புதன், அக்டோபர் 21, 2020

தேசம்

img

மயில் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள்

நரேந்திர மோடி செய்திருப்பதைப் போல, வேறு எந்தவொரு பிரதமரும் தன்னை இந்திய
வரலாற்றில் இவ்வாறு பதித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் ஆட்சியில் இருந்த ஆண்டுகள்
இந்திய வரலாறு எழுதப்படுகின்ற போது, பாஜகவின் காலமாக அல்லாமல், மோடியின் காலம்
என்றே அழைக்கப்படும் அளவிற்கு அவரது ஆதிக்கம் இருக்கின்றது. மற்றவர்களைப் போல
அல்லாமல் தன்னைத் தலைவராகக் காட்டிக் கொள்வதில் அவர் எப்போதும் கொண்டுள்ள
ஆர்வமே, தனது கட்சியையும் மீறி அவர் தன்மீது வெளிச்சம் போட்டுக் கொள்வதற்கான
காரணமாக இருக்கிறது. தன்னையே வெளிப்படுத்திக் கொள்வது, வரம்பு மீறிச் செய்யப்படுகின்ற
அபாயத்தைக் கொண்டிருக்கிறது. தனது கட்சிக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ
அதிர்ஷ்டவசமாக மோடியைப் பொறுத்தவரை எந்தப் போட்டியாளரும் இருக்கவில்லை. அரசியல்
ரீதியாக, இயற்கையாகவே அவருக்குச் சாதகமாக அது செயல்படுகிறது என்ற போதிலும், மக்கள்
தொடர்புகளின் அடிப்படையில் எந்த இடத்தில் எல்லைக்கோட்டை வரைய வேண்டும் என்பதை
அவர் உணர்ந்து விடாமல் அது தடுக்கிறது. உண்மையில் அது மிகப்பெரிய பலவீனமாகும்.
சமீபத்தில் அது இரண்டு சந்தர்ப்பங்களில் தெளிவாகத் தெரிந்தது. முதலாவதை மயில் ஆடிய
தருணம் என்றும் மற்றொன்றை மடிக்கணினி பார்த்த தருணம் என்றும் நாம் அழைத்துக்
கொள்ளலாம்.
மயில் ஆடிய தருணம் என்பது புகைப்பட வெற்றியாகும். மயில்கள் சுற்றி இருக்கின்ற போது
வெற்றி எப்படி கிடைக்காமல் போகும்? தனது தோட்டத்தின் வழியாக மோடி நடந்து செல்கின்ற
போது, மயில்கள் தங்களுடைய கண்கவர் தோகைகளை விரித்து, சுழன்று நடனமாடி, பிரதமரின்
வருகையால் ஈர்க்கப்பட்டதைப் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. விடாது அவரைப்
பாராட்டி வருகின்ற ஊடகங்கள் அந்தப் புகைப்படங்களை பரவலாகப் பரப்பியதால் ஏற்பட்ட
விளைவு வியத்தகும் அளவில் இருந்தது.

அந்த மடிக்கணினி பார்த்த தருணத்தில் இருந்த கவர்ச்சி குறைவாக இருந்த போதிலும், அது
தெரிவித்த செய்தி மிகமுக்கியமானதாக இருந்தது. அந்தப் படம் அனைத்தையும் சொல்வதாக
இருந்தது. தோட்டம் ஒன்றில் மரத்தின் கீழே அவர் அமர்ந்திருப்பதை அந்தப் படத்தில் காண
முடிந்தது. அவரைச் சுற்றிலும் வெள்ளை வாத்துகள், திறந்து வைக்கப்பட்ட மடிக்கணினி,
ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்கள். அந்த இரண்டும் திறந்து வைக்கப்பட்டிருந்ததால் அவை ஒரே
நேரத்தில் வாசிக்கப்படுவதைக் காட்டுவதாக இருந்தன. மேலும் ஒரு செய்தித்தாளுக்குள்ளும் அவர்
மிகத்தீவிரமாக மூழ்கியிருந்தார். அது ஏதோ சாதாரண செய்தித்தாள் அல்ல, இளஞ்சிவப்பு
நிறத்திலான செய்தித்தாள். நிச்சயமாக அந்தப் புகைப்படத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச்
செய்பவராக நமது பிரதமர் காட்சியளித்தார்.

ஆனாலும் அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளும் உறுதியுடன் அங்கே
இருந்த அந்த வாத்துகளைத் தவிர, அந்தப் படம் திட்டமிட்டு நடித்து எடுக்கப்பட்டது என்பதை
பாஜகவில் உள்ள சிறுகுழந்தை கூட காண முடிவதாகவே அந்தப் படம் இருந்தது.
வெற்றிகரமான தலைவருடைய திட்டத்திற்கு அனைத்தும் பொருந்திப் போக வேண்டிய அசாதாரண
காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை அதிர்ஷ்டசாலியாக இருந்தால்,
தோல்வியடையும் தலைவர் பொதுமக்களின் நினைவிலிருந்து அகற்றப்பட்டு விடுவார்.
அவ்வாறான அதிர்ஷ்டம் இல்லையென்றால் அவர் அவமானப்படுத்தப்படுவார். வெற்றிகரமான
தலைவரோ, தன்னுடைய தோல்விகளை பொதுமக்களின் நினைவிலிருந்து அழித்து விடுவார்.
நம்மை இன்னும் பாதித்துக் கொண்டிருக்கின்ற பணமதிப்பு நீக்க அறிவிப்பு ஒரு மிகப்பெரிய தவறு
என்பதை இன்று யார் நினைவில் கொண்டிருக்கிறார்கள்? பெரிய நகரங்களிலிருந்து துயரங்கள்
மட்டுமே காத்துக் கொண்டிருந்த தங்களுடய சொந்த ஊர்களுக்கு, ஒரே இரவில் தங்களுடைய
வேலையை இழந்த 45 கோடி மக்கள் நடந்து சென்ற காட்சியை யார் இன்று நினைவில்
கொண்டிருக்கிறார்கள்? 2020 மார்ச் - ஏப்ரல் காலகட்டத்தின் இடப்பெயர்வு இந்தியக் கூட்டு
நினைவில் அடுத்த பல தலைமுறைகளுக்கு இருக்கும்.

பொதுவில் விவாதிக்கப்படாவிட்டாலும் நாட்டை மிகவும் மோசமாகக் காயப்படுத்துகின்ற சில
முடிவுகள், நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கப்படும். ரஃபேல் போர் விமானங்களை
வாங்குவதற்காக பிரான்சுடன் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான
முடிவு இவற்றில் மிகவும் மோசமானது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த விலையை விட
மூன்று மடங்கு அதிக விலையில் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக புதிய ஒப்பந்தம்
கையெழுத்தானது. விமான ஒப்பந்தங்களில் முந்தைய அனுபவம் எதுவுமில்லாது, புதிதாக வந்த
தனியார் ஒருவருக்குப் பயனளிப்பதற்காக, இந்திய நாடு பெரிதும் இழக்க வேண்டியிருந்தது. அந்த

ஒப்பந்தம் தேசிய நலனை மிஞ்சுகின்ற வகையில் இருந்த தனிப்பட்ட நலனை மறைப்பதற்கான
ஒரு சிறுமுயற்சியைக்கூட தன்னிடம் கொண்டிராததாக இருந்தது.

எந்தவொரு அரசாங்கங்கமும் தேசிய நலனுடன் விளையாடுவதாகவே இருக்கின்றன.
தங்களுக்கிடையே இருந்த தனிப்பட்ட நட்பை வணிக நன்மைக்காக ஜி டி பிர்லா பயன்படுத்துவதை
மகாத்மா காந்தியே தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனாலும் முன்பிருந்த அரசாங்கங்கள் தனிப்பட்ட
விசுவாசத்தால் தேவையற்ற முறையில் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்ற தோற்றத்தையாவது
மக்களிடம் தருவதற்கு முயன்றன. தங்களுடைய நடவடிக்கைகள் மக்களால் நியாயமானவை
என்று பார்க்கப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கு அக்கறை இருந்தது. அந்த வகையான
பொதுமக்கள் ஒப்புதல்கூடப் புறக்கணிக்கப்படுவதை நாம் இப்போது காண்கிறோம். அதானி -
அம்பானி கலாச்சாரம் பிர்லா - பஜாஜ் கலாச்சாரத்திலிருந்து மிகவும் வித்தியாசமானதாக
இருக்கின்றது.

இந்த வித்தியாசம் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்,
சற்றே இடைநிறுத்தி, நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைச் சற்றே கவனிக்க வேண்டும்.

பாராளுமன்றத்திற்கான மதிப்பைக் குறைப்பதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,
பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. பாராளுமன்றத்தின்
முன்பற்கள் இல்லாமல் போகப் போகிறது என்பதே இதன் பொருள். முன்பற்கள் தனித்துவமான
தாக்கத்தை ஏற்படுத்துபவை. பாராளுமன்றம் ஏற்கனவே தன்னுடைய கடைவாய்ப் பற்களை இழந்து
போயிருக்கும் ஒரு நாட்டில் அவை மிகமுக்கியமானவையாக இருக்கின்றன.
அனைத்து வகையான குறியீடுகளும், அறிகுறிகளும் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கின்றன.
நமக்கு முன்னால் தோன்றுகின்ற மயில்கள், வாத்துகளுக்குப் பின்னால் நம்மால் காணப்படாத
கழுதைப்புலிகளும், குள்ளநரிகளும் இருக்கின்றன. அவையனைத்தும் ஒரே செய்தியைத்தான்
நமக்குத் தெரிவிக்கின்றன. நேற்று என்பது காலமாகி விட்டது. ஆசியாவின் பிற பகுதிகளுக்கு
இந்திய ஜனநாயகம் உத்வேகமாக இருந்த காலம் என்ற ஒன்று இருந்தது. இப்போது நிகழ்வுகள்
நடந்து கொண்டிருக்கும் விதம், ஜனநாயகம் சுருங்கி வருவதையும், இந்தியாவிற்கும்
பாகிஸ்தானுக்கும் இடையிலான தூரம் குறைந்து வருவதையுமே காட்டுகிறது. பாப் பாடலாசிரியர்
ஒருவர் சொன்னதைப் போல, ‘நம்மைக் காப்பாற்ற ஏதோவொன்றிற்காக நாம் காத்திருக்கிறோம்’.

https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2020/sep/13/realities-beyond-the-peacock-
moment-2196068.html
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

;