india

img

படேல் சிலை கட்டண வசூலில் ஊழல்... தனியார் ஏஜென்சி ரூ. 5.24 கோடியை சுருட்டியது...

அகமதாபாத்;
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட படேல் சிலைக் கான பார்வையாளர் கட்டண வசூலில், சுமார் 5 கோடியே 24 லட்சம் ஊழல் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில், நர்மதை ஆற்றின் குறுக்கே சுமார் 182 மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டது. 2 ஆயிரத்து 989 கோடி ரூபாயைக் கொட்டி இந்த சிலையை நிறுவிய பிரதமர் மோடி. அதனை 2018 அக்டோபர் 31 அன்று, தானே முன்னின்று திறந்து வைத்தார்.

உலகின் மிக உயரமான சிலையாக கூறப்படும் நிலையில், இந்த சிலையைப் பார்க்க, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேர் வரும் நிலையில், அவர்களிடம் பார்வையாளர் கட்டணமாக மட்டும் பல லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வரும் வருவாயை வசூலிக்கவும், வதோதராவிலுள்ள தனியார் வங்கியில்டெபாசிட் செய்வதற்கும் தனியார் ஏஜென்சி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், கடந்த 2018 நவம்பர் 1 முதல் 2020 மார்ச் வரை வசூலான பார்வையாளர் கட்டணத் தொகைக்கும் தனியார் ஏஜென்சி, வங்கியில் டெபாசிட் தொகைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.முதற்கட்டமாக சுமார் 5 கோடியே 24 லட்சத்து 77 ஆயிரத்து 375 ரூபாய் அளவிற்கு ஊழல் முறைகேடு கண்டறியப்பட் டுள்ளது. படேல் சிலை பராமரிப்பு நிர்வாகத்தில் நடந்துள்ள இந்த ஊழல் குஜராத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், படேல் சிலை பராமரிப்பு நிர்வாகம், தங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளது. இது பணம் டெபாசிட் செய்யப்படும் தனியார் வங்கிக்கும், பணத்தை வசூல் செய்யும் தனியார் ஏஜென்சிக்கும் இடையிலானது என்று கூறி ஒதுங்கிக் கொண்டுள்ளது. தற்போது வங்கிக் கணக்கில் 5.24 கோடிவரவு வைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.ஆனால், வங்கி அதிகாரி அளித்த புகாரின் பேரில், தனியார் ஏஜென்சியின் அடையாளம் தெரியாத ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 [மோசடி], 406 [நம்பிக்கை மோசடி] மற்றும் 120-பி [குற்றவியல் சதி] ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

;