திங்கள், அக்டோபர் 26, 2020

தேசம்

img

இந்தியா கொரோனா உற்பத்தி மையமாகும் அபாயம்.... சமூகப் பரவலை இனியும் மறைக்க வேண்டாம்... மீளும் வழியை யோசிப்போம்...

புதுதில்லி:
கொரோனா தொற்றின் உற்பத்தி மையமாக மாறும் மோசமான நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக ‘ஹார்வர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்’ இயக்குநரும், சுகாதார வல்லுநருமான டாக்டர் ஆஷிஷ் கே ஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘இந்தியா டுடே’ ஏட்டிற்கு, ஆஷிஷ் கே ஜா பேட்டி அளித்துள் ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:“சர்வதேச அளவில் இந்தியா கொரோனா தொற்றின் ஹாட் ஸ்பாட்டாகி வருவது மிகவும் கவலையைஅளிக்கிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கக் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் எனும் நிலையில் கொரோனாபரவுதலை தடுக்க இந்தியா என்னசெய்ய உள்ளது என்பது மிகப் பெரிய கேள்வியாகும்.

தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு மூன்று வழிகள் மட்டுமேஉள்ளன. முதலாவது தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல். அதற்கு தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது, பரிசோதனை நடத்துதல், தொற்றுக்களை கண்டறிதல் மற்றும் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்துதல். மூன்றாவது முகக் கவசம் அணிதல் ஆகும். முகக்கவசம் அணிதல் என்பது மக்கள் அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய நடவடிக்கைஆகும். தற்போது பரிசோதனை எண்ணிக்கையில் நாம் அதிகம் முன்னேறிஉள்ளோம் ஆனால் எங்கு அதிகம் பரிசோதனை தேவைப்படுகிறது என்பதில் கவனம் செலுத்தப்படுவது இல்லை.ஊரடங்கை நாம் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதை விட, எப்படி அதனைத் தவிர்ப்பது என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.இந்த ஊரடங்கை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை என கருதுகிறேன். இதனால் தான் பாதிப்பு அதிகரித்துள்ளது.பரிசோதனைகள் விஷயத்திலும் இதுதான். சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நாடுமுழுவதும் பரவலாக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, பாதிப்பு அதிகமுள்ள இடங்களிலேயே கூட நாம் இன்னும் பரிசோதனையை ஆரம்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியல்வாதிகளை பொறுத்தவரை பரிசோதனைகளின் எண்ணிக் கையைக் குறைத்துக் காட்டவே விரும்புவார்கள். பிரேசில் மற்றும்அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் அப்படித்தான் செய்து வருகின்றனர். பரிசோதனையைக் குறைப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறையாது. கொரோனா பரவுவது குறைந்தால் மட்டுமே நோயாளிகள் எண்ணிக்கை குறையும். இந்தியாவைப் போன்ற ஒரு துணைக் கண்டத்தில் பல நோயாளிகள் சோதனை செய்யப்படாமல் போக வாய்ப்பு உண்டு. அவர்களால் பரவுதல் மேலும் மேலும் அதிகரிக்கக்கூடும்.இவ்வாறு பரவுதல் அதிகரிக்கும் போது இந்தியாவின் பாதிப்பு எண் ணிக்கை அமெரிக்காவை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அந்தநிலையை நோக்கி தற்போது இந் தியா சென்றுக் கொண்டுள்ளது. இதேநிலை நீடித்தால் கொரோனாவின் உற்பத்தி மையமாக இந்தியா மாறலாம். தற்போது இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன்.

ஆனால் 10 முதல் 12 ஆயிரம் பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஏற்கெனவே சமூக பரவல் தொடங்கி விட்டது என்பது அனைவருக்கும் தெரிய வந்தாலும் அதை மறைக்கும் வேலை நடைபெறுகிறது. அதை விடுத்து நாம் எவ்வாறு இதில் இருந்து மீள்வது என்பதைக் குறித்து யோசிக்க வேண்டும்.”இவ்வாறு டாக்டர் ஆஷிஷ் கே ஜா கூறியுள்ளார்

;