெரும்பாலானவை ஓரிரு நபர்களின் கட்டுப்பாட்டில் பினாமி பெயர்களில் செயல்படுகின்றன. ஆனால் ஆழ்குழாய் கிணறு அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும், சாலை போன்ற கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வருவாய் துறையிடமும் அனுமதி பெறவேண்டும். ஆனால் எவ்வித அனுமதியும் பெறாமல் விதி மீறல் நடந்து வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது.

கட்டுரையாளர் : விக்னேஷ், தூத்துக்குடி மாவட்ட நிருபர்  

;