facebook-round

img

மநுதர்மம் பூணூல் சடங்கில் உள்ளது! - அருணன்

"மீண்டும் மநுநீதி ஆட்சி மலர வேண்டும்" எனும் தனது ஆசையை வெளிப்படுத்தியி ருக்கிறார் சங் பரிவாரத்தைச் சார்ந்த அர்ஜுன் சம்பத். ஆர்எஸ்எஸ்சின் இறுதி இலக்கு இதுதான். 1949இல் குடியரசு அரசியல்சாசனம் உருவான காலத்திலேயே அது மநுசாஸ்திரத்தை கணக்கில் கொள்ளவில்லையே என மெத்த வருத்தப்பட்ட அமைப்பு அது.

"இந்துராஷ்டிரம்" என்ற பெயரில் மநுராஷ்டிரத்தை அமைக்கவே அது பாஜக மூலம் முயன்று வருகிறது. இதைத்தான் அர்ஜுன் சம்பத் வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் அவர் நேர்மையானவர்.

ஆனால் அந்த மநுநீதியானது அவர் உள்ளிட்ட சூத்திர, பஞ்சம இந்துக்களுக்கு எதிரானது, அவர்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டது என்பதை அவர் அறிய வேண்டும். மீண்டும் மநுநீதி ஆட்சி என்பது எஸ்சி, எஸ்டி, பிசி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களைப் பழைய காலம் போல உயர்சாதியினரின் கொத்தடிமைகளாக ஆக்கும் சதி வேலை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டில் கைவைத்து இவர்களின் கல்வியையும் வேலைவாய்ப்பையும் பறித்து வருகிறார்கள்.

இந்தக் கொடூரத்தின் மூல வித்து மநுவில் உள்ளது. அது வருணத்திற்கொரு நீதியை, அதாவது சாதிக்கொரு நீதியை சட்டமாக வகுத்துள்ளது. அதன்படி உயர்குலத்தோருக்கே சகல செல்வங்களும் உரிமைகளும் உண்டு; சூத்திரர்கள், பஞ்சமர்கள் இவர்களின் கொத்தடிமைகளே. பெரும் சமஸ்கிருதப் பண்டிதராகிய மன்மத் நாத் தத், மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் பெயர்த்துள்ள The Dharma Shastra- Hindu Religious Codes எனும் நூலிலிருந்து மநு சொன்னதை இங்கே எடுத்துக்காட்டுகிறேன்.

"பிராமணனாகப் பிறந்ததன் காரணமாக அவன் உலகில் உயர்ந்தோனாக, அனைத்து உயிர்களுக்கும் அதிபதியாக, தர்ம பொக்கிஷத்தின் பாதுகாவலனாக விளங்குகிறான்" (1-99) என்கிறார். பிறப்பின் காரணமாகவே பிராமணர்கள் உயர்ந்தவர்கள், ஆகவே அவர்களே இதரர்களுக்கு எல்லாம் யஜமானர்கள்! அறிவினாலோ பண்பினாலோ

அல்ல, பிறப்பினால்! நமது பெற்றோர் காலத்தில்கூட பிராமணர்களைக் கண்டால் "சாமி" என்றுதான் அழைப்பார்கள். கடவுளுக்கு இணையாக பிராமணர்கள் கருதப்பட்டார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த சட்டவிதிதான்.

"கஷ்டமான காலத்தில்கூட ஒரு பிராமணனோ அல்லது ஒரு ஷத்திரியனோ (சட்டபூர்வமாக) ஒரு சூத்திரப் பெண்ணை மணந்ததாக வரலாறு இல்லை. ஆசை எனும் போதை வசப்பட்டு ஒரு தாழ்ந்த வருணத்துப் பெண்ணை மணக்கும் ஓர் உயர் வருணத்தவன் தன்னையும் தனது ஒன்பது தலைமுறைப் பரம்பரையையும் ஒரு சூத்திரனாகத் தரம் தாழ்த்திக் கொள்கிறான்"(3-14,15) என்கிறார் மநு. இதில் சூத்திரர்கள் எவ்வளவு இழிவாக நோக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காண்க. உயர் வருணத்தவர் சூத்திரப் பெண்ணை மணக்கக் கூடாது என்றவர் சூத்திரர்கள் உயர்வருணத்துப் பெண்ணை மணக்க சம்மதிப்பாரோ? அதைக் கொடும் குற்றம் எனச்சொல்லி கடும் தண்டனை நிச்சயித்தார். இதோ அது: "ஓர் உயர் வருணப் பெண்ணோடு உடலுறவு கொண்ட சூத்திரனின் ஆண்குறியைச் சிதைத்துவிட வேண்டும், அவனது பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றிவிட வேண்டும்"(8-374) மநு எத்தகைய

கொடூர சித்தம் கொண்டவர் என்பது இதிலிருந்து விளங்கும். இன்றும் சாதி மறுப்பு திருமணங்கள் எதிர்க்கப்படுகின்றன என்றால், சாதி ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன என்றால் அதற்கான சாஸ்திர நியாயம் இந்த மகானுபாவரிடம் இருக்கிறது!

"இந்த மூன்று உயர் வருணத்தவருக்கும் பூணூல் போட்டு உபநயனம் செய்யவில்லை என்றால் அவர்கள் விரதம் முறித்தவர்களாகி விடுகிறார்கள். ஆரியர் சமூகத்திலிருந்து தரம் தாழ்த்தப்படுவார்கள்" (2-39) என்கிறார் மநு. பூணூல் போடாவிட்டால் பிராமணர், ஷத்திரியர், வைசியர் எனும் முதல் மூன்று உயர் வருணத்தவர்கள் ஆரியர்கள் ஆக மாட்டார்கள் என்கிறார். ஆக ஆரியர்கள் என்போர்தாம் இந்த வர்ணாசிரம அமைப்பை உருவாக்கி தங்களை மட்டும் உயர்ந்த பீடத்தில் இருத்திக் கொண்டவர்கள் என்பது நிச்சயமாகிறது. அதனால் சூத்திரர்கள் ஆரியரல்லாதார் என்பதும் தெளிவாகிறது. சூத்திரர்கள் ஏன் சகலவிதத்திலும் ஒடுக்கப்பட்டார்கள் என்பதும் புரிந்து போகிறது.

"ஆரியர்களின் விருதுச் சின்னங்களைப் பயன்படுத்தும் ஆரியரல்லாதார் திருடர்கள்" (9-258-260) என்கிறார் இன்னொரு இடத்தில். "ஆசை காரணமாக ஆரியரல்லாத பெண்கள் மூலம் பிராமணர்கள் பெற்ற புதல்வர்கள்"(10-66) பற்றி பிறிதொரு இடத்தில் பேசுகிறார். பிராமணர்கள் தங்களை ஆரியர்களாகக் கருதியது உறுதியாகிறது. ஆக, ஆரியர்கள், ஆரியரல்லாதார் என்று பேதம் பிரித்து சட்டப் புத்தகம் எழுதினார் மநு என்பது தெளிவாகிறது.

"மநுதர்மம் எங்கு உள்ளது?" என்று கேட்டிருக்கிறார் பாஜக தலைவர் எல். முருகன். அது இப்போதும் பூணூல் அணியும் சடங்கில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பூணூல் போடுகிறார்கள் என்றால் அது மநு நீதியின்படி தான். அந்தப்படியாக அவர்கள் தங்களை பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்கிறார்கள், மற்றவர்களைத் தாழ்வாகக் கருதுகிறார்கள். அன்று பஞ்சமர்களை சூத்திரர்களை; இன்று எஸ்சியினரை பிசியினரை. சூத்திரர்களை ஆரியரல்லாதார் என்று சொல்லி இழிவாக நோக்கிய மனு பஞ்சமர்களை மனிதர்களாகவே பாவிக்கவில்லை. அன்று சண்டாளர்கள் எனப்பட்ட அவர்களை என்ன சொல்லியிருக்கிறார் என்பதைக் கேளுங்கள்: "ஒரு சண்டாளனை , வீட்டு விலக்காயுள்ள பெண்ணை , சாதிவிலக்கு செய்யப்பட்ட ஒருவனை, (சமீபத்தில்) பிரசவமாகியுள்ள ஒரு பெண்ணை, ஒரு பிரேதத்தை, ஒரு பிரேதத்தை தொட்ட ஒருவனை யதேச்சையாகத் தொட

நேர்ந்து விட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனது பரிசுத்தத்தைப் பெறுவான்". (5-85) சண்டாளர்களை பிரேதங்களுக்குச் சமம் என்கிறார். அவர்களைத் தொட்டாலே தீட்டு என்கிறார். இப்படித்தான் பட்டியல் சாதியினர் மீது இன்றும் நடத்தப்படும் தீண்டாமைக் குற்றங்களுக்கு அச்சாரம் போடப்பட்டது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுபெண்களையும் அனுமதிக்கக் கூடாது என்று சங்கிகள் அடம் பிடிக்கும் காரணமும் மநு

சாஸ்திரத்தில்தான் உள்ளது. அது மாத விலக்கான பெண்களையும் பிணங்களாத்தான் பாவிக்கிறது!

இந்த கேடுகெட்ட மநுவின் ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என்று சங்கிகள் ஆசைப்படுகிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய மனிதகுல விரோதிகள் என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் நடத்த விரும்பும் மநுராஷ்டிரத்தில் பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பாரும், அனைத்து மாதரும் இரண்டாந்தரக் குடிமக்களாகிப் போவார்கள்; உயர்சாதியிரின், ஆணாதிக்கவாதிகளின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்; ஜனநாயகக் குடியரசு போய் மநுவாத பாசிச பேயாட்சி வரும். இதை அறிவும் மானமும் உள்ள எவரும் ஏற்க மாட்டார்கள்.

Ramalingam Kathiresan

 

;