வியாழன், அக்டோபர் 22, 2020

பேஸ்புக் உலா

img

மார்க்ஸ் மீது அவதூறு: மன்னிப்பு கேட்க வேண்டும் குருமூர்த்தி - அருணன்

துக்ளக் பத்திரிகை "அறிவாளிகளின் பத்திரிகை" என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நற்சான்றிதழ் கொடுத்தார். ஆனால் அது பொய்யர்களின் பத்திரிகை என்பது தொடர்ந்து
நிரூபணமாகிறது. தற்போதய உதாரணம், பெண்களையும் பொதுவுடமையாக்க வேண்டும்
என்று கார்ல் மார்க்ஸ் கூறினார் என்று அதன் ஆசிரியர் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி அதில்
(5-8-2020) எழுதியிருப்பது.

இதற்கு மார்க்சின் மெய்யான மேற்கோள் எதையும் அவர் ஆதாரமாகக் கொடுக்கவில்லை.
புனைசுருட்டுக்கு எப்படி ஆதாரம் கொடுக்க முடியும்? ஏற்கெனவே ஒரு முறை இது போல
அவர் எழுதியபோதே நான் பதிலடி கொடுத்திருக்கிறேன். எனினும் வெட்கமில்லாமல்
மீண்டும் அந்தப் பொய்யை வாந்தி எடுத்திருக்கிறார். இந்த அவதூறுகூட புதிய கண்டுபிடிப்பு அல்ல.
மார்க்ஸ் காலத்திலேயே சொல்லப்பட்டதுதான். இதற்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸே
பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

1848ல் அவர்கள் எழுதிய உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்டு அறிக்கையில் அது உள்ளது.
இதோ அந்தப் பகுதி: "கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள், பெண்களைப் பொதுவுடமை ஆக்கி
விடுவீர்கள் என்று முதலாளிகள் கோரசாக கத்துகிறார்கள். ஒரு முதலாளி தனது மனைவியை
வெறும் ஓர் உற்பத்தி கருவியாகவே பார்க்கிறார். எனவே, உற்பத்தி கருவிகள் பொதுவுடமை
ஆக்கப்படும் என்றவுடன் பெண்களும் அப்படி ஆக்கப்படுவார்கள் என்று முடிவு
கட்டுகிறார். வெறும் உற்பத்தி கருவி எனும் பெண்களின் தற்போதய நிலையை அகற்றுவதே
நோக்கம் என்று அவர் நினைப்பதில்லை....தற்போதைய உற்பத்தி முறைமை ஒழிக்கப்படும்
போது அதிலிருந்து உருவாகியுள்ள பொது மற்றும் தனி விபச்சாரம் போன்ற பெண்கள்
பொதுவுடமை என்பதும் ஒழிக்கப்படும்".

விஷயம் குருமூர்த்தியின் குற்றச்சாட்டுக்கு நேர் விரோதமாக இருப்பதைக் கவனியுங்கள்.
பெண்களை பொதுவுடமையாக்கி வைத்திருப்பது முதலாளித்துவ சமுதாயம்தான். அதில்
தான் விபச்சாரம் சர்வசாதாரணமானது. பல முதலாளித்துவ நாடுகளில் விபச்சாரம் சட்ட
பூர்வமானது. பொதுவுடமை சமுதாயமோ அதிலிருந்து பெண்களை விடுதலை செய்கிறது,
அவர்களை ஆண்களுக்கு சமமான நிலையில் இருத்துகிறது, அவர்களை இயந்திரங்களா
கக் கருதாமல் மனித உயிர்களாக பாவிக்கிறது. இப்படிச் சொன்ன மார்க்ஸ் மீது கூச்சமின்றி
பொய்க் குற்றைச்சாட்டை சுமத்திய குருமூர்த்திக்கு மனசாட்சி என்று ஏதேனும் இருந்தால்
மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவர் ஒரு மனுவாதி. மனசாட்சியை அடகு வைப்பவர்தானே
மனுவாதி ஆகிறார்!

-Ramalingam Kathiresan

;