ஞாயிறு, நவம்பர் 29, 2020

facebook-round

img

"உங்கள் மகளாக இருந்தால் இப்படித் தான் நள்ளிரவில் கொளுத்திச் சாம்பலாக்கி இருப்பீர்களா? -நீதிமன்றம் கேள்வி

"உங்கள் மகளாக இருந்தால் இப்படித் தான் நள்ளிரவில் கொளுத்திச் சாம்பலாக்கி இருப்பீர்களா?" என்று லக்னோ உயர் நீதிமன்றக் கிளை கேட்டபோது மாவட்டக் கலெக்டர் தலையைக் குனிந்து கொண்டு நின்றார்.

" அல்லது அந்தப் பெண் பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்து இருந்தால் குடும்பத்தினர் இல்லாமல் இப்படி பொசுக்கிப் போட்டு விட்டுப் போயிருப்பீர்களா?" என்று கேட்டபோதும் குனிந்த தலையை நிமிர்த்தாமலேயே மாவட்ட ஆட்சியர் நின்று கொண்டு இருந்தார்...

"சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற பயத்தால் கொளுத்தினோம்' என்கிறீர்கள். சமூக விரோதிகளுக்கு பயந்து முக்கியமான தடயமான பிணத்தையே பாதுகாக்க முடியாத உங்களால், உயிரோடு வாழ்பவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? சட்ட விரோதமாக, முக்கிய தடயத்தை அழித்த உங்களை சஸ்பெண்ட் செய்யாமல் ஏன் அரசு போற்றிப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது?" என்று நீதியரசர்கள் கேட்டனர்.

.." எரியூட்டுவதற்கு முன்பு கங்கைத் தண்ணீரால் உடலைக் குளிப்பாட்டுவோம். அதற்கும் எங்களை விடவில்லை. உடல் முழுக்க மஞ்சள் பூசுவதும் எங்கள் வழக்கம். அதற்கும் விடவில்லை" என்று மனீஷா வால்மீகியின் பெற்றோர்கள் கதறினர்.

" உ.பி மாநிலத்தில் வழக்கு நடந்தால் எங்களுக்கு நீதி கிடைக்காது.வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுங்கள். அதுவரை நாங்கள் கொல்லப்பட்டு விடாமல் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிடுங்கள்" என்றும் நிர்பயா வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் சீமா குஷ்வாபா, மனீஷா வால்மீகியின் குடும்பத்தினர் தரப்பில் ஆஜராகி கேட்டுக் கொண்டார்.

குடும்பத்தினரின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டு வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. நீதி மன்றத்திற்கு வெளியே ஏராளமான பெண்கள், 'உ.பி.யில் தலித்துகள் வாழ்வது கேள்விக்குறியாகி உள்ளது"( DALIT LIVES MATTER) என்று வாசகம் எழுதப்பட்ட அட்டைகளைக் கையில் ஏந்தி நின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் அக்டோபர் 15 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

பாலியல் வல்லுறவு வழக்குககளில் முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் வெளியிடக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற அறிவுரையை மீறி இணையத்தில் வெளியிட்டு இருந்த சி.பி.ஐ., இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது தெரிந்த உடன் முதல் தகவல் அறிக்கையை நீக்கி விட்டது.

இது பற்றி செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்ற மலையாளப் பத்திரிகையாளர் சித்திக், மதுராவில் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் யோகி அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் அவரை ஜாமீனில் விடுவிக்க கபில்சிபல் மூலம் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

" UAPA சட்டத்தின் கீழ் பீமா கோரகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சிந்தனையாளர்களுக்கு நீதிமன்றம் பல ஆண்டுகளாக ஜாமீன் தர மறுக்கிறது. பத்திரிகையாளர் சித்திக் எவ்வளவு காலம் சிறையில் வாட வேண்டி வருமோ தெரியாது" என்கிறார் கபில்சிபல்.

" பிணத்தையே பாதுகாக்க முடியாத உங்களால் உயிருள்ள மனிதர்களை எவ்வாறு காப்பாற்றவோ பாதுகாக்கவோ முடியும்?" என்று நீதிமன்றம் கேட்ட கேள்வியை செய்தி சானல்கள் முதன்மைச் செய்தியாக்கி உள்ளன.

Gnanabharathi Chinnasamy 

;