புதன், அக்டோபர் 21, 2020

கட்டுரை

img

மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியும் ஓடி ஒளிந்த ஊழலும்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  சாலைகள் அமைப்பதில், தரமற்ற முறையில்பணிகள் நடப்பதாகவும், பெரும் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகளை முன்வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு, மாவட்ட மக்களின் ஆதரவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், உள்ளூர் அளவிலான கடையடைப்பு போராட்டம், சாலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது. மாவட்ட ஆட்சியர்அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். கட்சி நடத்திய போராட்டங்களின் விளைவாக நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சாலைப்பணிகளை முறைப்படுத்துவ தாகவும், முறைகேடுகளை தடுக்க உரிய கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுப்பதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆட்சி மற்றும் அதிகார மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒரு ஒப்பந்ததாரர் (இது நெடுஞ்சாலை துறையாயிற்றே. மேல் மட்டத்தில் நெருக்கம் இருக்கும் தானே) கட்சியினரை மிரட்டியதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் மீது அவதூறு பரப்புவதாகவும், தனது நற்பெயருக்கு (?) களங்கம் விளைவிப்பதாகவும் கூறி, கட்சியின் மூத்த தலைவர் என்.வாசு அவர்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரியும் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்தார். மிரட்டல்களாலோ, வழக்கை காட்டி அச்சுறுத்துவதாலோ மார்க்சிஸ்ட் கட்சியை பணிய வைத்து விட முடியாது எனும் உறுதியோடு இப்பிரச்சனையில் தொடர் தலையீடுகளை கட்சிமேற்கொண்டது. (துறை அதிகாரிகளான எங்களையெல்லாம் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் மிக்க அந்த ஒப்பந்ததாரரை சரியாக (!) டீல் பண்ணீட்டேங்களே.. என ஒரு சில அதிகாரிகளே நம்மிடம் நன்றி கூறியது ஒரு தனிக்கதை)

களப்போராட்டங்களோடு, சட்டப்போராட்டங்களையும் நடத்த தீர்மானித்தோம். ஒப்பந்ததாரர் சார்பில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில் எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லாததால் அதனை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் கட்சியின் சார்பில்ஒரு  மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் சிகரம்ச.செந்தில்நாதன் அவர்கள், கட்சியின் சார்பில் வாதாடினார். நான்காண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில்,ஒப்பந்ததாரர் தரப்பிலான புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ளூர் மக்களின் நலன்களுக்காகவும், ஊழல்களுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்திய அறப்போராட்டங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் இது. இவ்வழக்கின் வெற்றியை மாவட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதோடு, மக்களோடு இணைந்த களப் போராட்டங்களையும் கட்சி தொடரும்.

===ஆர்.பத்ரி===

;