ஞாயிறு, நவம்பர் 29, 2020

tamilnadu

img

தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தொல்.திருமாவளவன் மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

 தொல் திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசியதற்காக சங் பரிவார் அவர் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. மனுஸ்மிருதியில் சமூகத்தின் பல்வேறு ஒடுக்கப்பட்ட பகுதியினரைப் பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் ஏராளமான பகுதிகள் உள்ளன. மனித இனத்தை சாதிப்பாகுபாட்டிற்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் அடங்கிச் செல்வதை மனுஸ்மிருதி வலியுறுத்துகிறது. இத்தகைய காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களின் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைப்பதன் மூலமே நாகரிகம் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது.

தமிழக காவல்துறை அரசமைப்பு சட்டத்தின்படி நடப்பதற்கு பதிலாக, சமீப காலமாக சங் பரிவாரின் ஆட்டுவிப்புக்கு இணைந்து போகிற நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. பணிக்கு செல்லும் பெண்களை பற்றி தவறாக பேசியோர், ஊடகத்துறையில் இருப்பவர்கள் உயர் பொறுப்புகளுக்கு வருவதற்காக தங்களது ஒழுக்கத்தில் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று பேசியோர் மீதெல்லாம் புகார்கள் கொடுக்கப்பட்ட போது காவல்துறை அவற்றைப்பற்றி கண்டு கொண்டதே இல்லை. பல பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் அவதூறுகளும், புரளிகளும் சில நபர்களால் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்ட போது, அவற்றின் மீது புகார் பதிவு செய்வதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ காவல்துறை முன் வருவதில்லை.அதேசமயம் சங் பரிவார் எந்த ஒரு விசயத்தை பற்றியும்புகார் தெரிவித்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்வதையும், வேட்டையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியயே, தோழர் தொல்திருமாவளவன் மீதான வழக்குகளும் ஆகும். 
எனவே, காவல்துறை தோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிட வேண்டுமென்பதையும், அதேசமயம் பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறாகவும், கொச்சைப்படுத்தியும், தாக்குதல் நடத்தியோர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

 

;