வியாழன், அக்டோபர் 22, 2020

தமிழகம்

img

கீழடி அகழ்வாய்வுப் பகுதிகளில் சவுடு மண் அள்ள எதிர்ப்பு... சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை:
கீழடி அகழாய்வின் தொடர்ச்சியாக மணலூர் அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்தின் அருகே கண்மாயில் குடிமராமத்து பணியில் சவுடுமண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய  உத்தரவிட கோரிய வழக்கில் சிவகங்கை ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யஉத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் மணலூரை சேர்ந்த மகேஷ் ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  “மதுரை மாவட்ட எல்லை பகுதியில் சிவகங்கை மாவட்டம்  வைகை நதிக்கரைப்பகுதியில்  அமைந்துள்ள கிராமங்கள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர். இந்தப் பகுதியில் தற்போது தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கீழடி உட்பட பல இடங்களில் சங்க காலத்தில் வைகை நதிக் கரையோரம் மனிதர்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள், பண்டைய பொருட்கள் போன்றவை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து வருகிறது. அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்கு பிறகே குடிமராமத்து பணிகள் நடைபெற வேண்டும், ஆனால் அதை பின்பற்றாமல் விவசாய நிலங்களில் சவுடு மண் எடுப்பதாகக் கூறி அரசின் அனுமதி பெற்று அரசு விதிகளை மீறி விவசாய நிலங்களில் ஆழமாக தோண்டி அளவுக்கதிகமாக மணலை அள்ளி வருகின்றனர். மேலும் குடிமராமத்து பணிகள் என கூறி அரசை ஏமாற்றி மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், தொல்லியல் ஆய்வுகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் புகைப்படத்துடன் கூடிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மௌனம் சாதிக்கும் தமிழக அரசு
பொதுவாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையில் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நடவடிக்கை  எடுக்க தவறிவிட்டார். எனவே அவரை இடமாற்றம் செய்து வேறொருவரை நியமித்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல் கட்சிகளின் போராட்ட நடவடிக்கை கள், பொதுநல வழக்குகள், நீதிபதிகள் உத்தரவுஇப்படி தொடர் நடவடிக்கை இருந்தாலும்  சிவகங்கை மாவட்ட மணல் கொள்ளை குறித்து முடிவெடுக்க தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது மௌனத்தை கலைக்க மறுக்கின்றனர்.

;