வியாழன், அக்டோபர் 22, 2020

கட்டுரை

img

விவசாய சட்டங்கள், பூமாலைகளும் தூக்குக் கயிறுகளும்....

அந்த பெண்ணின் தலையில் பெரிய தவலை பாத்திரம் இருந்தது. அவள் இடுப்பில் ஒரு குடம், வலது கையில் ஒரு செம்பு.... எல்லாவற்றிலும் தண்ணீர் ததும்ப  அவள் நடந்தாள்....

இது இந்திய கிராமப் பெண் பற்றி ஆங்கிலேய அதிகாரி ஜான் அகஸ்டன் வால்தர் 1880ல் குறிப்பிட்டதாகும். அவருக்கு இங்கிலாந்தின் அரசு ஒரு வேலையை பணித்திருந்தது.“இந்திய உழவாண்மை மிக பிற்போக்கானது. உழவர்கள் பழைய மரக் கலப்பையை பயன்படுத்துகின்றனர். இந்திய உழவர்கள் திறமை இல்லாதோர் ஆவர். நாடெங்கும் பஞ்சம் நிலவுகிறது.... பஞ்சத்தின் காரணமாக பெற்றோர் மகனை, மகளை விற்றனர். வாங்க ஆள் வரும்வரை காத்திருந்தனர். பிழைத்திருந்தவர்கள் பிணங்களை தின்றனர். செத்தவர்களை புதைக்கவோ எரிக்கவோ ஆள்இல்லை. நாய், நரி, கழுகு தின்று தீர்க்க முடியாத அளவிற்குபிணங்கள் குவிந்து கிடந்தன....”

இந்திய பஞ்சம் அதற்கு காரணமான இந்திய உழவர்கள் மீதான ஆங்கிலேய அதிகாரிகளின் குற்றச்சாட்டு இது. இதனை ஆராயவே வெள்ளையர் அரசு ஜான்வால்தரை அனுப்பியது. ஆய்வின் முடிவில் அவர் தன் அரசுக்கு அறிக்கை தந்தார்.“.... இந்திய உழவர்களுக்கு கற்று கொடுக்க எதுவுமே இல்லை. நான்தான் அவர்களிடம் கற்றுக் கொண்டேன். ஒரு மழைக்குப்பின் மண் இறுகுவதால் மண்ணில் காற்றோட்டம் குறைகிறது. அதனால் நிலத்தை கிளறி கொடுக்ககளைக் கொத்திகளுடன் நிலம் நோக்கி நடக்கிறார்கள். இது இந்திய உழவர்களிடம் நான் கற்றது.”

மோடி அரசு எதேச்சதிகாரமாக, நாடாளுமன்றத்தில் ஜனநாயகப்பூர்வமான விவாதத்தை அனுமதிக்காமல்  3 சட்டங்களை கொண்டு வந்தது. விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் அவசரச் சட்டம்-2020
n விவசாயிகள் விளைபொருள் வணிகம் மற்றும் வர்த்தக அவசரச் சட்டம் -2020 n அத்தியாவசிய பொருள்கள் அவசரச் சட்டத்திருத்தம்-2020 05-06-1920ல் அவசரச் சட்டமாக பிறப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் 15-09-2020, 17-09-2020 தேதிகளில் விவாதிக்கப்பட்டு நாடாளுமன்ற மரபுகளுக்கு விரோதமாக மதிய உணவுக்கு கலையும் நேரத்தில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மக்கள் தொகையில் அரைகோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரானாவால்¢ தாக்குண்டுள்ளனர். இந்த பாதிப்பில் இந்தியா, அமெரிக்காவை கடந்து 1 ஆம் நம்பர் இடத்திற்கு போகாமலும் எண்ணிக்கை கோடிஅளவிற்கு போகாமலும் காக்க அரசு அவசரச் சட்டங்களை கொண்டு வரலாம். இந்திய விஞ்ஞானிகள் அனைவரையும் கோவிட் 19க்கு மருந்து கண்டுபிடிக்க அனைத்துஆய்வகங்களையும் அந்த ஒரே பணியில் ஈடுபடுத்தி அவசரச் சட்டம் கொணர்ந்தால் ஆரத்தழுவி வரவேற்கலாம். எனினும் மத்திய அரசோ இலையில் அப்பத்தை எடுத்துவிட்டு பாறாங்கல்லை உண்ணக் கொடுக்கிறது. எல்லாவற்றையும் விட இச்சட்டங்களை நியாயப்படுத்த பொய் மழை பொழிகிறது. சொல்லப்போனால் இத்தகு சட்டங்களை இந்தியா முன்பே சந்தித்துள்ளது. 

அவுரி விவசாயிகள் எழுச்சி
இந்திய விவசாயிகளின் முதல் பொது வேலை நிறுத்தம் 1860 ஏப்ரலில் நடந்தது. அந்த காலக்கட்டத்தில் பிரிட்டனில் நூற்பாலைகள் வளர்ந்தன. அவுரிச் சாயத்திற்கு அதிகமான கிராக்கி இருந்தது. நவீன ரசாயன தொழிற்சாலைகள் செயற்கை நீலச் சாயத்தை உற்பத்தி செய்கின்றன. இதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே பருத்தி ஆடைகளுக்கு நீல நிறத்துக்கு அவசியமான சாயத்தை தயாரிக்க உதவும் அவுரிச் செடியை இந்திய உழவர்கள் பயிர் செய்தனர். பிரித்தானிய தோட்ட முதலாளிகள் இங்கிருந்து அவுரிச் செடியை தம் நாட்டுக்கு கொண்டு போயினர். எனினும் பிரிட்டிஷ் நூற்பாலைகளுக்கு ஏராளமான அவுரிச் சாயம் தேவைப்பட்டது. பிரிட்டனின் சாயத் தொழிற்சாலைக்காக இந்திய விவசாயிகளின்  ரத்தம் பிழியப்பட்டது. கையிலும் காலிலும் விலங்குகளை மாட்டி துப்பாக்கிமுனையில் இந்திய விவசாயிகள் அவுரிச் சாகுபடி செய்ய கட்டளை இடப்பட்டனர்.  

இந்த ஒடுக்குமுறையின் தன்மை குறித்து நாடியா நீதிபதி ஏ.ஸ்கோன்ஸ் 20-04-1854ல் வங்காள அரசின்செயலாளருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார். “விவசாயிகள் அவுரிச் சாகுபடி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். முதலாளி குறிப்பிடும் பயிர் தவிர அவர்கள் வேறு எந்தப்பயிரும் சாகுபடி செய்ய முடியாது. ஒவ்வொரு இரண்டரைபீகா நிலமும் முதலாளிகளால் ஒரு பீகாவாக அளவிடப்பட்டது. இத்துடன் திருப்தி அடையாமல் முதலாளிகள் இரண்டு கட்டு அவுரியை ஒரு கட்டாக மதிப்பிட்டார்கள். விவசாயிகளின் இதர பயிர்களை வேண்டுமென்றே முதலாளிகள் நாசப்படுத்தினர். வீடுகளை எரித்தனர். ஆடுமாடுகளை கொள்ளையடித்தும் நீரில் அமுக்கியும் கொன்றனர். எனவே அவுரிச் சாகுபடி குறித்து பரிசீலிக்க ஒரு கமிசன் நியமிக்க வேண்டும்.” 
இதேபோல் விவசாயிகளின் மரணத்தை சட்ட ரீதியிலான கொலை என்று சொல்ல முடியாவிட்டாலும் பலாத்காரமே அவர்களின் மரணத்திற்கு காரணம் என்று வங்காள கவர்னர் ஜென்ரல் 13-07-1817ல் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். இந்த அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பை இந்திய விவசாயிகள் பல வடிவங்களில் வெளிப்படுத்தினர். எதிர்த்த விவசாயிகளின் கலகத்தை அடக்க வங்காளத்தின் 2வது போலீஸ் படை ஏவப்பட்டது. 10-04-1860ல் பாப்ளா மாவட்டத்தின் பீராரி கிராமத்திற்கு ஒரு போலீஸ் படை போனது. அங்கு 2000 விவசாயிகள் ஈட்டி அம்பு லத்திகளுடன் திரண்டிருந்தனர். 52 கிராமங்களை சேர்ந்த அவர்கள் போலீஸ் படையை சுற்றி வளைத்து தாக்கினர்.இதேபோல் வங்கத்தின் லெப்டினென்ட் கவர்னருக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. பத்மாநதியின் கிளையான கடூயிநதியில் ஒரு தோணியில் அவர் பயணம் செய்தார். இது தெரிந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் நதிக்கரையில் குவிந்தனர். குறைகளை கேட்க கரைக்கு வரும்படி கவர்னரை அழைத்தனர். தாக்க மாட்டோம் என உறுதியும் தந்தனர். இயந்திர படகை கரைக்கு திருப்பிய கவர்னர் அவர்களின் குறைகளை களைவதாக உறுதி தந்தார். தோட்ட முதலாளிகளின் நலன் பிரிட்டிஷ் அரசுக்கு முக்கியமானதுதான். அதையும் விட முக்கியம் அவர்கள் ஆட்சியின்எதிர்காலம் ஆகும். 

பிரிட்டிஷ் சட்டத்தை விட மோசமான சரத்து
மோடி அரசின் சட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டத்தைவிட மோசமான சரத்து உள்ளது. அவுரிச் சாகுடி குறித்த ஒப்பந்தத்தில் விவசாயி தவறு இழைத்தால் தோட்ட முதலாளிபலவந்த நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. வேண்டுமானால் சிவில் கோர்ட்டில் வழக்கு போடலாம் என்ற வாய்ப்புஇருந்தது. ஆனால் மோடியின் பண்ணை ஒப்பந்த மசோதாஇந்த உரிமையையும் பிடுங்கியது. ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் பிரிவு 19ன் படி நீதிமன்றம் போக முடியாது. ஒப்பந்தமீறல்கள் குறித்து 30 நாட்களில் துணை வட்டாட்சியரிடமும் மேல் முறையீட்டிற்கு மாவட்ட ஆட்சியருக்கும் முறையீடு செய்ய முடியும். இதற்கென தனி நடுவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் முழுவதுமே அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்புகள்தான். ஒப்பந்தம் போடுபவர் அவரின் தேவைக்கு  ஏற்பவே சாகுபடியை தீர்மானிப்பார். 

விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் அவசர சட்டம்-2020ன் படி ஒப்பந்தம் செய்பவர்களுக்குத்தான் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்குகிறது. சாகுபடி செய்பவருக்கு அல்ல. பண்ணை ஒப்பந்த சட்டப்படி சிங்கத்தை கூண்டுக்குள் வைத்தது போல்தோற்றம் உருவாக்குகின்றனர். கூண்டுக்குள் சிங்கம்இருப்பது உண்மைதான். அதை எப்போது வேண்டுமானாலும் திறந்து சிங்கத்துக்கு சுதந்திரமும் தந்துவிடுவர். ஆனால் சிங்கத்தின் கூண்டுக்குள் நீ எங்கு வேண்டுமானாலும் ஓடலாம் என்று சொல்லி முயல்களை தூக்கி உள்ளேபோடுகின்றனர். கட்டுப்பாடற்ற சுதந்திரம் முயல்களுக்கானது அல்ல. கடைவாயில் இரத்தம் ஒழுக காத்திருக்கும் கார்ப்பரேட் சிங்கங்களுக்குத்தான்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தையே மோடியின் 3 சட்டங்களிலும் அறவே இல்லை. எனில் அவரின் அணுகுமுறைதான் என்ன? மோடிஅரசால் அறிவிக்கப்பட்ட சாந்தகுமார் குழு விவசாயிகளின் 6 சதவீதத்திற்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை தரப்படும் என்றது. இந்திய உணவுக் கழகம் மற்றும் நாபெட் ஆகிய அமைப்புகள் விவசாயிகளிடம் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்கின்றன. பொது விநியோக திட்டத்தின்கீழ் உணவு தானியங்கள் அளிப்பதும் நிறுத்திக்கொள்ளப்படும் என்றும் கூறுகின்றன. அநேகமாக இந்திய உணவுக்கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நியாயவிலைக் கடைகள் விரைவில் மூடப்படும் என்பதன் சூசகம்தான் அது. மோடி அரசின் உடல்மொழியே பொய் ஆபரணங்களால் கட்டமைக்கப்பட்டது. மத்திய அமைச்சர்நரேந்திர சிங் தோமர் பின்வருமாறு கூறினார். “குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. மோடி அரசுதான் அதனை நிறைவேற்றியது.” ஆனால் நீதிமன்றத்திலேயே எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்க முடியாது என மோடி அரசு கூறிவிட்டது. அதுபோல் இதுவரை வழங்கவும் இல்லை. 

விரோதச் சட்டங்களை  வியந்திடும் எடப்பாடி    
தமிழகத்தில் தன் பதவியை காப்பாற்ற துடிக்கும்மோடியின் ஜாடி எடப்பாடியோ ஹிட்லரின் கோயபல்சாகவே மாறிவிட்டார். விவசாய விரோத சட்டத்தை எதிர்த்துபஞ்சாப்பின் பெண் அமைச்சர் ஹர்சிம்ரத்கவுர் பதவியைதூக்கி எறிகிறார். எடப்பாடியோ நரி பரி வேடம் போட்டதுபோல் தன்னை விவசாயி என்று கூவுகிறார். உழவுத்தொழில்பற்றியும் உழவர்கள் பற்றியும் தமிழகத்திற்கு தனி பாரம்பரியம் உண்டு.  உழவுச் சிறப்புடன் எருதுகளை பாதுகாப்பவராகிய உழவர் குடியை பாதுகாத்தால் பகைவர் நினக்கு அடிபணிவர் என்கிறது புறநானூறு. இதன் பொருள் வேளாண் மாந்தரை பாதுகாப்பது அரசின் கடமை என்பதாகும். மருதநிலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்த உழவர்கள் குடும்பத்தில் திருமணம் செய்ய விரும்பி வேந்தர்கள் பெண் கேட்டபோது பெண் தர மறுத்த ஏராள இலக்கியச் சான்றுகள் உண்டு. உழுகின்ற கலப்பை நிலத்தின் சாலில்விதைத்து விளைந்த நெல்லின் பயனே போர்படை வெற்றிஎன்று ஏரும் போரும் ஒன்றென இங்கு போற்றப்பட்டது. இத்தகு பெருமை வாய்ந்த தமிழ் நிலத்திலிருந்து வேளாண்மை விரோதச் சட்டங்களுக்கு சால்வையும் மாலையும் எடப்பாடி மாற்றி மாற்றி போட்டு வியக்கிறார். 2010-11ல் வேளாண்துறை கணக்கெடுப்பு ஒரு உண்மையை வெளிச்சப்படுத்தியது. அதன்படி குறுவிவசாயிகள் என்போர் 1 1/4 ஏக்கர் முதல் 2 1/2 ஏக்கர் வரை உள்ளோர் என்றும் சிறு விவசாயிகள் என்போர் 2 1/2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் உள்ளோர் என்றும் மேலும் நடுத்தர விவசாயிகள் என்போர் 10 ஏக்கர் முதல் 25 ஏக்கர் உள்ளோர் என்றும்வகைப்படுத்தப்பட்டனர். இம்மூன்று பிரிவுகளிலும் சேர்த்து அகில இந்திய விழுக்காடு 95 ஆகும். தமிழகத்திலோ 98 விழுக்காடு இந்த பிரிவை சேர்ந்தவர் ஆவர். வெறும் 2 விழுக்காடு உள்ள பணக்கார மற்றும் கார்ப்பரேட் பண்ணைகளுக்கான சட்டத்தை ஏழைகளை வாழ வைக்கும் சட்டம் என ஏமாற்றுகின்றனர். தொடர்ந்து 6 ஆண்டுகளில் 60000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலை நடந்துள்ளது. 2019ல் மட்டும் 10281 விவசாயிகள் தற்கொலை புரிந்துள்ளனர். 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயிதற்கொலை செய்கிறார். விவசாயிகளின் தற்கொலைதான் இரட்டிப்பாகிறதே தவிர வருமானம் இரட்டிப்பாகவில்லை. 

இச்சட்டமானது உயிர் வாழ அடிப்படையான உணவுப் பொருள்களை பதுக்க வழி அமைக்கிறது. பற்றாக்குறை காலத்தில் அவற்றின் விலையை உயர்த்தி பூதமாக பயமுறுத்த வகை செய்கிறது. நெல் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை வைரமும் கோமேதகமும் சங்கிலிகளாக மின்னும் செல்வந்த கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குகிறது. இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது எந்த நிவாரணமும் இனி கிடைக்காது. பாதிப்புகளுக்காக யாரும் நீதிமன்றமும் போகமுடியாது. மண் தோன்றி அரசும் தோன்றிய காலத்திலிருந்து எவையெல்லாம் அரசின் பணிகளாக வரையறுக்கப்பட்டதோ அவை இனி அரசின் பணிகள் அல்ல. வாக்குகளும் சம்பளமும் வாங்குவதும் கிளர்ச்சிகளை ஒடுக்க ஆயுதம் தரிப்பதும்தான் இனி அரசின் பணியாக அமையும். ஆனால் வரலாறுவேறு உண்மையை சொல்கிறது. 1830களிலேயே இந்தியவிவசாயிகள் வங்கத்திலும் பஞ்சாபிலும் உத்தரப்பிரதேசத்திலும் மைசூரிலும் கேரளத்தின் மாப்பிள்ளை கிளர்ச்சியிலும் ராணுவத்தோடு மோதினர். தெலுங்கானாவிலும் தமிழகத்திலும் இத்தகு கலகங்கள் நடந்துள்ளன. உயிர் தியாகங்களின் பலிபீடத்தில் உழவர்களின் உரிமைகள் மீட்கப்பட்டன.  

ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவித்த இரவில் பிரதமர் மோடி கூறினார். “இந்த நடவடிக்கைகள் பயன் தராதுஎன்றால் நான் தூக்கு மாட்டிக்கொள்வேன்.” உண்மையில் ஏராளமான கழுத்துகளில் அவரின் ஆட்சிதான் தூக்கு கயிறை மாட்டுகிறது. அவரின் தோள்களோ அந்த தூக்குக் கயிறுகளை மாலைகளாக சூடிக்கொள்கிறது. 4000 பேர்உயிர்த் தியாகம் செய்த தெலுங்கானா புரட்சி பற்றி ஹரிந்திரநாத் சட்டோபாத்யாயா பின்வருமாறு எழுதினார். 

“துயரப்பட்டோருக்கு
சூரியனின் தோற்றம் சிவந்த காயம்தான்
நிலவோ சீழ் ஒழுகும் புண் 
அவர்களின் ஒரே ஆயுதம் பசி!
அவர்களின் ஒரே விருப்பம் வெற்றி!”

===வெ.ஜீவகுமார்===

;