புதன், அக்டோபர் 28, 2020

தமிழகம்

வாகனவரி, காப்பீடு, எப்.சி.,யிலிருந்து விலக்கு... மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை:
கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வாடகை ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு வரி, வாகன காப்பீடு மற்றும் எப்.சி. ஆகியவற்றில் விலக்களிக்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “கொரோனா பொது முடக்கத்தால் ஐந்து மாதங்களாக வாடகை வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். வாடகை கார் ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் பலர் வாகனங்களை தவணை முறையில் வாங்கி தங்கள் தொழிலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா முடக்கம் காரணமாக ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா தவணை கட்டுவதில் விலக்களித்துள்ளது, இருந்தும் பல தனியார் நிதி நிறுவனங்கள் தவணை தொகையை கட்டவேண்டும் என கூறுகின்றனர் மேலும் தவணை கட்டாத பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் அரசால் விதிக்கப்படும் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வரி, வாகனக் காப்பீடு மற்றும் FC (வாகனத்தின் நிலை தன்மை) ஆகியவை செலுத்த வேண்டியுள்ளது.

வாடகை வாகனங்களுக்கு எடுக்கப்படும் எப்.சி., சில வாகனங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்ட வேண்டி உள்ளது. அவ்வாறு கட்டாத வாகனங்களுக்கு கட்ட வேண்டிய தொகையை இரு மடங்காக கட்ட வேண்டி உள்ளது. இது போன்ற பல பிரச்சனை காரணமாக வாடகை ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் 50க்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.எனவே பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பொது முடக்க காலத்திற்கு வாடகை கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வரி, வாகன காப்பீடு மற்றும் எப்.சி.க்கு விலக்களிக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது வாடகை ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நிவாரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

;