states

img

டிச.5ல் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகளை எரிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல்

விவசாயிகள், டிசம்பர் 5 (சனிக்கிழமை) அன்று, அனைத்துக் கிராமங்களிலும், நரேந்திர மோடி அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் ஜாம்பவான்கள் அம்பானி, அதானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்கும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்னும் ஒருங்கிணைந்த விவசாயிகளின் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

டிசம்பர் 2 (புதன்கிழமை) மாலை அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் பணிக்குழு, பஞ்சாப் கிசான் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம் மற்றும் பாரதிய கிசான் யூனியனின் பல்வேறு குழுக்கள் சார்பில் தில்லி, சிங்கூ எல்லையில் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘தில்லி செல்வோம்’ என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தையும், நாடு முழுவதும் நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களையும்,  ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் பேரணி/ஆர்ப்பாட்டம்) என்னும் பதாகையின்கீழ் தீவிரப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்துள்ள இப்போராட்டத்தில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  

கிசான் சங்கங்களின் கூட்டுத்தலைமையைப் பிளவுபடுத்திடவும், இவ்வாறு வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை நசுக்குவதற்காக மக்கள் மத்தியில் தவறானவழியில் திசைதிருப்பும் வேலையிலும் மோடி அரசாங்கம் அடாவடித்தனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

1. கார்ப்பரேட் ஆதரவு 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார சட்டமுன்வடிவு இரண்டையும் ரத்து செய்திடும் கோரிக்கையில் பேச்சுசவார்த்தைக்கே இடமில்லை என்று ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ சார்பில் அரசாங்கத்திற்கு எழுத்துபூர்வமாக ஒரு கடிதம் கொடுக்கப்படும். அந்தக் கடிதத்தை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக்கொண்டு, போராட்டத்தைத் தீர்த்துவைக்க வேண்டும்.

2. மேற்படி சட்டங்கள் மீதான ஆழமான விமர்சனங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றின் மீது ஒவ்வொரு பிரிவின் மீதும் தனித்தனியே விவாதம் அனுமதித்திடக் கூடாது.

3. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்து வதற்காக, நாடு முழுதும் உள்ள விவசாயிகள், அனைத்துக் கிராமங்களிலும் டிசம்பர் 5 அன்று  நரேந்திர மோடி அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் ஜாம்பவான்கள் அம்பானி, அதானி ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, இப்போராட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டமாக வளர்தெடுக்கப்படும்.

4. நாடு முழுதும் நடந்துவரும் இப்போராட்டத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட சமூகத்தின் இதர பிரிவினரையும் இணைத்துக்கொள்ளப்படுவது தீவிரமாக்கப்பட வேண்டும்.

அகில இந்திய விவசாய சங்கத்தின் அனைத்துப்பிரிவுகளும் இந்த முடிவுகளை வலுவானமுறையில் அமல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

(ந.நி.)

 

 

;