states

img

புதிய வேளாண் சட்டங்கள் : தில்லி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மோடிக்குக் கடிதம்

புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையே ஏதெனும் தாவா உருவானால் அதனைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் கீழ் இயங்கிடும் நீதிமன்றங்களிலிருந்து கழற்றிக்கொண்டு, மாநிலங்களில் வருவாய்த்துறைகளின் கீழ் இயங்கும் அலுவலர்களிடம் மாற்றியிருப்பதால் வழக்குரைஞர்களின் பிழைப்புக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.  

வழக்கறிஞர்கள் சங்கத்தின் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வருவாய்த்துறை என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒன்றாகும். புதிய வேளாண் சட்டங்களின்படி  மாநிலங்களில் உள்ள சிவில் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பெல்லைகளும், சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தின் அதிகாரவரம்பெல்லைகளும்கூட பாதிப்புக்கு உள்ளாகும்.

இதுநாள் வரையிலும் விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை அவர்கள் தங்கள் மாநிலங்களில் இயங்கிடும் சிவில் நீதிமன்றங்களின் முன் வழக்கு தொடுத்துத் தீர்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் இனி அவ்வாறு செய்யமுடியாது. விவசாயிகள் தங்கள் மாநிலங்களில் வருவாய்த்துறையின் கீழ் இயங்கிடும் சமரசநீதிமன்றம் (conciliation court) போன்ற நீதிமன்றங்களில்தான் முறையிட்டுத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தீர்ப்பு அளிக்கும் நீதிமன்றங்கள் அரசாங்கங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிடுகின்றன.

வருவாய்த்துறையின் கீழ் இயங்கிடும் மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் எப்போதும் ஆட்சியில் உள்ளவர்களின் சொல்படிதான் நடந்துகொள்ளக் கடமைப்பட்டவர்கள். இது, நீதித்துறை இதுவரையிலும் கடைப்பிடித்துவந்த நீதித்துறை சுதந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு எதிரானது.

இவ்வாறு, விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே ஏற்படும் தாவாக்களைத் தீர்த்து வைக்கும் பொறுப்பை, இதுவரையிலும் இருந்துவந்த, நீதிமன்றத்தின் அதிகாரவரம்பெல்லையை, ஒழித்துக் கட்டிவிட்டு, அதிகாரங்களை வருவாய்த்துறை அதிகாரிகளின் கைகளில் ஒப்படைத் திருப்பதன் பின்னேயுள்ள மனோபாவம், ஊழலுக்கும் வழிவகுத்திடும்.

இந்தச்சட்டங்களின் மூலம் நீதி வழங்கும் அமைப்புமுறையை அரசாங்கம் தன் கட்டைவிரலின் அசைவுக்கேற்ப மாற்ற விரும்பி யிருப்பதாகவே தெரிகிறது.

இவ்வாறு வழக்கறிஞர்கள் சங்கத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

(ந.நி.)

 

 

;