tamilnadu

img

கொரோனாவும் ரேசன் கடைகளும் நடப்பும் உண்மையும் என்ன?

கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து ரேசன்  கடைகளில் பொருட்கள் தாராளமாக, தரமாக கிடைக்குமென்று ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் முதலமைச்சர் தொடங்கி, மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் வரை வாக்குறுதி அளித்தனர்.தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டம்ஏழை-எளிய உழைப்பாளி மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், வறட்சி காலத்தில் விவசாயிகள் பயன்பெற வேண்டும். மக்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும். கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் தொடர வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்மட்டுமல்ல. உழைப்பாளி மக்களின் கோரிக்கையும் அதுதான்.ஆனால், பொதுவிநியோக முறை தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது. “முறைகேடு” என்ற அக்மார்க்முத்திரையால் அந்தத்துறை அமைச்சரி லிருந்து கடை நிலையிலுள்ள ரேசன் கடை ஊழியர்கள் வரை அவப்பெயருக்கு உள்ளாக வேண்டியுள்ளது. 

இதோ ஓர் ஆய்வு
கொரோனா காலத்தில் ரேசன் கடைகளில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு நடத்திய களஆய்வு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.ஏப்ரல் 2020-இல் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதார்களுக்கு நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அதே போன்று மத்திய அரசின் சார்பிலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. குடும்ப அட்டைதார்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான 5.34லட்சம் டன் அரிசி இந்திய உணவுக் கழகம் சார்பில்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கூறியுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அதில் நம்பிக்கை ஏற்படுவதுபோல் தோன்றும்.ஆனால் அமலாக்கம் குறித்து நேரடிக் கள ஆய்வு, மக்களைச்  சந்தித்து விபரங்களை சேகரித்தபோது அரசு மீதுள்ள நம்பிக்கை சீட்டுக் கட்டுகளைப் போல சடசடவென சரிந்து விழுந்துவிட்டன.

பிரமையும் யதார்த்தமும்
பொதுவாக தமிழகத்தில் பொதுவிநியோக முறை சிறப்பாக செயல்படுவதாக ஒரு கருத்துஉருவாக்கிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் அது ஒரு பிரமை என்பது புலனாகிறது. குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களைமாதத்தில் எந்தவொரு நாளிலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது.அத்தியாவசியப் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவது மட்டுமல்ல, உப்பு,தேயிலை, சோப்பு உள்ளிட்ட பொருட்களை கட்டாயம் வாங்கவேண்டுமென மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.“எடை குறைவு” குறித்து கேட்டால்கிட்டங்கியில் இருந்து வரும் போதே மூட்டைக்குஐந்து கிலோ  குறைவாக வருவதாகக் கூறு கிறார்கள் ஊழியர்கள்.ரேசன் கடைகளை ஆய்வு செய்ய 36 துறைசார்ந்த அதிகாரிகள் இருப்பதாகக்  கூறப்படுகிறது. இவர்களோ மாதம் தோறும் ஆய்வு நடத்த வேண்டுமென்ற கட்டாயத்தில் ஆய்வு நடத்திஸ்டாக் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சோதனை நடத்தி, கடத்தப்படவிருந்த ரேசன் அரிசி சிக்கியது, மண்ணெண்ணெய் சிக்கியது, பாமாயில் சிக்கியது என்ற பரபரப்பு செய்திகளை பத்திரிகைகளுக்கு கொடுக்கின்றனர். அத்தோடு சரி... செய்தியும் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடுகிறது.

மதுரை திருநகர் பகுதியில் உள்ள ஒரு ரேசன் கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் முன்னிலையில் ரேசன் கடை ஊழியர்கள், முழுமையாக உள்ள ஆறு அரிசி மூடைகளை  எடை போட்டுள்ளனர்.  ஒவ்வொரு மூடையிலும் சராசரியாக ஐந்து கிலோ அரிசி குறைவாக இருந்துள்ளது. ஒவ்வொரு மூடையிலும் சரியாக ஐந்து கிலோ குறைந்துள்ளது. இது நடந்தது உணவுக் கிடங்கிலா? லாரியில் அரிசி கொண்டு வரும் பொழுதா? ரேசன் கடையிலா? என்பது யாரும்கண்டறிய முடியாத ரகசியமாகவே உள்ளது.

தரமற்ற அரிசி, எடைகுறைவு ஆகியவற்றிற்கு நாங்கள் காரணம் இல்லை. அரிசி கொள்முதல் செய்யும் இடத்திலே தவறு நடக்கிறது. ஆனால் மக்கள் எங்களிடம் சண்டை போடுகின்றனர் என்கின்றனர் ஊழியர்கள். அனைத்து ரேசன் கடைகளுக்கும் 100சதவீத பொருட்களை மாவட்ட நிர்வாகங் களும், உணவு வழங்கல் துறையும் சப்ளை செய்கிறதா? அல்லது குறிப்பிட்ட சதவீதம் குறைத்தே வழங்குகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.உணவுப்பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்களை முழுமையாக வழங்கினால் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் நிச்சயமாக வழங்குவோம் என்கின்றனர் விபரமறிந்த ஊழியர்கள்.

ஒப்புக்கொள்ளும் அதிகாரிகள்
வாடிப்பட்டி பகுதியில் நடத்தப்பட்ட களஆய்வைத் தொடர்ந்து, எடை குறைவு, குறைவான ஒதுக்கீடு குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, “உண்மை”தான் என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டனர்.

குறுஞ்செய்தியிலேயே ஊழல்
குடும்ப அட்டைதாரர் தனக்குரிய பொருளைவாங்கியவுடன் அவரது கைபேசிக்கு (செல்லுக்கு) ரேசன் கடையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஆனால் வாங்கிய பொருட்களின் எடைக்கும் குறுஞ்செய்தியில் உள்ள தகவலுக்கும் “பெரும் வித்தியாசம்” உள்ளது.அவனியாபுரத்தில் உள்ள ஒரு கடையில் குறுஞ்செய்தி தகவல் குறித்து சிபிஎம் பகுதிக்குழு செயலாளர் சேதுராமன் உள்ளிட்ட கட்சி யினர் தலையிட்ட பிறகு  குறுஞ்செய்தி அடிப்படையில் மற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சு.வெங்கடேசன் எம்.பி. புகார்
மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள 12 ரேசன்கடைகளில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து தாம் நேரில் கண்டதை, மக்கள்கூறியதை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் புகாராகவே அறிவித்துள்ளார். அந்தப் புகாரில், “பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. ரேசன் கடைகளில் முறையாக பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை’’ என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளார்.கடந்த 60 நாட்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பொருட்கள் முறையாக வழங்கப் பட்டுள்ளனவா என்ற விவரத்தை கடை வாரியாக வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு நிர்வாகம் வெளியிட வேண்டும்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர்காமராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ரேசன் கடை முறைகேடு குறித்து உரிய பதிலளிக்க கடமைப்பட்டவர்கள்.இங்கு கூறப்பட்டுள்ள விஷயங்கள் மதுரைநகர், மாவட்ட ரேசன் கடைகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் பொருந்தக்கூடியதே.

நமது சிறப்பு நிருபர்
 

;