states

img

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து நாடு முழுதும் சாலை போராட்டங்கள்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து நாடு முழுதும் அனைத்த மாநிலங்களிலும் சாலை மறியல் மற்றும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.

அகில இந்திய விவசாயிகள் சங்கம், சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் சார்பிலும் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் காலையிலிருந்தே சாலை மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இதில் பொது மக்களும் பெருவாரியாகக் கலந்துகொண்டனர். இத்துடன் பல மாநிலங்களில் போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்கள் தினத்தை நினைவுகூர்ந்தும், பாஜக அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்படும் கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன.

கேரளாவில் மாநிலம் முழுதும் டிசம்பர் 2 அன்று இரவு தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடந்தது. இதில் மாநிலம் முழுதும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்தும் மக்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் 200 மையங்களுக்கும் மேலே பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்புடன் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கிசான் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, ஆயிரமாயிமாய் மக்கள் அணிதிரண்டனர். சாலைகள் முடக்கப்பட்டன.  தெலங்கானா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன. தெலங்கானா விவசாயிகள் சங்க செயலாளர் டி.சாகர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டார்கள். ஆந்திராவில் 150 மையங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. இங்கும் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் 21 மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ராஜஸ்தானில் 25 மாவட்டங்களிலும் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் போராட்டங்களில் கலந்துகொண்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் பல இடங்களிலும், ஒடிசாவில் 14 மாவட்டங்களில் 50 மையங்களிலும் போராட்டங்கள் நடந்தன. ஒடிசாவில் பல இடங்களிலும் போலீசார் தடியடிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் போலீசார் மத்திய கிசான் குழு உறுப்பினரான அசோக் திவாரியைக் கைது செய்து இழுத்துச்சென்றுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்தியப் பிரதேசத்திலிருந்து தில்லி நோக்கி வந்த சுமார் 100 வாகனங்கள் பல்வால் என்னுமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

சட்டீஸ்கார் மாநிலத்தில் 20 மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன. பீகாரில் மாநிலம் முழுவதும் அனைத்துத்தரப்பினரும் ஒன்றுபட்டு போராட்டங்களை நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களிலும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. குஜராத்திலும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. மேற்கு வங்கம், கர்நாடகம் மற்றும் சில மாநிலங்களில் தொடர் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தில்லி எல்லைப் பகுதியில் ஒருமைப்பாட்டு இயக்கங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு, போராடும் விவசாயிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பல மாநிலங்களும் 5ஆம் தேதி முதல் போராட்டத்தை மேலும் தீவிரமாக எழுச்சியுடன் நடத்திடவும், இதனை 10ஆம்  தேதி வரைக்கும் தொடர்வதற்கும் திட்டமிட்டுள்ளன. 5ஆம் தேதி அன்று நரேந்திர மோடி அமித் ஷா, அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் கொடும்பாவிகளை நாடு முழுதும் அனைத்துக் கிராமங்களிலும் எரித்திட திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தர்ணாக்கள், பேரணிகள், மற்றும் பல்வேறு வடிவங்களில் கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.    

இப்போராட்டங்களில் இதர வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களையும் இணைத்துக்கொண்டு மிகவும் விரிவான அளவில் இயக்கங்கள் நடத்திட வேண்டும் என்று தன்னுடைய அனைத்துக் கிளைகளுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா அறைகூவல் விடுத்துள்ளார்கள்.

 

;