திங்கள், அக்டோபர் 26, 2020

பேஸ்புக் உலா

img

நாலு பிரெட் குடுங்களேன்

நேற்று ஒரு பேக்கரியில் இருந்து வெளியே வந்தேன். கையில் ஒரு பிரெட் பாக்கெட். பைக் எடுக்கப் போகும்போது அருகில் நின்றிருந்த ஒரு பெண், ‘’புள்ளைங்க பசியோட கிடக்குது. நாலு பிரெட் குடுங்களேன்’’ என்றார். மனம் நடுங்கிப்போனது. பாக்கெட்டை கொடுத்தேன். பதறி மறுத்தார். ‘’நாலு போதும். உங்க பிள்ளைங்களுக்கு குடுங்க..’’ என்றார். கையில் கொடுத்துவிட்டு, இருந்த கொஞ்ச காசை கொடுத்தேன். வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார்.

முகக் கவசம் தாண்டி அவரது விழிகளில் தெரிந்த கையறு நிலை உலுக்கியது. பேக்கரி மூடும் நேரம் என்பதால், இன்னொரு பிரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் பைக் அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் அருகே வந்தார்.

‘’மன்னிச்சிக்கனும். மூணு புள்ளைங்க. வீட்டுக்காரர் இறந்திட்டார். மொத்தம் மூணு வீட்டுல வீட்டு வேலைக்கு போய்க்கிட்டிருந்தேன். எல்லா வீட்டுலயும் நிறுத்திட்டாங்க.. பசங்க பசியும், பட்டினியுமா கிடக்குதுங்க.. வேலைக்கு அனுப்புற அளவுக்கு வயசு இல்லை. வாடகை குடுக்க முடியாம வீட்டை வேற காலி பண்ண சொல்றாங்க.. எதுனா வேலை இருந்தா சொல்ல முடியுமா?” என்றார்.

இந்த நேரத்தில் அவருக்கு எந்த வேலையைச் சொல்வது? ஏதேனும் தெரிந்தால் அழைத்துச் சொல்ல, அவர் கையில் செல்போனும் இல்லை. அதே இடத்துக்கு அவ்வப்போது வருவேன் என்று சொன்னார். இருந்த காசை வற்புறுத்திக் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் கிளம்பினேன்.

இவரைப் போல எத்தனை ஆயிரம், லட்சம் பேர்… இந்த கொரோனா காலத்தில் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்கள். இந்த அரசு இவர்களை அவலமாக கைவிட்டிருக்கிறது. எல்லா நாட்டிலும் கொரோனா இருக்கிறது. இதைப்போல மக்களை கையேந்த விட்ட அரசு எங்கும் இல்லை.

Barathi thambi

;