புதன், அக்டோபர் 21, 2020

தலையங்கம்

img

மோடி அரசுக்கு எச்சரிக்கை...

ஏகாதிபத்தியத்தின் சேவகர்கள் நவீன பாசிஸ்ட்டுகள். அமெரிக்காவில் துவங்கி இந்தியாவரை இனவெறி, மதவெறி உள்ளிட்ட பல்வேறுவகையான தேசிய வெறியை விசிறிவிடுவதோடு, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் அளவில்லாத மூலதனக் குவிப்புக்கு துணை போகிறார்கள் நவீன பாசிச ஆட்சியாளர்கள். முதலாளித்துவத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றான நாடாளுமன்ற ஜனநாயகத்தையே, அது தங்களது நோக்கங்களுக்கு எதிராக இருப்பதால், குழிதோண்டிப் புதைக்க முயற்சிக்கிறார்கள். நவீன பாசிஸ்ட்டுகளின் ஆட்சியில் நாடாளுமன்றம் இருக்கும்; ஆனால் அது உயிர் உருவப்பட்ட வெறும் கூடாக மாற்றப்பட்டிருக்கும் என்றுமார்க்சிய அறிஞர் பேரா.விஜய்பிரசாத், அடிக்கடிகூறும்  கூற்றுக்கு இலக்கணமாக மாறியிருக்கிறது இந்திய நாடாளுமன்றத்தில் பாஜக ஆட்சியாளர்களின் சமீபத்திய செயல்பாடு. கொடிய உள்ளடக்கத்தை கொண்ட வேளாண் மசோதாக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை மீறி தானடித்த மூப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் செப்டம்பர் 25 கிளர்ச்சியை பேரெழுச்சியுடன் நடத்தியிருக்கிறார்கள். 

மறுபுறம் தமிழக வேளாண் துறை அமைச்சர்முதல் ஆளும் கூட்டணியின் அமைச்சர்கள், இந்த வேளாண் சட்டங்களைப் பற்றி புளகாங்கிதத்துடன் பேட்டியளித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த சட்டங்கள் வேளாண் பெரு மக்களுக்கு எதிரானவை மட்டுமல்ல; ஒட்டு மொத்த நாட்டின் உணவுப் பாதுகாப்பையே ஏகாதிபத்திய சக்திகளின் கைகளிலும், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளிலும் அடகு வைப்பவையாகும்.இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட வளர்முக நாடுகள், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கக் கூடாது என்பதுதான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நீண்ட கால விருப்பமாகும். இதற்காகத்தான் உலகவர்த்தக அமைப்பின் பல சுற்று பேச்சுவார்த்தைகளிலும் அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் வெவ்வேறு வார்த்தைகளில் வாதாடி வந்திருக்கின்றன. தங்களது நாட்டு விவசாயிகளுக்கு மானியங்களை வாரி வழங்கும் ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளது அரசுகள் விவசாய மானியத்தை சரமாரியாக வெட்ட வேண்டுமென்று வாதிட்டன. இது தொடர்பான ஒப்பந்தங்களையும் திணித்தன. முடிவில்லா பேச்சுவார்த்தைகளாக இவை இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. 

மோடி அரசு கொண்டு வந்துள்ள புதியவேளாண் சட்டங்களுக்கும், இந்திய உணவு உற்பத்தியை வீழ்த்த முயற்சிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சிகளுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. அதுமட்டுமல்ல, ஏற்கெனவே விவசாயத்தை விட்டு லட்சக்கணக்கான விவசாயிகள்வெளியேறியிருக்கும் நிலையில் எஞ்சியிருப்பவர்களையும் விவசாயத்திலிருந்து துரத்திவிட்டு, அம்பானி, அதானிகளின் கார்ப்பரேட் கம்பெனிகள் பெரும் நிலக்குவிப்பை அரங்கேற்றுவது என்ற திட்டமும் இதன் பின்னால் உள்ளது. இத்தகைய சூழ்ச்சிகளுக்கு செப்.25 போர் ஒரு பெரும் எச்சரிக்கை!

;