புதன், அக்டோபர் 21, 2020

தேசம்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனவரி 8 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை, மிகப்பெரிய அளவிற்கு அரசுத் தரப்பிலிருந்து கைதுகளும் - அடக்குமுறைகளும் இருந்த போதிலும், இந்திய தேசத்தின் தொழிலாளி வர்க்கமும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இதர அனைத்துப் பகுதி ஜனநாயக சக்திகளும் மகத்தான வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து வெற்றிகரமான முறையில் இந்த மாபெரும் கூட்டுப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றன.

மோடி அரசின் கொள்கைகளால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்நிலைமையும் வாழ்வாதாரங்களும் மிகக்கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற தருணத்தில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிற அனைத்து தொழிலாளர் வர்க்கமும் - அவர்கள் ஆலைத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, முறைசாரா தொழிலாளர்களாக இருந்தாலும் சரி இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பாங்கு பாராட்டத்தக்கது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள், போக்குவரத்து, தேயிலை, சணல், எஞ்சினியரிங் துறைகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் எழுச்சிமிக்க முறையில் பங்கேற்றார்கள். அகில இந்திய வேலைநிறுத்தத்தின் புதியதொரு அம்சம் என்னவென்றால், விவசாய துயரத்தின் உச்சக்கட்டத்தை சுட்டிக்காட்டி அரசை எச்சரிக்கும் பொருட்டு, பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றார்கள் என்பதுதான். ஜாமியா, அலிகார், ஜேஎன்யு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள் உள்பட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான கொடூரமான தாக்குதலுக்கு எதிராக களத்தில் சமர்புரிந்து வரும் மாணவர் சமூகம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கப் பங்கினை ஆற்றியுள்ளது. கேரளா முற்றாக ஸ்தம்பித்தது. திரிபுராவில் பாஜக அரசு தாக்குதலை ஏவிய போதிலும், அம்மாநிலம் ஸ்தம்பித்தது. மணிப்பூர் முற்றாக நின்றது. திரிணாமுல் அரசின் அடக்குமுறையை தகர்த்து வங்கமும் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளது. அசாம், பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஒடிசா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் எழுச்சிமிகு வேலைநிறுத்தம் நடந்துள்ளது. மேலும் மேலும் இந்திய மக்கள் ஒன்றுபடட்டும். மோடி அரசின் பாசிசத்தனமான, பிளவுவாத ஆட்சிக்கு இன்னும் கடுமையான சவாலை உருவாக்குவோம்.

;